Idli Kadai Day 3 Box Office: இட்லி கடை 3வது நாள் வசூல்.. காந்தாரா அலையில் பாதியாக குறைந்த வசூல்!
சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிட்ட இட்லி கடை படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை நாட்களை டார்கெட் செய்து வெளியான நல்ல ஆரம்ப வசூலை ஈட்டியது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் படத்தின் வசூல் பாதியாக குறைந்துவிட்டது.
காந்தாரா அலையிலும் தனுஷின் இட்லி கடை காலியாகாமல் நிலைத்து நிற்க காரணமே அந்த படம் மக்களை வெகுவாக கவர்ந்தது தான். பல கோடி சம்பாதிக்க குடும்பத்தையும் பெற்றோர்களையும் விட்டு விட்டு வெளிநாடுகளில் தனிமையில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் இளைஞர்களையும் மகன்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு இங்கே நம்மை பார்த்துக்கொள்ள யாருமே இல்லையே என தினமும் புழுங்கி தவிக்கும் பெற்றோர்களையும் இந்த படம் வெகுவாக கனெக்ட் செய்து விடும்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் கிராமத்து படங்களை பிற மாவட்ட மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதற்கு இட்லி கடை படமும் மிகப்பெரிய சாட்சியாகவே மாறியிருக்கிறது.
இட்லி கடை 3வது நாள் வசூல்: தனுஷ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், கீதா கைலாசம், இளவரசு என திறமையான நடிகர்கள் பட்டாளம் இணைந்து நடித்து கொடுத்துள்ள இட்லி கடை சாதாரண படமாக இருந்தாலும் ஃபீல் குட் படமாக மாறியுள்ள நிலையில், தொடர்ந்து அந்த படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2 விடுமுறை நாட்களிலும் தலா 10 கோடிக்கு மேல் வசூல் செய்த இட்லி கடை 3வது நாளான நேற்று வெறும் 5.50 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
மொத்தம் எத்தனை கோடி: முதல் நாள் இட்லி கடை 11 கோடி வசூல் செய்த நிலையில், 2வது நாள் 9.75 கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று 5.50 கோடி மட்டுமே வசூல் செய்து ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 26.25 கோடி வசூலை இட்லி கடை ஈட்டியிருப்பதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. உலகளவில் 30 கோடிக்கும் அதிகமான வசூலை இந்த படம் ஈட்டியிருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், படத்தின் வசூல் குறித்து ஆகாஷ் பாஸ்கரன் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சனி, ஞாயிறு கல்லா கட்டுமா?: காந்தாரா சாப்டர் 1 படத்தின் அலை தமிழ்நாட்டுக்கு வருவதற்கு ஒருநாள் முன்னமே தனுஷ் இட்லி கடையை போட்ட நிலையில், கொஞ்சம் லாபத்தை பார்த்துவிட்டார் என்கின்றனர். ஆனால், சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்களிலும் பல தியேட்டர்களில் காந்தாரா சாப்டர் 1 ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இட்லி கடை திரைப்படத்தின் வசூல் சனி, ஞாயிறு மீண்டும் தலா 10 கோடி அளவில் அதிகரித்தால் தான் முதல் வார முடிவில் 50 கோடி வசூலையாவது படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குபேரா படத்தை விட தனுஷுக்கு இந்த படம் தமிழ்நாட்டில் நல்ல வசூல் தான் என்றாலும், ராயன் படம் அளவுக்கு வசூல் வருவது டவுட்டு தான் என்றும் இன்பன் உதயநிதிக்கு முதல் படமே பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமையாது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











