நண்பனின் பகையே ஆபத்தானது! - கோச்சடையான் புது விளம்பரம் சொல்வது என்ன?
சென்னை: இன்றிலிருந்து மீண்டும் வெளி வர ஆரம்பித்துள்ளன கோச்சடையான் விளம்பரங்கள்.
இத்தனை நாள் புதுமையில் ஒரு பெருமை என்ற முத்திரை வரிகளுடன் வெளி வந்த கோச்சடையான் விளம்பரங்கள், இப்போது எதிரியின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது என்ற வரிகளுடன் வெளியாகியுள்ளன.
கோச்சடையான் படம் வரும் மே 9-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நாளிதழ்களில் விளம்பரங்கள், டிவி, தியேட்டர்களில் ட்ரைலர்கள் வெளியாகின.
ஆனால் திடீரென நான்கு தினங்களாக நாளிதழ் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து படம் குறித்து பலவிதமான வதந்திகள் பரவின.
ஆனால் கோச்சடையான் படக்குழு இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. பத்திரிகையாளர்கள் விசாரித்தபோதும், 'யாரோ சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள். படம் தொடர்பாக எந்த செய்தியாக இருந்தாலும், அதை நாங்கள்தானே தர வேண்டும்? படத்துக்கு எந்த சிக்கலும் இல்லை. இது ரஜினி படம். அதற்குரிய மரியாதையுடன் வெளியாகும்' என்றே விளக்கம் அளித்தனர்.
வெள்ளிக்கிழமை முதல் படத்தின் விளம்பரங்கள் வெளியாகும். 5000 திரையரங்குகள் இப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன, என்று தெரிவித்தனர்.
சொன்னது போலவே இன்று வெள்ளிக்கிழமை படத்தின் விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியாகத் தொடங்கிவிட்டன.
இத்தனை நாள் விளம்பரங்களில் புதுமையில் ஒரு புதுமை என்ற முத்திரை வரிகள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய விளம்பரம் 'எதிரியின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது' என்ற வரிகளுடன் வெளியிட்டுள்ளனர்.
இது படத்தில் இடம்பெறும் பாடலின் ஒரு வரி. ரஜினிகாந்த் குரலில் ஒலிப்பதுதான் என்றாலும், படம் குறித்து ரஜினியின் நட்பு வட்டத்தில் உள்ள சிலரே தப்புத் தப்பாக பொது விழாக்களில் பேசியதைக் குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications












