Bison - மாரி செல்வராஜின் பைசனுக்கு எதிர்ப்பு.. கலவரத்தை தூண்டியதாக ஹரி நாடார் கைது?
சென்னை: துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பைசன் படத்துக்கு சத்ரிய சான்றோர் படை என்ற கட்சியின் தலைவர் ஹரி நாடார் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். மாரியின் படங்கள் வந்தாலே எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் அவரை விரைவில் கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா, ரெஜிஷா என பலர் நடித்திருக்கும் பைசன் திரைப்படம் அர்ஜுனா விருது வென்ற மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவியும், தென் மாவட்ட இளைஞர்கள் பற்றியும் உருவாகியிருக்கிறது. மாரி செல்வராஜ் படத்தை தயாரிக்க நீலம் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்திருந்தது. படமானது கடந்த 17ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.
படத்துக்கு பாராட்டு மழை: படத்தை பெரும்பாலானவர்கள் கொண்டாடிவருகிறார்கள். திரைத்துறையிலிருந்து இயக்குநர் வசந்தபாலன், லிங்குசாமி ஆகியோரும் பாராட்டி தள்ளிவிட்டார்கள். இப்படத்தின் மூலம் மாரி செல்வராஜ் தொடர்ந்து ஐந்தாவது வெற்றி கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி பைசனும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று என்ற லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

வந்த எதிர்ப்புகள்: இது ஒருபக்கம் இருக்க மாரி செல்வராஜ் படங்கள் என்றாலே ஒருதரப்பினர் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் இயக்கும் படங்களால்தான் தென் மாவட்டங்களில் சாதி கலவரம் வந்துவிடும் என்று உப்பு சப்பு இல்லாத காரணத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் தான் சந்தித்த வலியையும், வேதனையையும், கதையையும்தான் படமாக எடுக்கிறேன் என கோடி முறை மாரி விளக்கம் அளித்தாலும் எதிர் தரப்பினர் கேட்பதாக இல்லை. பைசன் படத்துக்கும் எதிர்ப்பு வந்திருக்கிறது.
என்ன எதிர்ப்பு?: அதாவது சத்ரிய சான்றோர் படை என்ற கட்சியின் தலைவர் ஹரி நாடார்தான் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "பசுபதி பாண்டியன் - வெங்கடேச பண்ணையார் மோதலை மாரி படமாக எடுத்திருந்தாலும் அவர் உண்மையை சொல்லவில்லை. அவரது படங்களால் சாதி கலவரம் வரும் அபாயம் இருக்கிறது' என ஏகப்பட்ட விஷயங்களை பேசினார்.
தாக்குதல் நடத்த பிளான்?: அதுமட்டுமின்றி படம் திரையிடப்படுவதை தடுக்காவிட்டால் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர் பிளான் செய்திருப்பதாகவும் பேச்சுக்கள் பலமாக எழுந்திருக்கின்றன. அவரது எதிர்ப்பை பார்த்த பலரும், 'பைசன் படத்தில் என்ன குறையை ஹரி நாடார் பார்த்துவிட்டார். அனைத்து சாதியிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தானே இயக்குநர் சொல்லியிருக்கிறார். இதில் என்ன பிரச்னை.. விளம்பரத்துக்காக அவர் இப்படி செய்கிறார்' என்று பலரும் பதிவிட்டுவருகிறார்கள்.
ஹரி நாடார் கைது?: இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்வகையில் பேட்டி அளித்தல், ஒரு சாதியை குறிப்பிட்டு பொதுவெளியில் தரக்குறைவக பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஹரி நாடார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பாகவும், விரைவில் அவரை கைது செய்ய காவல் துறையினர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சில முறை இதே மாதிரி கைதானவர் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











