For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உப்புமா படம் எப்படி எடுக்குறாங்க தெரியுமா?

  |

  சினிமாவில் காசு தான் மிச்சம் வைப்பார்கள். சாப்பாட்டை ஒழுங்காக போட்டுவிடுவார்கள். புரடக்‌ஷன் சாப்பாடு என்று சொல்லப்படும் இந்த சாப்பாட்டுக்காகவே சினிமாவில் செட்டில் ஆனவர்கள் உண்டு. இந்த விதவித சாப்பாடு பெரிய படங்களுக்கு மட்டும் தான். முன்பெல்லாம் சின்ன படங்களுக்கு காலை டிபனாக உப்புமா தான் போடுவார்கள். இதுதான் சின்ன படங்களை உப்புமா படங்கள் என்று அழைக்க காரணமாயிற்று.

  தினத்தந்தியில் ஒரு நாளோ இரண்டு நாளோ விளம்பரத்தோடு காணாமல் போகும் இந்த உப்புமா படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி வாட்ஸப்பில் உலா வரும் பதிவு ஒன்று...

  "வடபழனி பகுதியை சுற்றி நிறைய எடிட்டிங் மற்றும் டப்பிங் ஸ்டுடியோக்கள் உள்ளன....பெரும்பான்மையான ஸ்டுடியோக்கள் லோ பட்ஜெட் (Low Budget) படங்களை நம்பியே உள்ளன...சிறிதுகாலம் நான் எடிட்டிங் துறையில் வேலை செய்து கொண்டிருந்தேன்....அப்போது குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்த, படமெடுத்து கொண்டிருந்த மற்றும் படமெடுக்க திட்டமிட்டு கொண்டே... இருந்த ஆட்களுடன் எனக்கு பழக்கமுண்டு.

  How small budget movies wasted? An analysis

  அப்படங்களின் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், ஒளிப்பதிவாளர்கள் என எல்லாரிடமும் தோழமையுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது... பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்து வருபவர்களாக இருந்தனர்.... இயக்குனர்களோ நிறைய படங்களில் பணிபுரிந்து பல வருடம் பழம் தின்று கொட்டைபோட்டவர்கள்....ஏனைய தொழில்நுட்ப கலைஞர்களும், இதர இத்யாதிகளும் அங்ஙனமே....

  முன்னுதாரணமாக சில ஓடிய படங்களை சொல்லி, "நாற்பது லட்சத்துல எடுத்துடலாம்....ஐம்பது லட்சத்துல முடிச்சுடலாம்... அறுபது லட்சம் போட்டா இருபது கோடி..." என குளிப்பாட்டி மாலைபோட்டு அழைத்து வரப்படுபவர்கள்தான் இதன் தயாரிப்பாளர்கள்.

  பெரும்பாலும் அப்படங்கள் SONY EX3, SONY 320,PANASONIC 372, 5D MARK II, MARK III, 60D (திருமண விழாக்களில் எடுப்பார்களே SONY PD170, Panasonic MD900 மற்றும் Handy Cam உள்ளடக்கம்) கேமராக்களால் எடுக்கப்பட்டவையே.....(Red, Alexa இவை பெரிய பட்ஜெட் படங்களாகக் கொள்ளப்படும்)

  கேப்ச்சர் செய்யும்போதே படங்களின் லட்சணம் தெரிந்து விடும்... "எப்டிஜி இருக்கு?" என்பார் டைரக்டர்...தவறை எக்காரணம் கொண்டும் சுட்டிக் காட்டகூடாது என்ற தமிழ் சினிமா இலக்கணம் தெரிந்ததால் இலக்கணம் மீறாமல் பதிலளிப்பேன்.... அப்படங்களையும் எடிட்டிங் செய்து... (அந்நேரங்களில் எனக்கு உயர் ரத்த அழுத்தம் 200-ஐத் தொட்டது, மாத்திரை சாப்பிட நேரிட்டது... நலன், கார்த்திக் சுப்புராஜ் போன்றோர் குறும்படம் எடிட்டிங் செய்ய வருவார்கள், அவர்களின் பழக்கம் ஆறுதலாய் அமைந்தது ) போஸ்ட் புரொடக்சன் முடித்து சென்சார் முடித்து QUBE (அ) PXD ரெடியாகிவிடும்.

  அப்பாடா.....

