வெற்றிமாறனின் அசுரன்.. புலம்புவாரு.. அந்த ஐடியா நான் கொடுத்தேன்.. ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்
சென்னை: கோலிவுட்டின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். இரண்டு தேசிய விருதுகள் வென்றிருக்கும் அவர்; நடிப்பு, இசையமைப்பது என இரண்டு துறைகளிலும் படு பிஸியாக இயங்கி வருகிறார், அவரது இசையில் அடுத்ததாக சூர்யாவின் திரைப்படம், சிவகார்த்திகேயன் நடக்கும் பராசக்தி ஆகியவை வரவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் என்ற அடையாளத்துடன் வெயில் திரைப்படத்தில் இசையமைக்க அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். வசந்தபாலன் இயக்கியிருந்த அந்த படத்தின்போது ஜிவிக்கு வயது டீனேஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வயதிலேயே வெயில் படத்துக்கு மிகச்சிறந்த இசையை கொடுத்து முதல் படத்திலேயே தன் மீதான கவனத்தை திருப்பினார் அவர். அடுத்ததாக தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகள் அவருக்கு வந்துகொண்டே இருந்தன.
சூப்பர் மியூசிக் டைரக்டர்: அப்படி அவர் இசையமைத்த ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, கிரீடம், பொல்லாதவன், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, பரதேசி என பல படங்களின் ஆல்பங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டித்தன. முக்கியமாக அந்த படங்களின் பின்னணி இசையும், தீம் மியூசிக்கும் பலரது மொபைலில் ரிங் டோனாக பல வருடங்கள் இருந்தது என்பது நினைவுகூரதக்கது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் ஜிவி பிரகாஷுக்கு நடிகராக வேண்டுமென்ற ஆசையும் தோன்றியது.

நடிகர் ஜிவி பிரகாஷ்: அந்த வகையில் டார்லிங் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும் அவர் எதிர்பார்த்த வெற்றி எதுவும் இதுவரை பெரிதாக கிடைக்கவில்லை. சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், நாச்சியார் உள்ளிட்ட படங்கள் மட்டுமே அவரது நடிப்புக்கு பெயர் சொல்லும்படியாக அமைந்தன. கடைசியாக அவர் நடிப்பில் பிளாக்மெயில் திரைப்படம் வெளியாகி ஓரளவுக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்றது.
இரண்டு தேசிய விருது: இதற்கிடையே சூரரைப் போற்று திரைப்படத்துக்கு இசையமைத்ததால் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. அதனையடுத்து தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்திற்கும் ஜிவிக்கு தேசிய விருது சமீபத்தில்தான் வழங்கப்பட்டது. இரண்டு தேசிய விருதுகள் வென்றதன் காரணமாக அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஜிவியும் நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பதையும் தொடர்ந்துவருகிறார். அடுத்ததாக அவரது இசையில் பராசக்தி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன.
ஜிவி பிரகாஷின் பேட்டி: இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் குறித்து ஜி.வி. பிரகாஷ் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் பேசிய அவர், "வெற்றிமாறன் எப்போதுமே படம் எடுத்த பிறகு அந்த ஃபுட்டேஜை என்னிடம் காண்பிப்பார். அப்படித்தான் அசுரன் படத்தின் ஃபுட்டேஜையும் காண்பித்தார். நான் பார்த்தபோது கென் கருணாஸ் கொஞ்சம் வெயிட் போட்டிருந்தார். உடனே நான் வெற்றியிடம், தனுஷின் மகன் போன்றே இல்லை. வெயிட்டாக இருக்கிறார். அவரது உடல் எடையை குறைத்து ரீ ஷூட் செய்யுங்கள் என்று கூறினேன். அவரும் அதன்படியே செய்தார்.நானும் வெற்றிமாறனும் நெருங்கிய நண்பர்கள். மற்றவர்களிடம் அவர் ஸ்ட்ரிக்ட்டாக இருந்தாலும் என்னுடைய ஆஃபிஸுக்கு வந்துவிட்டால் அவரது புலம்பலை நான் கேட்பேன். என்னுடைய புலம்பலை அவர் கேட்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











