»   »  '14 வயதில் கண்ணதாசன் பாடலைக் கேட்டு வாழ்க்கை பற்றி சிந்தித்தேன்’ – டல்லாஸில் இளையராஜா

'14 வயதில் கண்ணதாசன் பாடலைக் கேட்டு வாழ்க்கை பற்றி சிந்தித்தேன்’ – டல்லாஸில் இளையராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

டல்லாஸ்(யு.எஸ்): 14 வயதில் கண்ணதாசன் எழுதிய 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' பாடலைக்கேட்டு வாழ்க்கை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன் என்று இசைஞானி இளையராஜா கூறினார்.

இளையராஜா 1000 என்ற தலைப்பில், அவரது அமெரிக்க இசைப் பயணம் நடைபெற்று வருகிறது. டல்லாஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு சுவையான தகவல்களையும் இளையராஜா பகிர்ந்து கொண்டார்.

ஜனனியுடன் ஆரம்பம்

ஜனனியுடன் ஆரம்பம்

குழுவினர் குரு வணக்க வரிகளைப் பாடிக்கொண்டிருக்க, இளையராஜ மேடைக்கு வந்து இரு கைகளையும் கூப்பி ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அரங்கம் முழுவதும் இசை ரசிகர்கள்எழுந்து நின்று ஆரவாரத்துடன் இசைஞானியை வரவேற்றனர். நொடிப்பொழுது கூடத் தாமதிக்காமல், நேராகச் சென்று தன்னுடைய ஆஸ்தான ஆர்மோனியப்பெட்டியை இசைத்தவாறே ஜனனி ஜனனி என்று ஆரம்பித்து விட்டார்.

தொடர்ந்து கார்த்திக் ஒம் சிவோஹம்... பாட, மனோ தெலுங்குப் பாடலுடன் தொடர, அடுத்து சித்ரா நின்னுக்கோரி வர்ணம் என நிகழ்ச்சி களை கட்ட ஆரம்பித்தது.

புது முயற்சிகளுக்கு பஞ்சு அருணாச்சலம்

புது முயற்சிகளுக்கு பஞ்சு அருணாச்சலம்

மாயாபஜார் படத்தில் பேயோட்டுவதற்கு ஒரு பாடல் கேட்ட போது 'புதுசா பண்றண்ணே' என்று சொல்லி இசைக் கருவி இல்லாமலே பாட்டுப் போட்டேன். அதைப் போல் பஞ்சு அண்ணன் படங்களில்தான் வெவ்வேறு புதுப்புது முயற்சிகளை செய்தேன், பஞ்சு அண்ணனும் அவற்றை ஊக்கப்படுத்தினார் என்று ராஜா நினைவு கூரிந்தார்..

'பஞ்சு அண்ணனின் மகளும் மகனும் இந்த ஊரில் இருக்கிறார்கள் என்றால் என் குடும்பம் இங்கே இருக்கிறது என்பதாகும்' என்று சற்று உணர்ச்சிமயமானார்.

பிரிந்த ரஜினியும் கமலும், பிறந்த 2 படங்களும்

பிரிந்த ரஜினியும் கமலும், பிறந்த 2 படங்களும்

"பஞ்சு அண்ணன் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்க கால்ஷீட் வாங்கி வைத்திருந்தார். படம் பூஜை போடும் நாள் வந்தது. இருவரிடமும் போய் கேட்டால், முந்தைய வாரம் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்று தாங்கள் முடிவு செய்து விட்டதாக தெரிவித்தார்கள். அவர்கள் முடிவு செய்த விருந்தில் நானும் இருந்தேன். பஞ்சு அண்ணன் விட வில்லை. 'சரி அப்படியே ஆகட்டும். கொடுத்த தேதியில் நடித்துக்கொடுங்கள் நான் இரண்டு படமாக எடுக்கிறேன்' என்றார்.

அவர்கள் இருவருக்கும் ஆச்சரியம், சக திரையுலக ஜாம்பவான்களுக்கும் ஆச்சரியம். ஏற்கனவே எழுதி வைத்திருந்த கதையை விட்டு விட்டு, புதிதாக இரண்டு கதைகள் எழுதி தயாரித்து வெற்றிப்பெறச் செய்தார். அவை ஆறிலிருந்து அறுபது வரை மற்றும் கல்யாணராமன்.

ஆறிலிருந்து அறுபது வரை நாளைக்கு பூஜை, பாடல் பதிவு செய்யணும் என்று முந்தய நாள் இரவு சொன்னார். பூஜையில் பதிவு செய்தது தான் கண்மணியே காதல் என்பது பாடலாகும்," என்று பாடல் பிறந்த கதையைச் சொன்னார்.

கண்ணதாசன் என் வாழ்வை மாற்றினார்

கண்ணதாசன் என் வாழ்வை மாற்றினார்

"பாக்கியலட்சுமி படத்தில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.வி இசையமைத்த மாலைப்பொழுதின் பாடலை கேட்டேன். இளமையில் கழிந்தது சில காலம் தெளிவு அறியாமல் முடிவு தெரியாமல் எதிர்காலம் என்ற வரிகள் என்னை சிந்திக்க வைத்தது., என்ன செய்யப்போகிறேன் என்று 14 வயதில் என்னை நானே கேள்வி கேட்க ஆரம்பித்தேன். இந்த நிலைக்கு அன்று கண்ணதாசனின் பாடல் மூலம் சிந்தித்தது தான் காரணம்.