  அடுத்து ஆடியோ கேசட் வெளியீட்டு விழா... தயாரிப்பாளர், டைரக்டர் மற்றும் உறவினர்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து... தொலைக்காட்சி பேட்டி கொடுத்து அமர்க்களப்படுத்துவார்கள்... வாழ்த்து மழை குவியும். அனைவர் முகத்திலும் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும். அந்நாள் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நாளாகி விடும்.... குறிப்பாக தயாரிப்பாளர் வாழ்நாளில்!

  ஆம்...தயாரிப்பாளர் வாழ்நாளில் சந்தோசத்துக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் நாளும் அதுவே.

  நான் நிறைய தயாரிப்பாளர்களின் கடைசி சிரிப்பை கண்டிருக்கிறேன்.
  ஏனென்றால் படம் முடக்கி வைக்கப்படும் நாளும் அதுவே.
  நிச்சயம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது (காரணங்கள் எண்ணிலடங்காதவை).

  வார்தைகளால சொல்ல முடியாத அளவுக்கு படு கேவலமான ஒரு குப்பை படத்தை எடுத்து வைத்துக் கொண்டு கோடிக்கணக்கில் விலை பேசுவார்கள்......(நமக்கு ஒரே காமெடியா இருக்கும்)

  அதை சன் டிவிக்கு விற்றுக் தருகிறேன், கலைஞர் டிவிக்கு, ஜெயா டிவிக்கு, விஜய் டிவிக்கு, வேந்தர் டிவிக்கு, முடிந்தால் லண்டன் பிபிசிக்கு கூட விற்று தருகிறேன் என்று ஒரு கூட்டம் மொட்டையடிக்கப்பட்ட தயாரிப்பாளரிடம் மீதம் எங்கெல்லாம் முடியிருக்கிறதென்று தேடிப்பார்ப்பார்கள்.

  ஒரு கூட்டம், "சொந்தமாக ரிலீஸ் செய்யலாம். நல்ல சினிமா நாட்டு மக்களுக்கு போய் சேர்ந்தாகனும்," என... ஊரில் மிச்சமிருக்கும் வீடு, தோட்டத்தைதை விற்றுவிட்டு ரிலீசும் செய்வார்கள் (தன்னம்பிக்கையின் உச்சமாக இவர்களை நான் பார்ப்பேன்).

  இன்னோவா காரில் வந்த தயாரிப்பாளர், XL SUPER-ல் பின்னால் உட்கார்ந்து போய்வருவதை பார்த்திருக்கிறேன்.

  இப்படங்களின் டைரக்டரோ அடுத்த, "படத்தில் நடிக்க ஆட்கள் தேவை" என்று தினத்தந்தி மற்றும் தினகரனில் சென்னை அல்லாத ஏனைய பகுதிகளுக்கு வரிவிளம்பரம் கொடுத்து வசூல் வேட்டையில் இறங்கி விடுவார் ( நடிக்க வரும் பெண்களிடம் பணமாக வசூல் செய்யகூடாது ) XL SUPER-ல் வந்த இவர் மாருதி 800 அல்லது அதற்கு நிகரான ஏதாவது கார் வாங்கியிருப்பார் (வேறு விதங்களில் இருந்த பணத்தை இழந்து ரோட்டில் நடந்து திரியும் டைரக்டர்கள் இதற்கு விதிவிலக்கு).

  நல்ல புதிய சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளாத டைரக்டர்களால் அவரது பணமும் முடக்கப்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, அவர்களை திரையுலகத்தை விட்டே துரத்திவிடும் இதுமாதிரி டைரக்டர்களால் நல்ல திறமையான புதியவர்களையும் அவர்கள் நிராகரித்து விடுகிறார்கள் (இருந்த பணம் எல்லாம்தான் போச்சே).

  தயாரிப்பாளர்களும் தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்வதிலும் சளைத்தவர்கள் அல்ல. தன் மகனையோ, மருமகனையோ, மற்றும் உறவினர்களையோ நடிக்க வைப்பதின் முலம் இந்த பிறவிப் பலனை அடைகிறார்கள்.

  இப்படி முடிகிறது அந்த பதிவு. சினிமாவை புரிஞ்சுக்குங்க புது புரடியூஸர்ஸ்!

  English summary
  How most of the low budget movies wasted by both directors and new producers? Here is a detailed analysis.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X