»   »  வள்ளுவன், கம்பன், பாரதி... ஜெயகாந்தனைப் பெற்றது நம் தமிழ்நாடு!

வள்ளுவன், கம்பன், பாரதி... ஜெயகாந்தனைப் பெற்றது நம் தமிழ்நாடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- இளையராஜா

''தமிழ் இலக்கிய உலகத்தையும் தமிழ்ச் சமூகத்தையும், தன் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்த்து அதிரவைத்த மிகப் பெரிய கலைஞன் ஜெயகாந்தன்.

Ilaiyaraja's article on Jayakanthan

அப்போது எனக்கு வயது 16. எங்களுக்குக் கல்வி என்பது ஜீவா, மாயாண்டி பாரதி, ஜெயகாந்தன் போன்றோரின் கருத்துக்களைக் கேட்பதுதான். எங்கள் அண்ணன் பாவலர் வரதராஜன், எங்களை ரயில் பெட்டிகள்போல ஒவ்வோர் ஊராக இழுத்துச்சென்று சுற்றிக்கொண்டிருந்த காலம் அது. மாட்டுவண்டி போகாத ஊர்களில்கூட எங்கள் பாட்டு வண்டி நுழைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில், அரசியல் பாட்டுக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தோம். அந்த மேடைகளில் புரட்சிகரமான கருத்துக்களை, அதிரவைக்கும் குரலில் எவருக்கும் அஞ்சாமல் முழங்கிக்கொண்டிருந்த ஜெயகாந்தனை, ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். அவரது பேச்சையும் எழுத்தையும், ஒரு சிங்கத்தின் கர்ஜனை என்றுதான் சொல்லவேண்டும். சிங்கம் போன்ற கம்பீரம் அவருடைய கருத்தில் இருக்கும். அவருடைய மேடைப் பேச்சில் உதிரும் சொற்கள், நெருப்பும் மலரும் கொட்டுவதுபோல மாறி மாறி மிரளவைக்கும்; பிரமிக்கவைக்கும்; சிலிர்ப்பூட்டும்; துள்ளவைக்கும். தங்குதடை இல்லாமல் சுதந்திரச் சிந்தனையோடு பேசுவார். தீமைகள், அதிகாரத்துக்கு எதிராக ஆவேசம் பொங்கும்.

அப்போதெல்லாம் பேச்சாளர்களும் கச்சேரிக் கலைஞர்களும் ஒரே வீட்டில் தங்கும் எளிமையான வழக்கம் இருந்தது. இரவில் பாட்டுக் கச்சேரி முடிந்ததும், அந்த வீட்டில் தனிக் கச்சேரி ஆரம்பமாகும். ஜெயகாந்தன் தன் அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். பழகிப்பார்த்தால் அவருடைய எளிமையும் அன்பும் பரிவும் புரியும்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி சின்னத்தைக் கிண்டல்செய்து பிரசாரம் செய்தார் அண்ணன் பாவலர். கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதும் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், அண்ணனை மேடைக்கு அழைத்துக் கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்துகொண்ட ஜெயகாந்தன், மாயாண்டி பாரதியிடம் 'இவ்வளவு கேலியும் கிண்டலுமான பாடல்களைப் பாடியவர் யார்?' எனக் கேட்க, அப்போதுதான் அண்ணனை ஜெயகாந்தனுக்கு அறிமுகப்படுத்திவைத்தார் மாயாண்டிபாரதி. அதன்பிறகுதான் எங்கள் நட்பு தொடர்ந்தது. எங்கள் கிராமமான பண்ணைப்புரத்துக்கும் ஜெயகாந்தன் வந்திருக்கிறார்.

சென்னைக்கு வந்துசேர்ந்த பிறகு, நானும் அண்ணன் பாஸ்கரும் பாரதிராஜாவோடு அலைந்துகொண்டிருந்த காலத்தில், 'ஜெயகாந்தனைப் பார்த்துவிட்டு வரலாமே!' என, அவரது வீட்டுக்குச் சென்றோம். அப்போது அவர் சினிமாவில் காலூன்றி இருந்த சமயம். எங்களை எல்லாம் அரை டவுசர் போட்ட காலத்தில் இருந்து பார்த்தவராச்சே! வீட்டுக்குச் சென்றதும் காபி கொடுத்து வரவேற்றவர், 'என்ன?' என்பதுபோல பார்த்தார். உடனே நாங்கள், 'உங்களை நம்பித்தான் சென்னைக்கு வந்தோம் தோழரே!' என ஒரு பேச்சுக்காகச் சொன்னோம். திடீரெனக் குரலை உயர்த்தி, 'என் அனுமதி இல்லாமல் என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்? உங்களை நம்பித்தானே வந்திருக்க வேண்டும்?' என அதிரப் பேசிவிட்டு அமைதியாகிவிட்டார். சப்த நாடியும் ஒடுங்கி வெளியில் வந்துவிட்டோம்.