அழகி படத்தில் ‘பாட்டுச் சொல்லி' பாடலை, கண்ணதாசனின் மாலைப்பொழுதின் பாடல் வரிகளின் தாக்கத்தில் தான் எழுதினேன்," என்றும் கூறினார்.

ஒவ்வொரு முறையும் பேசும் போது, ஆடியன்ஸை பார்க்க வேண்டும் என்று அரங்கத்தின் விளக்குகளை போடச் சொன்னார்.

தெலுங்கில் பேசி அசத்திய ராஜா

தெலுங்கில் பேசி அசத்திய ராஜா

டல்லாஸில் தமிழ் தெலுங்கு இரு மொழி கச்சேரியாக நடைபெற்றது. இரண்டு தமிழ்ப் பாடல்கள், ஒருதெலுங்கு பாடல் என்று தொடர்ந்தது. இடையில் தெலுங்கிலும் பேசி அசத்தினார் ராஜா.

சிரஞ்சிவி ஸ்ரீதேவி நடித்த ஜெகதேவ வீரடு அதிலோக சுந்தரி படத்தில் இடம்பெற்ற ‘ 'அப்பனி திய்யனி' பாடிய போது, எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று பெரும்பாலோனோர் யோசித்ததை பார்க்க முடிந்தது.

சிவாஜி தெலுங்கு பதிப்பில் இந்த பாடலுக்கு ரஜினி ரெண்டு ஸ்டெப்ஸ் போட்டிருப்பார். இந்தி பேட்டா படத்தில் தக் தக் பாடலின் மூலம் ராஜா தானா என்று இந்திக்காரர்களுக்கும் புரிந்திருக்கும்.

தங்கமகன் படத்தில் 'வா வா பக்கம் வா', கேட்ட போது இன்றைய பாடல்களை விட தரம் மிகுந்த அதி வேகப்பாட்டை 25 வருடங்களுக்கு முன்பே போட்டிருக்கிறாரே ராஜா என்ற ஆச்சரியம் எழுந்தது.

ஒன்ஸ் மோர் வேண்டுமா?

ஒன்ஸ் மோர் வேண்டுமா?

முதல் பாட்டை ஒழுங்காப் பாடி முடிச்சுட்டு வேறு பாட்டுக்கு போங்கள் என்பதற்குத் தான் ‘ஒன்ஸ்மோர் கேட்பார்கள்' என நகைச்சுவையுடன் கூறினார். கார்த்திக், மனோ மற்றும் இசைக் கலைஞர்களை ஒன்ஸ்மோர் கேட்டு வேலை வாங்கினார்.

இசை நிகழ்ச்சி என்பதை விட, லைவ் ரெக்கார்ட்டிங் என்பது போல் தான் இருந்தது. 'அங்கிருந்து உங்களுக்கு தெரியாமல் போகலாம். சரியா நோட்ஸ்க்கு இசைக்கவில்லை என்றாலோ, பாடவில்லை என்றாலோ எப்படி விடுவது' என்றும் பார்வையாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.

ஒவ்வொரு ஒன்ஸ் மோரும் ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது என்பது தான் ஹைலைட்டாகும். ரசிகர்கள் விசிலடித்தும், கூச்சல் எழுப்பியும் ரசித்த போதும் ராஜா, உற்சாகமாக நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினார்.

தளபதி ‘காட்டுக்குயிலு' முரட்டுக்காளை ‘ பொதுவாக எம் மனசு' தங்கம் பாடல்களுடன் நிறைவு பெற்றது.

டல்லாஸில் சாதனை படைத்த ராஜா

டல்லாஸில் சாதனை படைத்த ராஜா

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பஞ்சு அருணாச்சலத்தின் மகள் கீதா, ராஜாவுடன் பஞ்சு அருணாச்சலத்தின் 40 ஆண்டு கால நட்பை விவரித்தார். அமெரிக்கா வருவதை தவிர்த்து வந்தவர் ராஜா நிகழ்ச்சிக்காக வர ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காமலே போய் விட்டதையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

"கடந்த பத்தாண்டு கால டல்லாஸ் வரலாற்றில் 6000 பார்வையாளர்களுடன் நடைபெற்ற ஒரே நிகழ்ச்சி இளையராஜா 1000 மட்டுமே என்று இண்டஸ் எண்டெர்டெயின்மெண்ட் ராம் முத்து தெரிவித்தார். இந்தி நிகழ்ச்சிகளில் கூட இவ்வளவு பேர் வந்ததில்லை. தமிழ் தெலுங்கு ரசிகர்களால் மட்டுமே இந்த சாதனை நிகழ்ந்துள்ளது...," என்றும் கூறினார்.

இளையராஜா டெக்சாஸ் மா நிலத்திற்கு வந்ததும் இதுவே முதல் தடவை. நிகழ்ச்சி ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தற்காக ஏற்பாட்டார்களை பாராட்டினார். ஹூஸ்டன், சான் அண்டோனியோ, ஆஸ்டின் உள்ளிட்ட டெக்சாஸ் நகரங்கள், மற்றும் ஒக்லஹோமா, அர்க்கான்சா போன்ற பக்கத்து மா நிலங்கள் மட்டுமல்லாது, சிகாகோ, சான் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர்.

டல்லாஸில் புதிய சாதனை படைத்த இளையராஜா, நியூஜெர்ஸி , வாஷிங்டன் டிசி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார்.

- இர தினகர்

English summary
Maestro Ilaiyaraaja has successfully completed his Dallas Tamil - Telugu Concert.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil