»   »  காமராஜ் படம் இன்றைய தலைமுறைக்கு ஒரு பொக்கிஷம்!- ஜி கே வாசன்

காமராஜ் படம் இன்றைய தலைமுறைக்கு ஒரு பொக்கிஷம்!- ஜி கே வாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

'காமராஜ்' திரைப்படம் இளைஞர்களுக்கு ஒரு பொக்கிஷம் என்று ஒரு திரைப்பட விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் பேசினார்.

அ.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படம் 'காமராஜ்'. இப்படம் 'எ பிலிம் ஆன் த கிங் மேக்கர்' என்கிற வாசகத்துடன் வெளியானது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரித்திருந்தது.

GK Vasan releases Kamaraj movie DVD

படம் ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் வெளியானாலும் புதியதாக 20 காட்சிகள் சேர்க்கப்பட்ட மறுவடிவில் இப்போது உருவாகியுள்ளது. இப்படத்தின் டிவிடி வெளியீட்டு விழா எம்.எம்.திரையரங்கில் நடைபெற்றது. டிவிடி யுடன் காமராஜர் பற்றிய வண்ண புத்தகமும் வழங்கப்படுகிறது.

டிவிடியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டார். தேசத்தந்தை காந்தியிடம் தனிச் செயலாளராக இருந்த வி.கல்யாணம் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

டிவிடியை வெளியிட்டு த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் பேசும் போது, "அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை இன்றும் போற்றிக் கொண்டிருக்கிறோம். அவர் காலத்தில் தமிழ்நாடு கல்வி தொழில், விவசாயம், என எல்லாவற்றிலும் இந்தியாவிலேயே முதல் நிலையில் இருந்தது. அதனால்தான் பெருந்தலைவர் ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்கிறோம். அவரது ஆட்சியில் நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படையான நிர்வாகம் எல்லாம் இருந்தன. இன்றைய அரசியலில், ஆட்சியில் அதெல்லாம் இல்லை.

இந்த முயற்சி ஒரு வெற்றி முயற்சி. இதைச் செய்துள்ள இயக்குநர் பாலகிருஷ்ணக்கு என் வாழ்த்து, பாராட்டு, நன்றி.அவர் சிரமப்பட்டு எடுத்த முயற்சி இது. அதற்காக அவருக்கு உரிய அங்கீகாரம் கூட கிடைக்க வில்லை. அதற்கு என்னால் கூட உதவ முடியவில்லை.

இவ்விழாவில் இங்கே நம்மோடு இருப்பவர்கள் ஒருபுறம் காந்தியவாதி கல்யாணம், மறுபுறம் நாட்டுக்காக தன் குடும்பத்தையே அர்ப்பணித்துக் கொண்ட கிருஷ்ணம்மாள். இருவருமே பெருமைக்குரியவர்கள்.

இந்த டிவிடி ஒரு பொக்கிஷம். இன்றைய தலைமுறையினருக்கு. குறிப்பாக இளைஞர்களுக்கு இது ஒரு பொக்கிஷம். இந்த விழாவுக்குப் பிறகு தனிப்பட்ட முறையில் நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நான் செல்கிற திருமணங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகளிலெல்லாம் இந்த டிவிடியைக் கொடுப்பேன், விநியோகிப்பேன் என்கிற உறுதியை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.. பெருந்தலைவர் காமராஜர் புகழ் ஓங்குக,'' என்றார்.

காந்தியவாதி கிருஷ்ணம்மாள் பேசும் போது, "இன்று தேசத்தில் நடப்பதைப் பார்க்கும் போது மனம் கலங்குகிறது. எப்படிப்பட்ட தலைவர்கள் இருந்த நாடு இது? அவர்கள் எல்லாம் இப்போது இல்லை. இப்போது நாட்டில் நடப்பவை தெருக் கூத்து போல நடக்கிறது. நாட்டில் நல்ல மனிதனாக இருக்க ஒரு பாதையாவது தெரியுமா தெரியாதா என அச்சமாக இருக்கிறது.

பெரியவர் காமராஜருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வினோபாவே கூறியபடி என் கணவர் சர்வோதய மாநாடு காஞ்சிபுரத்தில் நடத்திய போது காமராஜர்தான் எல்லா உதவிகளையும் செய்தார். அது போலவேதான் மூப்பனாரும் என்மீது பாசம் காட்டுபவர். மூப்பனார் ஒரு நாள் என்னைப் பார்க்க ராஜீவ் காந்தி, சோனியா காந்தியை அழைத்து வந்தார். பத்மஸ்ரீ விருது கொடுப்பதை சொல்லத்தான் அப்படி அழைத்து வந்தார்.

இவ்விழாவில் காமராஜர் பற்றி எவ்வளவோ பேசலாம். அவர் எப்போதும் மேசை நாற்காலி என்று உட்கார்ந்து எழுதமாட்டார். நின்று கொண்டேதான் எழுதுவார், அதிகாரிகளை அழைத்து நின்று கொண்டேதான் பேசுவார். அவருடைய அனுபவத்தை எழுதினால் அது காவியமாகும்," என்றார்.

காந்தியிடம் தனிச்செயலாளராக இருந்த வி.கல்யாணம் பேசும் போது, "நான் முதலில் காமராஜரை 1946-ல் சந்தித்தேன். அப்போது காந்தி இங்கு வந்திருந்தார். உடன் இருந்தவர்கள் பலரும் வட இந்தியர்கள். நான், காமராஜர் மட்டுமே தமிழர்கள். காந்தியுடன் பழனி, மதுரை, எல்லாம் பயணம் போனோம். 1956ல் கமிஷனரானேன். அப்போது முதல்வர் காமராஜரை சந்தித்தேன். குழந்தைகள் நலத்துறைக்காக வெளிநாடு போனேன். அங்கு குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவதை பார்த்துவிட்டு வந்து சொன்னேன். அப்படி காமராஜர் பள்ளிகளில் தொடங்கியதுதான் மதிய உணவுத் திட்டம்.

இப்போதைய நம் நாட்டுச் சூழ்நிலையைப் பார்க்கும் போது வெள்ளைக்காரன் ஆட்சியே மேல் என்று தோன்றுகிறது. வெள்ளைக்காரன் ஆட்சியில் அன்று நாங்கள் ராஜா போல இருந்தோம், ஸ்பெக்ட்ரம் ராஜா போல அல்ல. காமராஜர், கக்கன், சாஸ்திரி, குல்சாரிலால் நந்தா இவர்களிடம் எல்லாம் காலணா காசுகூட கையில் இருக்காது. வசதி ஒன்றுமே இல்லாதவர்கள் அவர்கள் .

அவர் போல இனி யாரும் வரமுடியாது. தன் குடும்பத்துக்கே உதவாதவர் காமராஜர் .. இன்று நாடு குப்பையாகி விட்டது. நான் தினமும் அதிகாலை 3 மணிக்கு என் வீட்டு சாலையைப் பெருக்குவேன். அரை மணி நேரத்தில் மீண்டும் குப்பை வீட்டுக்குள் வந்துவிடும் இதுதான் நம் நாட்டு நிலைமை. நாடு உருப்பட வேண்டுமென்றால் காலையில் எழுந்து வேலை செய்ய வேண்டும்," என்றார்.

English summary
Tamil Manila Congress president GK Vasan has released the DVD of Kamaraj movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos