விரைவில் நானே வருவேன் ட்ரெய்லர்: பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக களமிறங்கும் தனுஷ்
சென்னை: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'வாத்தி', 'நானே வருவேன்' படங்கள் உருவாகியுள்ளன.
செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவன் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

திருச்சிற்றம்பலம் கொடுத்த உற்சாகம்
அசுரனுக்கு பிறகு தனுஷின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. இதனையடுத்து நீண்ட நாட்கள் காத்திருப்புக்குப் பின்னர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

மீண்டும் இணைந்த மிரட்டல் கூட்டணி
தனுஷின் கேரியரில் மிக முக்கியமானவர், அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன். தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் செய்த மேஜிக் ஏராளம். இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தக் கூட்டணியில் 'நானே வருவேன்' உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே நானே வருவேன் போஸ்டர்கள் வெளியாகி, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நானே வருவேன் ட்ரெய்லர் அப்டேட்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் நானே வருவேன் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். கோலிவுட்டின் மிக முக்கியமான வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில், நானே வருவேன் படத்தின் ட்ரெய்லரை, வரும் 11ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 11ம் தேதி நடைபெறும் முக்கியமான திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த சம்பவம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வனுடன் மோதல்
ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள நானே வருவேன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது, தனுஷின் ரசிகர்களிடம் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. மேலும், இந்தப் படம் வரும் 29 அல்லது 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' வெளியாகவுள்ள நிலையில், தனுஷின் 'நானே வருவேன்' திரைப்படமும் ரிலீஸாகும் என்ற தகவல், கோலிவுட்டையே பரபரக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











