»   »  அத்தனையும் வெறும் பில்டப் மட்டும் தானா கோப்ப்ப்ப்பால்?

அத்தனையும் வெறும் பில்டப் மட்டும் தானா கோப்ப்ப்ப்பால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் ஃப்ளாப்கள் ஒன்றும் அதிசயமில்லை. யாருமே இந்த படம் தோற்க வேண்டும் என்று நினைத்து எடுக்க மாட்டார்கள். ஆனால் எடுத்து முடித்து கையில் வைத்துக்கொண்டு ஒரு பில்டப் கொடுத்திருப்பார்கள். அந்த ஓவர் பில்டப்களுக்கு நேரெதிராக படங்கள் அமைந்து விடும். அப்படி நமக்கு இந்த ஆண்டு நாமம் போட்ட படங்கள் இவை...

தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

ஆண்ட்ராய்டு போய் ஐஃபோன் வந்த பின்னும் ஹீரோக்களை விட்டு வில்லன் சங்கை கடிக்க வைத்துகொண்டேதான் இருப்பேன் என அடம் பிடிக்கிறார் பாலா. சம்பவத்துக்கு காரணம் யாரென்றே தெரியாமல் ஹீரோயினுக்கு நடக்கும் முதலிரவு, ஹீரோ தியாகம், சைக்கோ வில்லன் என எல்லாமே அதே பாலா டைப்... ஆனால் படத்துக்கு தரப்பட்ட பில்டப்போ ஆஸ்கருக்கு அடுத்த எண்ட்ரி லெவலில் இருந்தது. கரகாட்டத்தை மையமாக வைத்து கதை என்று கதை விட்டதற்கே நாலைந்து பொதுநல வழக்குப் போடலாம். சசி முன்கூட்டியே கணித்திருப்பார் போல... படம் முடியும் முன்பே இன்னொரு படத்தில் நடித்து முடித்திருந்தார். மாட்டியது பாலாதான். குற்றப்பரம்பரைக்காக பாரதிராஜாவுடன் சண்டை போட்டு அதற்கும் தயாரிப்பாளர் கிடைக்காமல் இப்போது சாட்டை யுவனையும், சூப்பர் சிங்கர் பிரகதியையும் சேர்த்து வைத்து ஒரு அழகான காதல் கதை எடுக்கப் போகிறாராம்.

ஜில் ஜங் ஜக்

ஜில் ஜங் ஜக்

ஒரு படத்துக்கு என்னெல்லாம் தேவை? கேட்சிங் டைட்டில், பக்கா புரமோஷன்ஸ், வித்தியாச டிசைன்கள், கலர் டோன், காஸ்டிங், இளைஞர்களின் ட்ரெண்ட் லிஸ்டில் இருக்கும் ஹர ஹர மஹாதேவகி, ஒரு புதுவகை ஃபேண்டஸி இப்படி எல்லாவற்றையும் பார்த்து பார்த்து பண்ணியவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டார்கள். அது ஸ்க்ரிப்ட். இந்த படத்தோட கதை என்ன என்பதை கண்டுபிடிக்கவே விமர்சகர்கள் நாலு முறை படம் பார்க்க வேண்டி வந்தது. சித்தார்த் ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் புரமோஷன் செய்கிறேன் என்று மிஷ்கின் உள்ளிட்டோரின் சாபங்கள்தான் மிச்சமானது. அசிஸ்டெண்ட் டைரக்டராக கேரியரை தொடங்கிய எல்லா ஹீரோக்களுமே சரியான கதை கிடைக்காமல் அல்லாடுகின்றனர். அந்த வரிசையில் சித்தார்த்துக்குதான் முதலிடம். ஹீரோயின் இல்லாத படம் என்றெல்லாம் விளம்பரம் செய்தார்கள். சித்தார்த்தோட நல்ல மனசுக்கு இனிமேலாவது நல்லதா அமையணும்.

மிருதன்

மிருதன்

தமிழின் முதல் ஸோம்பி படம் என்ற பில்டப்புடன் வெளியானது. முதல் ஸீனிலேயே தொடங்கப்பட்ட கதை அட... என நிமிர்ந்து உட்கார வைத்தது. ஆனால் அதன் பிறகு நடந்ததெல்லாம் கழுத்துக்கடி காமெடி. பொறுமையிழந்த ரசிகர்கள் ஸோம்பிகளாகவே மாறி தியேட்டரில் இருந்தவர்களை கடிக்க ஆரம்பித்தனர். விறுவிறுவென வந்திருக்க வேண்டிய படம் சொத சொத வென வந்து எரிச்சலாக்கியது. தனி ஒருவன், பூலோகம் என்று வேகமெடுத்த ஜெயம் ரவிக்கு ஒரு யூ டர்ன் கொடுத்து திரும்ப கிளம்பிய இடத்துக்கே கொண்டு வந்து சேர்த்தான் மிருதன்.

காதலும் கடந்து போகும்

காதலும் கடந்து போகும்

கொரியன் படத்தை ரீமேக் பண்ணுகிறேன் என்று கிளம்பினார் நலன் குமாரசாமி. கொடி பிடித்த கொரியன் ரசிகர்களும் வெற்றிவேல் வீரவேல் என்று அவருடன் கிளம்ப ஒரு உலக சினிமாவை தமிழில் ரசிக்கத் தயாரானோம். ஆனால் வந்தது பாதி வெந்தும் வேகாத இட்லியாக இருந்தது நம் தலையெழுத்து. இன்னமும் கூட சில உலக சினிமா விரும்பிகள் பாராட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எதற்கு என்று அவர்களுக்கே தெரியாததால் கர்த்தர் அவர்களை மன்னிப்பாராக... உண்மையிலேயே இது ரீமேக்கா என்று ரசிகர்கள் தேடி வாங்கியதில் ஒரிஜினல் படத்தின் டிவிடிதான் அதிகமாக சேல்ஸ் ஆனது. ஒரிஜினல் படமே நம்மை ஆவ்... விட வைக்க இதை எடுக்க எதுக்கு கொரியா போகணும்? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இன்னும் நீடிக்கிறது. மடோனா செபஸ்டியனின் தமிழ் அறிமுகம்தான் ஒரே நல்ல விஷயம். கொரியன் படம்லாம் இனிமே வேண்டாம் பாஸ்... நாங்க பாவம்!

இறைவி

இறைவி

தமிழ் சினிமாவை சில வாரங்கள் வைப்ரேட் மோடில் வைத்திருந்த படம் இறைவி. பீட்சா, ஜிகர்தண்டா என்று கலந்துகட்டி அடித்த கார்த்திக் சுப்புராஜ் என்பதால் 'இருக்குடா ஒரு நல்ல படம்' என்று காத்திருந்தால் எதையோ சொல்ல வந்து எதை எதையோ சொல்லி அவசியமே இல்லாமல் தனது பழைய புரடியூஸரையெல்லாம் வசை பாடி ஒரு படம் எடுத்திருந்தார். அஞ்சலி, பூஜா தேவாரி என சில கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் பேசப்பட்டன. படம் சொன்ன கருத்தை பற்றி மட்டுமல்லாமல் படத்தில் இடம்பெற்ற தயாரிப்பாளர் குறித்த வசனங்களும் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. படத்தில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்... அது என்ன என்று தான் இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறோம் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட அனைவரும்...

தொடரி

தொடரி

தனுஷ், பிரபு சாலமன், சத்யஜோதி ஃபிலிம்ஸ் என பிரம்மாண்ட கூட்டணி இணைந்த படம் ஓப்பனிங்கே இல்லாமல் தியேட்டர்கள் காத்து வாங்கின. மலை, யானை, கடல் என்ற வரிசையில் இந்த முறை பிரபுசாலமன் ரயிலைத் தொட்டது ரசிகர்களின் போதாத காலம். படத்தில் தம்பி ராமய்யா, கருணாகரன், இமான் அண்ணாச்சி என ஏகப்பட்ட நகைச்சுவை பட்டாளம் இருந்தாலும் நகைச்சுவை போர்ஷனை கொஞ்சம் அதிகமாகவே தன் கைகளில் எடுத்துக்கொண்டார் இயக்குநர். 140 கிலோ மீட்டர் வேகத்தில் பிரேக் பிடிக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் தீயும் பிடித்து எரிய, ரயிலின் மேல என்னவோ மொட்டை மாடி கணக்காக நின்றுகொண்டிருக்கும் ஹீரோ ஒரு டான்ஸை போடுகிறார். ஹாலிவுட் என்ன, எந்த வுட்டிலுமே இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்க முடியாது. இதை ஏன் சார் ஆஸ்கருக்கு அனுப்பலை?

English summary
Here is the list of disappointments in Tamil Cinema 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil