அவங்க என்கூட வாழ்ந்துட்டு இருக்காங்க.. கன்வின்ஸ் பண்ணி அனுப்பி வெச்சேன்.. ஜிவி பிரகாஷ் சொன்ன சீக்ரெட்
சென்னை: ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனது பயணத்தை தொடர்ந்துவருகிறார். பெரிய ஹிட் எதுவும் அவர் கொடுக்காவிட்டாலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக பிளாக் மெயில் திரைப்படம் வெளியானது. அது ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் என்ற அடையாளத்தோடு வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் முதல் படத்திலேயே தனக்கான தனி அடையாளத்தை பெற்றுவிட்டார். படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் அனைவரையும் கவர்ந்தது. அதன் காரணமாக பல படங்களுக்கு அவர் பிஸியாக இசையமைத்தார். ஒவ்வொரு படத்துக்கும் சிறந்த இசையை கொடுத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.
தேசிய விருது: ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல படங்களுக்கு அட்டகாசமான இசையை கொடுத்த அவர் தேசிய அளவில் அங்கீகரிக்கப்படவில்லையே என்ற பேச்சு பல காலம் இருந்தது. ஒருவழியாக சுதா கொங்கரா இயக்கியிருந்த சூரரைப் போற்று படத்துக்கு இசையமைத்ததால் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார். அதனை பார்த்து ஒவ்வொரு ரசிகரும் தாமே பெற்றதுபோல் நிம்மதியடைந்தார்கள்.

நடிகர் ஜிவி பிரகாஷ்: இதற்கிடையே அவருக்கு நடிகராகும் ஆசை வந்தது. அதன்படி நடிக்க ஆரம்பித்த அவருக்கு பெரிய திருப்புமுனை கொடுத்த படமாக எதுவும் அமையவில்லை. சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்கள் மட்டுமே ஓரளவுக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது. இருப்பினும் ஒவ்வொரு படத்துக்கும் தனது நடிப்பை மெருகேற்றிக்கொண்டே வருகிறார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் பிளாக் மெயில் படம் வெளியானது.
சைந்தவியுடன் விவாகரத்து: அந்தப் படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. அடுத்ததாக அடங்காதே, இடி முழக்கம் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. நடிப்பில் மட்டுமின்றி இசையமைப்பிலும் பிஸியாகத்தான் இருக்கிறார். இதற்கிடையே பள்ளியிலிருந்து காதலித்து திருமணம் செய்துகொண்ட சைந்தவியை பிரிந்தும் வாழ்ந்துவருகிறார். பெர்சனல் வாழ்க்கையில்தான் இரண்டு பேரும் பிரிந்தார்களே தவிர; பொது மேடைகள், இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாகத்தான் பயணப்பட்டுவருகிறார்கள். அது பலரிடமும் பாராட்டை பெற்றது.
ஜிவி பிரகாஷ் பேட்டி: இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒரு பெண் ஏதோ ஒரு ஊரிலிருந்து என்னை காதலிக்கிறேன் என்று சொல்லி என்னுடைய வீட்டுக்கே வந்துவிட்டார். அவர் கற்பனையில் என்னுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார். வா நாம் போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். ஒருவழியாக அவரை கஷ்டப்பட்டு கன்வின்ஸ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











