»   »  திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! - உயர் நீதிமன்றம் உத்தரவு

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! - உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள ஒரு பொது நல மனுவில், "‘என்னை அறிந்தால்' என்ற படத்தை ஸ்ரீ சண்முகா தியேட்டரில் பார்த்தேன். அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக, அதாவது ரூ.200 என்னிடம் வசூலிக்கப்பட்டது. என்னை போல, படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு (6 காட்சிகள்) ரூ.9 லட்சம் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டது.

HC orders to take severe action on theaters charging high

இதுகுறித்து வணிக வரித்துறை உதவி கமிஷனரிடம் புகார் செய்தேன். என் புகாரை அவர் விசாரித்து வருவதாக கூறுகிறார். இதேபோல, புலி, வேதாளம், தூங்காவனம், தங்கமகன் உள்ளிட்ட பல புதிய திரைபடங்களை பார்க்க சென்ற போதும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது குறித்தும் தனித்தனியாக அப்பகுதிகளில் உள்ள வணிக வரித்துறை உதவி கமிஷனர்களிடம் புகார் செய்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கௌல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி, தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக ரூ.120 வசூலிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, ஐமேக்ஸ் தியேட்டர்களின் அதிகபட்ச கட்டணமாக ரூ.480 வசூலிக்கலாம்.

ஆனால், தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகம் வசூலிக்கப்படுகின்றன என்ற மனுதாரர் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் மாதம் வரை 5 முறை அடுத்தடுத்து புகார்களை அனுப்பியுள்ளார். குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களையும் அதில் இணைத்துள்ளார். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார்.

தியேட்டர்களில் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில் மிகப்பெரிய விதிமீறல் உள்ளது. 100 ரூபாய், 200 ரூபாய் கூடுதலாக வசூலித்து விட்டனர் என்று மனுதாரரோ அல்லது பாதிக்கப்பட்ட பொதுமக்களோ புகார் செய்யவேண்டும் என்று வணிக வரித்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கக் கூடாது.

அந்த அதிகாரிகள்தான் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் குறைவான கட்டணத்தில் திரைப்படங்களை தியேட்டர்களில் பார்க்கலாம் என்ற நோக்கத்துடன் உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு, அந்த உத்தரவுகளை அமல்படுத்தாமல் காகித அளவில் வைத்திருக்கக்கூடாது.

எனவே, தமிழக தலைமை செயலர், வணிக வரித்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும். இந்த சிறப்புக் குழு, தியேட்டர்களின் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதைக் கண்காணித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் விதமாக இலவச தொலைபேசி எண்ணை தியேட்டர்கள் முன்பு வைத்து, பொதுமக்கள் மத்தியில் அந்த எண்ணை விளம்பரப்படுத்தவேண்டும். இந்த சிறப்பு குழுவில் இடம் பெறும் அதிகாரிகள் தீவிரமாக செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். இந்த குழுவை 3 வாரத்துக்குள் தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்," என்று குறிப்பிட்டனர்.

English summary
The Madras High Court has ordered to take severe action on theaters which are collecting high from the viewers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil