For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இதெல்லாம் ஒரு கதையா? என கிண்டலடிக்கப்பட்ட ஸ்க்ரிப்ட், வெள்ளிவிழா கண்ட அதிசயம்!

  By Shankar
  |

  சினிமா ஒரு சூதாட்டம் மாதிரி! என்று சொல்லக்கேட்டிருக்கலாம்... சரியான வார்த்தைகளில் சொல்வதானால் சினிமா ஒரு பரமபத விளையாட்டு!!

  இங்கே எந்த நேரத்தில் யார் உயரத்தில் இருப்பார், யார்அதல பாதாளத்தில் விழுகிறார் என்பதே தெரியாது. முதல் வாய்ப்புக் கிடைக்க திறமையோடு கொஞ்சம் அதிர்டமும் தேவை.அதில் வென்றுவிட்டால் அடுத்து உங்களைத் தக்க வைத்துக்கொள்ள நாள் முழுக்க போராடிக்கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் நமக்குப் பின்னாடி ஓடிவரும் ஆட்கள் ஏறி மிதித்து விட்டுப் போய்க்கிட்டே இருப்பார்கள்.

  கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நடக்கும் பரமபத விளையாட்டுக்கு நானும் நேரடி சாட்சி என்பதற்காகத்தான் இந்தக் காலக்கெடு! அதற்கு முன்பும் இப்படித்தான் என்பதற்கு ஏகப்பட்ட சாட்சியம் உண்டு.

  இந்த விளையாட்டில் ஒரு வெற்றி கொடுத்தவுடன் தான்தான் ஒட்டுமொத்த சினிமாவுக்கும் அத்தாரிட்டி என்பதுபோல் நடந்து கொள்கிற ஆட்கள் சிலர் உண்டு. முதல் படம் இயக்குபவர்களுக்கும் வாய்ப்புத் தேடி ஸ்லிப்பர் செப்பல் தேய நடையாய் நடந்து கொண்டிருக்கும் உதவி இயக்குநர்களுக்கும் இந்த ஆட்கள் கொடுக்கிற டார்ச்சர் எஸ் பி ஐ பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிற டார்ச்சரைவிட சற்று அதிகம்!

  1996 ல் ஒரு பட நிறுவனம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. பல உதவி இயக்குநர்களும் அதிகாலை முதல் பின்னிரவு வரை அந்த அலுவலக வாசலில் திருப்பதி தரிசனத்துக்கு காத்திருப்பதுபோல் வரிசைகட்டி நிற்பார்கள். எப்போ கதவு திறக்கும் என்று எவருக்கும் தெரியாது!

  அந்த நிறுவனம் தயாரித்து வெளிவந்த படங்கள் அத்தனையும் ஹிட்! அந்த நிறுவனத்தில் படம் பண்ணினால் வெற்றி நிச்சயம் என்று இயக்குநர்கள் மட்டுமல்ல நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பலரும் நம்பினார்கள்.

  அந்த வெற்றிக்கு அந்த நிறுவனப் படங்களில் வேலை பார்த்த ஒளிப்பதிவாளர் தான்தான் இந்த வெற்றியைத் தீர்மானித்தேன் என்று அதீதமாக நம்பினார். அதை தயாரிப்பாளரும் அப்போது நம்பினார். ஒருமுறை ஒரு உதவி இயக்குநர் பெரும்பாடு பட்டு அப்பாயின்மென்ட் வாங்கி அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்டார்.

  'அண்ணன் வந்திருவார் வெயிட் பண்ணுங்க' என்கிறார், அலுவலக உதவியாளர். கதை சொல்லப்போன இயக்குநரும் அவரது உதவியாளரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். வெற்றி இலக்கைத் தொட்டுவிட சில மணித்துளிகள்தான் என்பதுபோல் மனசு முழுக்க பதட்டமும் மகிழ்ச்சியும் பொங்கக் காத்திருக்கிறார்கள்.

  சில மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு தயாரிப்பாளர் வருகிறார். இருவரும் எழுந்து நின்று வணக்கம் வைக்கிறாகள்.'உக்காருங்க தம்பி, காப்பி டீ ஏதாவது சாப்பிட்டீங்களா எனக் கேட்டுவிட்டு, அலவலக உதவியாளரை அழைத்து அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக் கொடுக்கச் சொல்கிறார். வருகிறது. குடிக்கிறார்கள்.நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது!

  தயாரிப்பாளர், "கொஞ்சம் பொறுங்கள் ஒளிப்பதிவாளர் வந்திரட்டும்... ரெண்டு பேரும் ஒண்ணாவே கேட்டுடறோம்," என்கிறார். வெகுநேரக் காத்திருப்புக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் வருகிறார். அவரும் ஒரு காப்பி வரவழைத்துக் குடிக்கிறார். பின் ஆசுவாசப் படுத்திக்கொண்டு கதையைச் சொல்லுங்கள் என்று சொல்கிறார். வாழ்வா சாவா என்ற வெறியோடு கதை சொல்லத் தொடங்குகிறார் அந்த இயக்குநர்.