'என்ன மனுஷன் இவர். ஏதாவது வேலை இருக்குதுனு சொன்னா பரவாயில்லை. அதை விட்டுட்டு இப்படி நம்மளை வறுத்தெடுத்து அனுப்புறாரே...' என ஒரு பக்கம் சிரிப்பு. இன்னொரு பக்கம் ஜெயகாந்தன் சொன்ன, 'உங்களை நம்புங்க, சுயமா முன்னேறுங்க' என்ற வார்த்தைகள்தான், எதிர்காலத்தில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என எங்களைத் துரத்திக்கொண்டே இருந்தது.

ஒருமுறை ஜெயகாந்தன் என்னிடம், 'உங்களை இசைத் துறையில் பெரிய ஆளாக்கியவர்கள் எனச் சொல்வதற்கு எவனுக்கும் யோக்கியதை கிடையாது. நேர்மையாகக் காலத்தைப் பிழிந்து உழைத்தீர்கள். மக்கள்தான், உங்களைக் கண்டுகொண்டார்கள்; உங்களைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்' எனச் சொன்னார்.

ஜெயகாந்தனை திருவண்ணாமலை கோயிலுக்கு ஒருமுறை அழைத்துச் சென்றேன். அவரைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரித்தேன். 'ஜெயகாந்தன் வாழ்ந்த காலத்தில், அவருடன் பேச முடியாமல் போய்விட்டதே' என எதிர்காலத்தில் ஏக்கம்கொள்பவர்களுக்குத்தான் அந்த ஆவணப்படம். அந்தச் சமயத்தில் அவரைச் சந்தித்து உடல்நிலை பற்றியும் தற்போதைய வாழ்க்கைப் பற்றியும் விசாரித்தேன். உடனே அவர், கை விரல்களை விரித்துக்காட்டி, 'ஏன்... நல்லாத்தானே இருக்கேன். டாக்டர் கேட்டுக்கிட்டதால சில பழக்கங்களை விட்டுட்டேன். இப்போ நான் எதுவும் எழுதுறது இல்லை. ஓர் எழுத்தாளனுக்கு வாழ்க்கை எவ்வளவு நீளமானது என்பது கணக்கு அல்ல. அது எவ்வளவு கூர்மையாக இலக்கை நோக்கிப் போய், மக்களைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதுதான் கணக்கு. நான் நல்லவனா... கெட்டவனா? 'கெட்டவன்'னு சொன்னா... அது இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த சலுகை. 'நல்லவன்'னு சொன்னா, அதுக்கும் இந்தச் சமூகம்தான் காரணம். இந்தச் சமூகம் நமக்கு என்ன அனுபவத்தைக் கொடுக்குதோ அதைத்தான் நாமும் இந்தச் சமூகத்துக்குக் கொடுக்க முடியும்' எனச் சொல்லிச் சிரித்தார். நானும் அதை ஆமோதித்துச் சிரித்தேன்.

ஒருமுறை, 'எழுத்தாளர் என்றால் எழுதினால்தானா?' என்றார் ஜெயகாந்தன். எதிரில் இருந்த எல்லோரும் அமைதியானோம். திடீரென, 'கோவலன், மாதவியுடன் சரசமாடிக்கொண்டிருக்கும்போது, கண்ணகி அங்கே வந்துவிடுகிறாள்' என்றார். மீண்டும் அமைதி. 'கதையை இப்படி ஆரம்பிக்கக் கூடாதா?' எனக் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால், நாங்கள் வெளியே வந்தபோது அனைவருக்குள்ளும் வெவ்வேறு கோணங்களில் கண்ணகி கதை ஓடிக்கொண்டிருந்தது.

'சமூகமாகட்டும் அரசியலாகட்டும் மேடைகளாகட்டும் இலக்கியமாகட்டும்... இவர்கள் அத்தனை பேரோடும் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் எதிராகப் பேசிப் பேசி, எழுதி எழுதி வந்தவன். கடைசியில், என்னையும் இவர்கள் சகித்துக்கொண்டார்களே...' என்ற அவரது வரிகள், என்னைக் கலங்கடித்துவிட்டன. தன்னைப் பற்றிய அலசல் எவ்வளவு உண்மையாக இருந்தால், இந்த மாதிரியான ஒரு வார்த்தை வெளிவரும்? வாதத்துக்காகவோ சிந்தனைக்காகவோ, எல்லோருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு அவருடைய எழுத்துக்கள் பதிலாகவும் தர்க்கரீதியிலான பக்கபலமாகவும் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க இயலாது.

அவன்... எழுத்தாளர்களின் கர்வம். ஒட்டுமொத்தத் தமிழர்களின் தலைநிமிர்வு. 'வள்ளுவன், கம்பன், பாரதியைக் கண்ட தமிழ்' எனச் சொல்வதைப்போல, 'ஜெயகாந்தனைப் பெற்றது நம் தமிழ்நாடு' எனப் பெருமைப்படலாம்!''

-நன்றி: விகடன்

English summary
Here is Maestro Ilaiyaraaja's rich tribute to late legend Jayakanthan in Vikatan magazine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil