»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தமிழ் பாதுகாப்பு இயக்கத்தால் ரஜினியின் "சந்திரமுகிக்கும் பிரச்சனை கிளம்பியுள்ளது.

படம் வெளியாக இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் இப்படத்தின் பெயர் சமஸ்கிருதத்தில் இருப்பதால் அதை தமிழில்மாற்றச் சொல்லி திருமாவளவன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

சமீப காலமாக தமிழ்ப் படங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் தான் சூட்டவேண்டும் என்ற தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் கோரிக்கைவலுத்து வருகிறது. இதற்கு கோலிவுட்டில் ஒருபுறம் எதிர்ப்பு கிளம்பினாலும், எதற்கு தேவையில்லாத பிரச்சினை என்று பலரும்தங்களது படத்தின் பெயர்களை மாற்றி வருகின்றனர்.

சேரன் தன்னுடைய "டூரிங் டாக்கீஸ் படத்தின் பெயரையும், இயக்குனர் சூர்யா தனது "பி.எப்.என்ற படத்தின் பெயரையும்மாற்றிவிட்டனர்.

கமலின் "மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் பெயரையும் மாற்றச் சொல்லி அதற்கு கெடுவும் விதித்து விட்டார் திருமாவளவன்.ஆனால் பெயரை மாற்ற முடியாது என்று கமல் கூறிவருகிறார்.ஏற்கெனவே டாக்டர்.கிருஷ்ணசாமியால் "சண்டியர் படத்தின்பெயரை மாற்றிய கமல், இப்போது திருமாவளவனின் மிரட்டலுக்கும் பணிவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

இது ஒரு புறமிருக்க, ரஜினியின் சந்திரமுகி வேகமாக ரெடியாகி தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகத் தயாராக உள்ளது.பாடல்கேசட்டுகள் விற்பனை மும்முரமாக நடந்து கொண்டிருக்க, ரசிகர்களும் ரஜினியின் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இப்போது சந்திரமுகிக்கும் சிக்கல் வந்து விட்டது.

சந்திரமுகி பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வாலி, சந்திரமுகி என்பதற்கு தமிழ் அர்த்தம் நிலா முகம் என்றுபோகிற போக்கில் விளக்கம் தர, அப்போது தான் பொறி தட்டியிருக்கிறது தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு.

சந்திரமுகி என்ற இந்தி-சமஸ்கிருத பெயரை, தமிழில் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

படம் வெளியாக இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், பிரச்சினையை எப்படி சமாளிப்பது என ரஜினி தரப்பு தீவிரஆலோசனையில் உள்ளது.

மேலும் தனது சமீபத்திய படங்களில், இக்கட ரா.. ரா.. ராமையாவில் ஆரம்பித்து மாத்தாடு மாத்தாடு மல்லிகே வரை பிறமொழிகளை திணிப்பதையும், கதம்..கதம் என போன்ற இந்தி வசனங்களை தமிழர்களின் காதோரத்தில் அப்படியேசொருகிவிடுவதையும் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கும் ரஜினி, சந்திரமுகியிலும் தேவுடா.. தேவுடா.. என்று தெலுங்குபாட்டை போட்டுவிட்டுள்ளார்.

இதையும் பிரச்சனையாக்க உள்ளதாம் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்.

பாசிலுக்கு பணம் தந்த சந்திரமுகி டீம்:

இது ஒரு புறமிருக்க, சந்திரமுகி படம் வெளியாக மலையாள இயக்குனர் பாசில் தடையாக இருந்தார் என்று டைரக்டர் பி. வாசுபரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

மலையாளத்தில் இருந்து கதையை சுட்டு கன்னடத்தில் படமாக எடுத்துவிட்டு அதையே உல்டா செய்து தமிழில் சந்திரமுகியாகவாசு எடுத்து வந்தது குறித்து பல முறை செய்திகள் வந்தாலும் அதற்கெல்லாம் சந்திரமுகி தரப்பு அமைதியையே பதிலாகத் தந்தது.

இப்போது இந்த விவகாரம் தொடர்பாக வாய் திறந்திருக்கிறார் வாசு. அவர் கூறுகையில்,

சந்திரமுகி படம் மலையாளத்தில் வெளியான பாசில் இயக்கிய மணிச்சித்திரத்தாழின் கதை அல்ல. கதைக்கு ஜாலியாகஆடிப்பாடும் கூட்டுக் குடும்பம் தேவைப்பட்டது. மணிச்சித்திரத்தாழ் படத்தில் ஏற்கெனவே இப்படி ஒரு காட்சி இருந்ததால்பாசிலிடமும், தயாரிப்பாளர் பாப்பச்சனிடமும் பணம் கொடுத்து காட்சிக்கான உரிமையை வாங்கிவிட்டோம்.

ஆனால் இது ரஜினிக்காக நான் எழுதி டைரக்ட் செய்த படம். இப்போது சந்திரமுகியை முடக்க பாசில் வழக்கு போடப் போவதாகஅறிந்து நான், ரஜினி மற்றும் பிரபு ஆகியோர் அதிர்ந்துவிட்டோம்.

பணத்தை வாங்கிக் கொண்டு இப்படி நடந்து கொள்கிறாரே என்று வருத்தப்பட்டோம். இப்படத்தின் தெலுங்கு உரிமையையும்அவர் கேட்டார்.

இறுதியில் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி பெரிய தொகை கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். பாசில்இவ்வாறு நடந்து கொண்டது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

இத்தனைக்கும் ஒண்ணு தெரியுமோ..?

பாசிலும் வாசுவும் கேரளாக்காரர்கள் தான்.

தனது ஊரைச் சேர்ந்தவர் என்பதால் வாசுவின் அப்பாவுக்கு கோடம்பாக்கத்தில் வாழ்வை உருவாக்கித் தந்தவர் எம்ஜிஆர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil