கரூர் துயரம்.. பணத்துக்காக குழந்தைகள் செத்தா பரவாயில்லையா? பொளந்து கட்டிய ஜி.பி முத்து
சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் தொடர்பாக நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட மொத்தம் 41 பேர் மரணித்துப் போனார்கள். இப்படி இருக்கையில் இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் இருந்து ரூபாய் 20 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு அரசு ரூபாய் 10 லட்சமும், மத்திய அரசு ரூபாய் இரண்டு லட்சமும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூபாய் ஒரு லட்சமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூபாய் 50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தைத் தவிர, மற்ற கட்சிகள் வழங்கிய இழப்பீடுகள், மத்திய மாநில அரசுகள் வழங்கிய இழப்பீடுகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்புகள் போல கேட்டு வீடியோக்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ரூபாய் 20 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்து கேட்டு வீடியோ வெளியிடப்பட்டது. இதில் அந்த மக்கள் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது, அவர்கள் சொன்னவற்றின் சாராம்சம் இதுதான், அதாவது, " எங்கள் குழந்தைகள் செத்தாலும் பரவாயில்லை, விஜய் ஆட்சிக்கு வரவேண்டும், விஜய் வெல்ல வேண்டும். எனது குழந்தைகள் செத்து விட்டார்கள் தான் ஆனால் பரவாயில்லை, விஜய் எனக்கு 20 லட்சம் வங்கிக் கணக்கில் போட்டு விட்டுள்ளார். விஜய் வெற்றி பெறவேண்டும்" என்று எல்லாம் பேசி இருந்தார்கள். இது உள்ளபடி அனைவருக்கும் அதிர்ச்சியை தான் கிளப்பியது.

பதிலடி: இந்நிலையில் இந்த வீடியோக்களுக்கு நகைச்சுவை நடிகர் ஜி.பி. முத்து கொடுத்துள்ள பதிலடி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " இழப்பீடு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் அதை வாங்கிய பின்னர் அதை வெளிப்படுத்தும் விதம் மிகவும் கேவலமாக உள்ளது. ஒருவர் சொல்லுகிறார், எனது இரண்டு குழந்தைகள் செத்தாலும் பரவாயில்லை என்று கூறுகிறார். எனக்கு பதறுகிறது. 20 லட்சம் தான் அவர்களுக்கு பெரிதாக தெரிகிறது, குழந்தையை இழந்த வருத்தம் அவர்களிடத்தில் இல்லை.
விஜய்யே கண்டிப்பார்: பெற்ற பிள்ளையை விட எத்தனை லட்சங்களும் கோடிகளும் வந்தாலும் அது ஈடாகிவிடுமா? தம்பியை இழந்த ஒருவர், விஜய் சாருக்காக எனது தம்பி உயிரைக் கொடுத்துள்ளான், அது தவறு கிடையாது, நானும் உயிரைக் கொடுப்பேன் என்று கூறுகிறார். இந்த பேச்சுக்களை விஜய் சார் கேட்டால் கூட கண்டிப்பார். ஒரு குடும்பத்தினரே சொல்கிறார்கள், எங்கள் குழந்தை இறந்ததால் தான் நாங்கள் விஜய்யை அருகில் இருந்து பார்த்தோம், பரவாயில்லை என்று சொல்கிறார்கள். இப்படிச் சொல்ல வெட்கமாக இல்லையா?
கோபம்: 41 உயிர்கள் போய்விட்டதே என்று வருந்தியவர்கள் முகத்தில் சாணியைக் கரைத்து ஊற்றுவது போல உள்ளது. உங்களுக்கு பணம் காசுதான் பெருசு என்றால், பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதற்காக இவ்வளவு தரம் கெட்ட பேட்டிகளை கொடுக்காதீர்கள். இப்படி பேசுபவர்களை பார்க்கும்போது முகத்திலேயே உமிழ வேண்டும் என்பது போல கோபம் வருகிறது. இவ்வளவு கேவலமான பேட்டிகளை கொடுத்து இறந்தவர்களின் உயிரை கேவலமாக மாற்றாதீர்கள். பணத்தையும் உயிரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள்" என்று காட்டமாக பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











