என் குழந்தையை இழந்தது போல் உள்ளது.. புனித்தின் அண்ணன் சிவ ராஜ்குமார் உருக்கம்!
பெங்களூரு: என் குழந்தையை இழந்தது போல் உணருகிறேன் என மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரரான நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக் கிழமை திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் உயிரிழந்தார்.

உடல் அடக்கம்
புனித் ராஜ்குமாருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது தந்தையான நடிகர் ராஜ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே புனித்தின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ரசிகர்கள் மரணம்
புனித் ராஜ் குமாரின் மரணம் ஒட்டு மொத்த சினிமாத் துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புனித் ராஜ்குமாரின் ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புனித் ராஜ்குமாரின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியில் 2 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

பெரும் வேதனை
இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் சகோதரரான நடிகர் சிவராஜ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு, எங்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி தங்களின் குழந்தைகளுடன் வந்து புனித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Recommended Video

குழந்தையை இழந்துவிட்டது போல்
அவரது மறைவு ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. புனித் ராஜ்குமார் என்னை விட 13 வயது சிறியவர். அவருடைய மரணம் எனது குழந்தையை இழந்துவிட்டது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தி உள்ளது.

நிரந்தரமாக இருக்கும்
ரசிகர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளார்கள். எங்களுக்கு அவரது இழப்பால் ஏற்பட்டுள்ள வேதனை நிரந்தரமாக இருக்கும். ஆனால் நாம் அனைவரும் வாழ்க்கையை முன்னெடுத்து வாழ வேண்டும். நடந்த விஷயங்களை மறந்து பயணிக்க வேண்டியுள்ளது.

அசம்பாவிதங்கள் இல்லை
கர்நாடக அரசு மற்றும் போலீசார் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். எனது தந்தை இறந்தபோது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. ஆனால் இப்போது எந்த இடத்திலும் சிறு அசம்பாவித சம்பவங்கள் கூட நடக்கவில்லை. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது
புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்க முடியாமல் ரசிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். யாரும் இத்தகைய முடிவை எடுக்கக்கூடாது. புனித் ராஜ்குமாரே இதை விரும்ப மாட்டார். யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது. தங்களின் குடும்பத்தை பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம். இவ்வாறு நடிகர் சிவ ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











