சக்தி சிதம்பரம் மீது ஃபைனான்சியர் மோசடி புகார்!
சென்னை : இயக்குநர் சக்தி சிதம்பரம் மீது சினிமா ஃபைனான்சியர் ஒருவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் மோசடி புகார் கொடுத்துள்ளார். சக்தி சிதம்பரம் தன்னை மிரட்டுவதாகவும் புகாரில் கூறியுள்ளார் அந்த ஃபைனான்சியர்.
சத்யராஜ் நடித்த 'கோவை பிரதர்ஸ்', 'மகா நடிகன்', 'இங்கிலீஸ்காரன்' ஆகிய படங்கள் உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் டைரக்டர் சக்தி சிதம்பரம். பிரபு மற்றும் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'சார்லி சாப்ளின்' இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார்.
'சார்லி சாப்ளின்' இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடிக்கிறார். நடிகை அடா ஷர்மா நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சக்தி சிதம்பரம் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.
சக்தி சிதம்பரம் இயக்கிய 'ஜெயிக்கிற குதிர' படம் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் சினிமா ஃபைனான்சியர் பியாரிலால் ஜெயின், சக்தி சிதம்பரம் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
பியாரிலால் அளித்துள்ள புகார் மனுவில், 'ஜெயிக்கிற குதிர' படத்தை நான்தான் முதலில் தயாரித்தேன். இதற்காக 47 லட்சம் செலவு செய்தேன். பிறகு படத்தின் தயாரிப்பு உரிமத்தை சக்தி சிதம்பரம் பெற்றுக் கொண்டு எனது பணத்தை திருப்பித் தருவதாக கூறி 10 லட்சம் தந்தார்.
தனக்குத் தரவேண்டிய மீதி பணத்தைத் தராமல் ஏமாற்றி வருவதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டால், குடும்பத்துடன் ராஜஸ்தானுக்கு ஓடிவிடு என மிரட்டுவதாகவும் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக விசாரித்த போலீஸார், தயாரிப்பாளர் சங்கத்தில் பேசித் தீர்த்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.