For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தமிழ் சினிமாவும் மாறிவரும் பேய்களும்

  By Manjula
  |

  சென்னை: ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சின்னப் பசங்களை மட்டுமல்ல பெரியவர்களைப் பேய்ப் படம் பார்க்க கூப்பிட்டால் கூட என்னைய விட்டுடுங்க என்று தெறித்து ஓடுவார்கள்.

  ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியா... அந்தப் பேய் படத்தில காமெடி சூப்பரா இருக்குப்பா கூட்டிட்டுப் போங்க என்று மனைவி கெஞ்சினால் கூட மன்னித்து விட்டு விடலாம். ஆனால் நம்ம வீட்டு வாண்டுகள் கூட வான்டட்டாக முன்னாடி வந்து கெஞ்சுகின்றன.

  அந்த அளவுக்கு தமிழ் சினிமாவை பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. காதல் படங்கள் என்றால் அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்று தமிழ் ரசிகர்கள் மொத்தமாய் கொந்தளித்துப் போய்க் கிடந்தபோது பீட்சா படம் வந்தது. கல்யாணம் செய்யாமலேயே குடித்தனம் நடத்துவதையும், பேயையும் மிக்ஸ் பண்ணி எடுத்த இந்தப் படம் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வந்தது.

  எத்தனை காலத்துக்குத் தான் பேய்களை நேரடியாக வெள்ளைச் சேலையில் உலவ விடுவது, ஈரம் படத்தில் தண்ணீரையும் சிவப்புக் கலரில் ஒரு பொருளையும் காட்டி இரண்டும் ஒன்றாக வரும்போது எல்லாம் பேய் வரும் என்று காலத்திற்கு ஏற்றபடி மாற்றி இருந்தார்கள்.

  தமிழ் சினிமாவில் தற்போது புதுரத்தம் ஓடுகிறது அல்லவா... அதனை நிருபிக்க ஏதாவது செய்ய வேண்டுமே. எனவே பெண் பேய்களுக்கு ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு ஆண் பேய்களை சுதந்திரமாக உலவ விட்டுள்ளார்கள்.

  ஆண்பேயை தமிழில் முதலில் அறிமுகப் படுத்திய பெருமை ராகவா லாரன்சையே சேரும். முனி படத்தில் நடிகர் ராஜ்கிரணை ( மனுஷன் அதுவரைக்கும் நல்லி எலும்பை நல்லா கடிச்சி சாப்பிட்டுட்டு இருந்தாரு) பேயாக அறிமுகப் படுத்தினார். படம் வந்த புதிதில் யாரும் கண்டுகொள்ளவில்லை, கண்டு கொண்ட பொழுது தமிழ் சினிமாவில் ஆண் பேய்களின் நடமாட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.

  தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் விறகில்லாமல் பலகாரம் சுட்ட பேய்கள், இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில் என்னென்ன அட்டகாசங்களை அரங்கேற்றுகின்றன என்பதைப் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் பேய்களை எந்தவித காமெடியும் கலக்காமல் காட்டிய படங்கள் இவைதான்.

  விறகில்லாமல் பலகாரம் சுட்ட ஜெகன்மோகினி பேய்

  விறகில்லாமல் பலகாரம் சுட்ட ஜெகன்மோகினி பேய்

  ஜெகன்மோகினி படம் ஞாபகம் இருக்கிறதா? இல்லாமல் எப்படிப் போகும்! பேயாக வந்த ஜெயமாலினி அடுப்பில் விறகுக்குப் பதில் தனது காலையே நீட்டி பலகாரம் சுட்டுக் கொடுப்பார் நாயகனுக்கு. இப்போதைய நாயகிகள் என்றால் நோ நோ எனக்கு சமைக்கத் தெரியாது சீனைக் கட் பண்ணிவிடுங்கள் என்றிருப்பார்கள். கதையின் நாயகனை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆவலில் ஜெகன்மோகினிப் பேய் பல அட்டகாசங்களைப் படத்தில் செய்திருக்கும். அதைக் கண்டு நாமெல்லாம் பயந்து நடுங்கிப் போய்.. அப்பப்பா எவ்வளவு மன தைரியம் உள்ளவர்களையும் கொஞ்சம் ஆட்டம் காண வைத்த படம் இது (அதே சீனை இன்னிக்குப் பார்த்தா காமெடியா இருக்கு!).

  அதே கண்கள்

  அதே கண்கள்

  தமிழில் ஒரு ஜோடிக் கண்களை வைத்தே மிரட்டிய திகில் படம் அதே கண்கள். 1967 ம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்தில் ரவிச்சந்திரனும் காஞ்சனாவும் ஜோடியாக நடித்திருந்தனர். வரிசையாக நடக்கும் கொலைகளுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிப்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். படம் வந்த புதுசுல யாரோட கண்ணப் பார்த்தாலும் கொஞ்ச நாளைக்கு பயந்து நடுங்கியது தனிக்கதை.

  யார்- பேய் யார் என்பதுதான் கதை

  யார்- பேய் யார் என்பதுதான் கதை

  1985 ம் ஆண்டில் அர்ஜுன் மற்றும் நளினியின் நடிப்பில் வெளிவந்த பயங்கரமான திகில் படம் இது. ஒரு அமானுஷ்ய நேரத்தில் பிறக்கும் குழந்தையை ஜெய்சங்கர் தத்து எடுத்து வளர்க்க 18 வயது ஆனவுடன் அவனது செயல்கள் மாற்றம் அடையும். அவனது ரகசியம் தெரிந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறக்க அவனிடம் இருந்து மற்றவர்களைக் காக்கும் முயற்சியில் நளினியும், அர்ஜுனும் வெற்றி பெற்றார்களா என்பது கிளைமாக்ஸ்.

  13ம் நம்பர் வீடு

  13ம் நம்பர் வீடு

  இன்றளவும் வீடு குடிபோகிறவர்கள் 13ம் நம்பர் எண் உள்ள வீட்டிற்கு செல்ல மாட்டார்கள், அந்தளவுக்கு பேய்க்கும் இந்த நம்பருக்கும் நெருங்கிய ரிலேஷன்ஷிப் உண்டு. இந்தப் படத்தில் 13ம் நம்பர் வீட்டிற்க்கு ஜெய்சங்கர், நிழல்கள் ரவி என அண்ணன் தம்பிகள் இருவர் குடும்பத்துடன் குடிவர அந்த வீட்டில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்க, நடக்கும் திகிலூட்டும் சம்பவங்களுக்குக் காரணம் கண்டுபிடித்து அதனை சரிப் படுத்துவது படத்தின் கிளைமாக்ஸ்.

  தமிழ் சினிமாவில் இரண்டறக் கலந்த காமெடிப் பேய்கள்

  தமிழ் சினிமாவில் இரண்டறக் கலந்த காமெடிப் பேய்கள்

  முன்பெல்லாம் பேய்ப் படங்கள் என்றால் ஒரு பெண்ணை வெள்ளைச் சேலையில் காட்டி படம் முழுவதும் நடமாட விடுவார்கள். அது தனது மரணத்திற்குக் காரணமானவர்களை எல்லாம் கடைசியில் ஒருவழியாகக் கொன்று தொலைக்கும். நடுநடுவில் அந்தப் பேய்க்கு டூயட் வேறு. இப்பொழுது நிலைமை அந்த மாதிரி இல்லை, காமெடி கலந்து இருந்தாத் தான் அது பேய்ப்படம் இல்லாட்டி அது காதல் படம்னு தியேட்டருக்கு ஒருத்தரும் வரமாட்றாங்க.

