Bison - பைசன் கதை நடந்த காலம்.. மாரி செல்வராஜ் டவுசர்கூட போட்டிருக்கமாட்டார்.. ஹரி நாடார் ஓவர் பேச்சு
சென்னை: மாரி செல்வராஜின் பைசன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பாராட்டு மழையில் நனைந்துவருகிறது. வசூலிலும் எதிர்பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வழக்கம்போல் இந்தப் படத்துக்கும் ஒருதரப்பினர் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தவகையில் ஹரி நாடார் தற்போது தனது எதிர்ப்பு குரலை சத்தமாக எழுப்ப தொடங்கியிருக்கிறார்.
பரியேறும் பெருமாள் படத்தை எடுத்ததிலிருந்து மாரி செல்வராஜ் எந்தப் படம் எடுத்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையே ஒருதரப்பினர் வேலையாக வைத்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வும், வலியும் வெள்ளித்திரையில் அதிகம் பேசப்படும்போது இயல்பாகவே ஆதிக்க மனப்பான்மையுடையவர்களுக்கு ஏற்படும் ஒவ்வாமைதான் இதற்கு காரணம். இந்தப் படங்களை எதிர்ப்பவர்கள் தேவர் மகன், சின்னக்கவுண்டர் போன்று சாதி பெயரை தாங்கி வந்த படங்களை கல்ட் க்ளாசிக் என்றும் சொல்வார்கள்.
பைசன் - காளமாடன்: மாரி தனது முதல் படத்திலிருந்து சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் பேசிவருகிறார். துருவ் விக்ரமை வைத்து இயக்கியிருக்கும் பைசன் படத்தில் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை படமாக்கியிருக்கிறார். அதில் தன்னுடைய புனைவும், தென் மாவட்ட இளைஞர்களின் வாழ்வியலும் இருக்கிறது என்றும் படம் ஆரம்பிக்கும்போதே டிஸ்க்ளெய்மர் போட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

பசுபதி பாண்டியன் - வெங்கடேச பண்ணையார்: இப்படத்தில் மணத்தி கணேசனின் வாழ்க்கை மட்டுமின்றி பசுபதி பாண்டியனுக்கும், வெங்கடேச பண்ணையார் என்பவருக்கும் 90களில் நடந்த மோதலையும் பூடகமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அமீரின் கெட்டப் அப்படியே பசுபதி பாண்டியனின் தோற்றத்தோடு ஒத்துப்போவது கவனிக்கத்தக்கது. இப்படி பல விஷயங்களை பேசியிருக்கும் மாரி; இப்படத்தையும் முக்கியமான படைப்பாகவே கொடுத்திருக்கிறார்.
கொண்டாட்டமும், எதிர்ப்பும்: பலரும் பைசனை கொண்டாடிவருகிறார்கள். அதேசமயம் வழக்கம்போது ஒருதரப்பினர் எதிர்க்க தொடங்கிவிட்டார்கள். அதில் முக்கியமானவர் ஹரி நாடார். சத்ரிய சான்றோர் படை என்ற ஒரு கட்சியை வைத்துக்கொண்டு சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். மேலும் மாரி செல்வராஜ் சாதி கலவரத்தை தூண்டும்படி படம் எடுக்கிறார் என சொல்லி பைசனை எதிர்த்தார்.
ஹரி நாடார் பேட்டி: ஆனால் நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த மாரி, 'எனது கதையை நான் சாகும்வரை சொல்லிக்கொண்டுதான் இருப்பேன்' என அதிரடி காட்டினார். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு ஹரி நாடார் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், "எத்தனையோ சினிமாக்களை நாம் பொழுதுபோக்காக கடந்துபோகிறோம். மாரி செல்வராஜை எதிர்க்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. அவர் படம் எடுத்துவிட்டு அமைதியாக இருந்தால் பரவாயில்லை; ஆனால் அவர் சாதி வன்மத்தோடு பேட்டி கொடுக்கிறார்.
டவுசர்கூட போடல: பைசனில் சாதிய வன்மத்தோடு காட்சிகளை வைத்திருக்கிறார். என்னுடைய பைசன் திரைப்படம் கதாபாத்திரங்கள் கற்பனைதன் என்று சொல்லிவிட்டால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை. பசுபதி பாண்டியன், வெங்கடேச பண்ணையார் வாழ்ந்த காலத்தில் மாரி செல்வராஜ் டவுசர்கூட போட்டிருக்கமாட்டார். அவருக்கு புரிதலே இருந்திருக்காது.
அவர் சமூகத்தில் ஒடுக்கப்பட்டோம் என்று நினைத்திருந்தால் உண்மையை சொல்ல வேண்டும். பசுபதி பாண்டியன் எதற்காக கொலை செய்யப்படுகிறார் என்ற உண்மையை சொல்ல வேண்டும். அதனை காட்சிப்படுத்தக்கூடிய பொறுமையும், கடமையும் மாரி செல்வராஜுக்கு இருக்கிறது. ஒரு படுகொலையை மட்டும் காண்பிக்கிறார். அதனை பார்க்கும்போது தற்போதைய தலைமுறை இளைஞர்கள் வெங்கடேச பண்ணையார் குடும்பத்தை தவறாக நினைப்பார்களா மாட்டார்களா" என்றார்.


Click it and Unblock the Notifications











