twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மடிசார் மாமி படத்துக்கு தடை.. தணிக்கைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் குட்டு!

    By Shankar
    |

    சென்னை: "மடிசார் மாமி' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    மேலும், 'இப்போது வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்தால் திரைப்பட தணிக்கை வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது' என்றும் சென்னை உயர் நீதிமன்றம் விமர்சித்துளற்ளது.

    "மடிசார் மாமி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் கே.ஆர்.சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், "பிராமண சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அம்மக்களின் கலாசார, பழக்க வழக்கங்களை கேலி செய்யும் விதத்திலும் "மடிசார் மாமி' என்ற திரைப்படத்தை 'ஷில்பா மோசன் ஒர்க்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

    பிராமண சமுதாய மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் நிறைந்துள்ள அந்தப் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்,' என்று கோரியுள்ளார்.

    இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி என்.கிருபாகரன், 'மடிசார் மாமி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து திங்கள்கிழமை (மே 27) உத்தரவு பிறப்பித்தார்.

    அந்த உத்தரவில், "நமது பழைய திரைப்படங்களில் உன்னதமான மனித உறவுகள், குடும்ப மதிப்பீடுகள், பெரியவர்களை மதித்து நடத்தல் போன்ற உயரிய கருத்துகளை தூக்கிப் பிடிக்கும் காட்சிகள் நிறைய இருந்தன. பழைய திரைப்படப் பாடல்கள் மனித வாழ்வின் மகத்துவத்தைப் போற்றுவதாக, தேச பக்தியை வளர்ப்பதாக, சகோதரத்துவத்தை வளர்ப்பதாக இருந்தன.

    அந்தப் படங்களில் நடித்த கதாநாயகர்கள் நல்ல குணங்கள் நிறைந்தவர்களாக, தங்கள் ரசிகர்கள் மனதில் நல்ல கருத்துகளைப் பதியச் செய்யும் சிறந்த முன்மாதிரிகளாக நடித்தார்கள். தமிழ்த் திரையுலகம் தமிழ்நாட்டுக்கு 5 முதல்வர்களை தரும் அளவுக்கு சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை மிக்க ஊடகமாக திரைப்படங்கள் உள்ளன.

    ஆனால், தற்போது வெளிவரும் திரைப்படங்கள் சமுதாயத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. நாம் விரும்பியதை அடைவதற்காக சட்ட விரோதமான, வன்முறைகள் நிறைந்த, ஒழுக்கக் கேடான பாதையில் சென்றாலும்கூட அதில் தவறில்லை என்ற கருத்தை முன்னிறுத்துவதாக இன்றைய பல திரைப்படங்கள் உள்ளன. படத்தின் தலைப்புகள்கூட மோசமாக உள்ளன.

    திரைப்படம் என்பது வியாபாரமாக இருந்தாலும்கூட, திரைப்படங்களைத் தயாரிப்பவர்கள், அந்தத் திரைப்படங்களில் நடிப்பவர்கள், படத்தை தணிக்கை செய்யும் தணிக்கைக் குழுவினர் போன்றவர்களுக்கு மிகப் பெரும் சமூகப் பொறுப்புணர்வு உண்டு என்பதை மறந்து விடக் கூடாது.

    இந்த வழக்கில் 'மடிசார் மாமி' என்ற திரைப்படத்தில் பிராமணர் சமுதாய மக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நிறைந்துள்ளதாகவும், எனினும் படத்துக்கு தணிக்கை வாரியம் தணிக்கைச் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சகிப்புத் தன்மை என்பது நாளுக்கு நாள் குறைந்து, ஒவ்வொரு பிரிவினரும் உணர்ச்சிகளுக்கு எளிதில் வயப்படுவர்களாக மாறி வரும் சூழலில், திரைப்படங்களுக்கு சான்றிதழ் அளிக்கும் தணிக்கை வாரியத்தின் பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்தால் தணிக்கை வாரியம் என்ற ஒரு அமைப்பு செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.

    ஒரு திரைப்படத்தை எவ்வாறு தணிக்கை செய்ய வேண்டும் என்பதற்கு சினிமா சட்டத்தில் ஏராளமான விதிமுறைகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. அவ்வாறு இருந்தும்கூட வன்முறை, ஆபாசம் நிறைந்த காட்சிகளோடு வெளியாகும் திரைப்படங்களால் தணிக்கை வாரியத்தின் செயல்பாடு பற்றி சந்தேகம் எழுகிறது.

    ஆகவே, இன்றைய நவீன திரைப்படங்களை ஒழுங்குபடுத்தும் விதத்தில் சினிமா சட்ட விதிகளில் போதுமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. மேலும், அரசியல் சார்பு இல்லாத, தகுதியான மற்றும் பொறுப்புணர்வு மிக்கவர்களையே தணிக்கை வாரியத்தில் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

    நீதிமன்றத்தின் இந்த பரிந்துரைகள் தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தமது தரப்பு கருத்தை தெரிவிக்க வேண்டும்.

    மடிசார் மாமி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. எனினும் படத்தை தயாரித்தவர்கள் படத்தின் தலைப்பை மாற்றிவிட்டு வெளியிடலாம். வழக்கின் விசாரணை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது," என்று கூறியுள்ளார்.

    English summary
    The Madras High Court has banned a Tamil movie titled Madisar Maami.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X