  ஆண் பேய்கள்

  ஆண் பேய்கள்

  முனி படத்தில் ஆண் பேயை ஆரம்பித்து வைத்த லாரன்ஸ் தனது அடுத்த படமான காஞ்சனா படத்தில் அதை வழிமொழிய, பிறகென்ன தமிழ் சினிமாவில் ஆண் பேய்களின் அட்டகாசம் ஆரம்பித்து விட்டது. லாரன்ஸ் படங்களில் பேயை நல்லதாகக் காட்டித் தொலைக்க இந்தப் பேய்க்குள்ளேயும் இவ்வளவு நல்ல மனசு இருந்திருக்கு பாரேன் என்று உச்சுக் கொட்டி ரசிக்க ஆரம்பித்தனர் ரசிகர்கள்.

  ஆணுன்னா பேயும் இரங்கும் காலம் இது

  ஆணுன்னா பேயும் இரங்கும் காலம் இது

  காலம்காலமாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த பெண் பேய்கள் வீட்டிற்க்கு அனுப்பி வைக்கப் பட்டு ஆண் பேய்கள் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி விட்டன. முன்பெல்லாம் பொண்ணுன்னா பேயும் இறங்கும்னு ஒரு பழமொழி இருந்துச்சு. போறபோக்கப் பாத்தா பையன்னா தான் பேயும் இறங்கும்னு புதுமொழி வந்திடும் போல. காஞ்சனா, டிமாண்டி காலனி, டார்லிங், மாசு என்று தமிழ் சினிமாவில் ஆண் பேய்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கின்றன. சூர்யா, கார்த்தி தொடங்கி ஆர்யா வரை கோடம்பாக்கத்தில் பேயாக களம்காண ஆரம்பித்து விட்டனர்.

  பாசப் பேய்கள்

  பாசப் பேய்கள்

  ஷங்கர் தயாரித்த ஆனந்தபுரத்து வீடு படத்தில் நாயகனின் பெற்றோர்களாக வரும் இரண்டு பேய்களின் பாசம் கண்டு உச்சுக் கொட்டினான் தமிழன். அந்த இரண்டு பேய்களும் வீட்டு வேலை அனைத்தையும் பார்த்துக் கொடுக்க, ஊரில் உள்ள அத்தனை மருமகள்களும் தங்கள் வீட்டில் இந்த மாதிரி பேய்கள் இல்லையே என்று மாமனார், மாமியாரை பேய்களாக மாறச் சொல்லி வற்புறுத்தியது தனிக் கதை.

  அப்பா- பேய் பாசம்

  அப்பா- பேய் பாசம்

  மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு படத்தில் தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஒரு அழகானப் பேயை ஆப்பிள் பழ தினுசில் காட்டி இருந்தார்கள். அதில் பெண்ணின் அப்பா ஒருபடி மேலே போய் சரி சரி இங்க வந்து உக்காராம அப்படியே நம்ம ஐஸ் பேக்டரி பக்கம் வந்து கொஞ்சம் கணக்கு வழக்கெல்லாம் பாரு தாயி என்று மகள் பேயிடம் கெஞ்சுவார். என்னடா நடக்குது இங்க என்று படம் பார்த்த தமிழன் அரண்டுபோய் தியேட்டரை விட்டு எழுந்து வந்தது தனிக் கதை.

  ரொமான்ஸ் பேய்

  ரொமான்ஸ் பேய்

  எவ்வளோவோ செஞ்சுட்டோம் இதைக் கூட செய்ய மாட்டோமா என்று யோசித்து தமிழ் சினிமாவில் ரொமான்ஸ் பேயைக் காட்டி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கினார்கள், டார்லிங் படத்தில். பேய்கூட ரொமான்ஸ் செய்பவராக நடித்து இருந்தார் ஜி.வி.பிரகாஷ். படம் நன்றாக ஓட தொடர்ந்து தமிழனைப் பேய்களைக் கொண்டே சாகடிக்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

  இன்னும் என்னென்ன வடிவங்களில் பேய்கள் அவதாரம் எடுக்கப் போகிறதோ!

  English summary
  Horror films are not new, it is been happening right from 1960’s, but back then it had a limited market. Kanchana 2 is one of the few films in recent times which worked big in multiplexes.”It looks like Kollywood is going to be haunted by ghosts and super naturals for a long time to come.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more