  சொல்லத் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில்...'நிப்பாடுங்க...என்னங்க நினைசுக்கிட்டிருக்கீங்க? இதல்லாம் கதைன்னு படம் பண்ணினா எவன் பாக்கவருவான்!? சினிமான்னா என்னன்னு தெரியுமா! போய் உண்மையிலேயே ஒரு கதை பண்ணி, உங்களுக்கே அது நல்லா இருக்குன்னு தோணிச்சுன்னா வாங்க... அப்பறம் கேக்குறேன்' என முகத்தில் அறைந்ததுபோல் திருப்பி அனுப்புகிறார்.

  வெளியில் வந்த இருவருக்கும் உலகம் இருண்டதுபோல் பாதை தெரியாமல் பதைபதைத்துப் போகிறார்கள். கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்கிறது.

  நம்பிக்கையோடு மீண்டும் கோடம்பாக்கத்தின் கதவுகளைத் தட்டத் தொடங்குகிறார்கள். சின்னதாக நம்பிக்கை பிறக்கிறது. 'ஆர்டிஸ்ட் கால்ஷீட்டோட வாங்க பண்ணலாம்' என்கிறார் அந்தத் தயாரிப்பாளர். கால காலமாக உதவி இயக்குநர்களுக்கு வைக்கப் படுகிற செக் மேட்தான் இது!

  Flashback: The hit secret of Thullatha Manamum Thullum

  வடிவேலு ஹீரோ, ஊர்வசி ஹீரோயின் என முடிவு பண்ணி இருவரையும் எப்படியோ பிடித்துக் கதை சொல்கிறார்கள். இருவருக்கும் ஒக்கே! அவர்கள் கேட்ட சம்பளத்திற்கு தயாரிப்பாளர் தயாராக இல்லை!

  முதல் படம் பண்ண நினைக்கும் இயக்குநர் ஹீரோவிடம் கதை சொல்லப்போனால், தயாரிப்பாளரோட வாங்க கண்டிப்பா படம் பண்றேன் எனச் சொவதும் - தயாரிப்பாளரிடம் போனால் அவர்கள் ஒரு ஹீரோ லிஸ்டை வைத்துக்கொண்டு இதில் யாரவது ஒரு ஹீரோவிடம் கதை சொல்லிக் கால்ஷீட் வாங்கிட்டு வாங்க உடனே படத்தை ஆரம்பிச்சுடலாம் என்று தயாரிப்பாளர் சொல்வதும் இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பது இன்னொரு உண்மை!

  அந்தத் தயாரிப்பாளரும் இல்லை என்றான பிறகு தற்செயலாக ஒரு காமெடி நடிகரின் சிபாரில் ஒரு பெரிய நிறுவனத்தில் கதை சொல்லும் வாய்ப்புக்கிடைக்கிறது. 'பிரமாதமான கதைய்யா! கண்டிப்பா சொல்லி அனுப்புகிறேன் என்று அந்த இயக்குநரை அனுப்பி வைக்கிறார். சொன்னது போலவே ஒரு வாரத்தில் அழைப்பு வருகிறது. யார் ஹீரோ,ஹீரோயின் எதையும் முடிவு செய்யவில்லை! இயக்குநருக்கு முதலில் அட்வான்ஸ் கொடுத்து முதலில் ஒப்பந்தம் செய்கிறார் அந்தத் தயாரிப்பாளர்.

  அடுத்து, அவர் சொன்ன ஹீரோவிடம் போய்க் கதை சொகிறார் இயக்குநர். அவரும் பிரமாதமான கதை என்று உடனே கால்ஷீட் தருகிறார். படப்பிடிப்புத் தொடங்கியது. எந்த இடையூறும் இல்லாமல் படம் முடிந்து வெளிவருகிறது. பாடலும் படமும் அந்த வருஷம் சென்சேஷனல் ஹிட்!

  இதெல்லாம் ஒரு கதையா!? எனக்கேட்ட ஒளிப்பதிவாளர் யார் என்பது இங்கே தேவையில்லை!

  போராடி வென்ற இயக்குநர் பெயர் -எழில். தயாரிப்பாளர் - ஆர்.பி சௌத்ரி. படம்- விஜய் - சிம்ரன் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்'.

  Flashback: The hit secret of Thullatha Manamum Thullum

  இப்போது புரிகிறதா சினிமா ஒரு பரமபத விளையாட்டு என்று!

  - வீகே சுந்தர்

  English summary
  A flashback of Director Ezhil and his first movie Thullatha Manamum Thullum.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X