காலாவதியான தியேட்டர்கள் ஒதுக்கிட்டாங்க.. தரக்குறைவான பல சூழ்ச்சி.. டீசல் பட இயக்குநர் ஆதங்கம்!
சென்னை: பார்க்கிங், லப்பர் பந்து என தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்த படங்கள் மக்கள் மனதை வென்ற நிலையில், டீசல் படம் ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், டியூட் மற்றும் பைசன் படங்களுடன் மோதிய டீசல் திரைப்படம் ஃப்யூவல் இல்லாத வண்டி போல நின்று விட்டது.
இந்த தீபாவளி வின்னராக பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம் மாறியுள்ளது. டியூட் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தையும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், டீசல் படத்துக்கு சரியான தியேட்டர்கள் ஒதுக்கப்படாததே படத்தின் வெற்றி பாதிக்க காரணம் என இயக்குநர் சண்முகம் முத்துசாமி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
டீசல் 3 நாள் வசூல்: ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், விவேக் பிரசன்னா, சாய் குமார் நடிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் வெளியான டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அந்த படத்திற்கு மக்கள் ஆதரவும் பெருமளவில் இந்த தீபாவளிக்கு கிடைக்கவில்லை. இதுவரை படம் வெளியாகி வெறும் 50 லட்சம் வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பைசன் திரைப்படம் 10 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது. டியூட் திரைப்படம் உலகளவில் 50 கோடி வசூலை அசால்ட்டாக தாண்டி விட்டது.
காலாவதியான தியேட்டர்கள்: "எமக்கு ஒதுக்கப்பட்டவை 100 + திரையரங்குகள் மட்டுமே .....
அதில் பல காலாவதியான திரையரங்குகள் அடங்கும் என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்" என பைசன் படத்தின் வசூல் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிப்பதாக நெட்டிசன் ஒருவர் போட்ட பதிவுக்கு கீழ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் சண்முகம் முத்துசாமி.
தரக்குறைவான பல சூழ்ச்சி: "மக்களுக்காக நின்றோம் , எம் மக்களுடன் வென்றோம் ... "தரம் பிரித்து வணிகம்" தரக்குறைவான பல சூழ்ச்சி செய்தாலும் எம் தலை ஒரு போதும் சாயாது..... சண்டை செய்வதில் எந்த சமரசமும் கிடையாது" என இன்னொரு ட்வீட்டையும் டீசல் படத்தின் இயக்குநர் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து பல தடைகளை தாண்டி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறி வசூல் மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











