இணைகிறது கரகாட்டக்காரன் ஜோடி.. ராமராஜன் பற்றி ரஜினியிடம் இளையராஜா சொன்ன அந்த விஷயம்!
சென்னை: மக்கள் நாயகன் ராமராஜன் பல வருட இடைவேளைக்குப் பிறகு சாமானியன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சாமானியன் படத்தில் ராமராஜனுடன் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் இருவரும் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சாமானியன் படத்தில் 23 வருடங்களுக்குப் பிறகு ஒரு சூப்பர் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நாயகன் ராமராஜன்
1980, 90 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக கலக்கி வந்தவர் மக்கள் நாயகன் ராமராஜன். இவரின் படங்கள் நூறு நாட்களை எல்லாம் கடந்து வருட கணக்கில் ஓடி சாதனை படைத்துள்ளன. கரகாட்டகாரன், எங்க ஊரு பாட்டுக்காரன், ஊரெல்லாம் உன் பாட்டு, வில்லு பாட்டுக்காரன், அம்மன் கோயில் வாசலிலே போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். ராமராஜனின் படங்கள் மக்களிடம் சென்றடைய இளையராஜாவின் இசையே பெரிய பலமாக அமைந்தது.

23 வருடங்களுக்கு பிறகு கூட்டணி
இளையராஜா - ராமராஜன் கூட்டணியில் வெளியான பாடல்களை கேட்க தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. டைட்டில் சாங், அம்மா சாங் அதிகம் வெளியானதும் இந்தக் கூட்டணியில் தான். அப்போது இளையராஜாவுக்கு ராமராஜனும், ராமராஜனுக்கு இளையராஜாவும் மாறி மாறி முன்னுரிமை கொடுத்தனர். இப்படி காலத்துக்கும் மறக்க முடியாத வெற்றிக் கூட்டணியில் இளையராஜாவும் ராமராஜனும் கண்டிப்பாக இடம்பெறுவார்கள். இந்நிலையில், இந்தக் கூட்டணி 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

ராஜாவை நேரில் சந்தித்த ராமராஜன்
ராமராஜன் நடிக்கும் 'சாமானியன் 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி வைரலானது. ராகேஷ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துவிட்டது. இந்நிலையில் நேற்று இளையராஜாவை நேரில் சந்தித்தார் ராமராஜன். அப்போது ராஜாவின் கைகளைப் பிடித்து நெகிழ்ச்சியாக பேசிய ராமராஜன், "நான் பல வருடங்களுக்குப் பின்னர் ஹீரோவாக நடித்து வருகிறேன். இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும்" என உரிமையுடன் கேட்டார். இளையராஜாவும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் உடனடியாக சம்மதம் தெரிவித்தார்.

ரஜினியின் ஏக்கம்… தட்டித் தூக்கிய ராமராஜன்
இளையராஜா - ராமராஜன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா 75 நிகழ்ச்சியில் மேடையேறிய ரஜினி, என்னை விட கமலுக்கு தான் நல்ல பாடல்கள் கொடுத்துள்ளதாக இளையராஜாவை செல்லமாக வம்பிழுத்தார். அதற்கு பதில் சொன்ன இளையராஜா, "கமலிடம் கேட்டால் அவர் உன் படத்தின் பாடல்கள் நல்லா இருக்கு என்பார். நான் ராமராஜன், மோகன் ஆகியோருக்கும் தான் நல்ல பாடல்களை கொடுத்துள்ளேன், எனக்கு இசைதான் பிடிக்கும், ராமராஜன் படங்களுக்கு இசையமைப்பது நல்ல ஃபீல் என கூறியிருந்தார். அது இப்போது உறுதியாகியுள்ளது. ராமராஜன் கேட்டதுமே ஓக்கே சொன்ன இளையராஜாவின் மனதை ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

அம்மா பாடல்கள்
ராமராஜன் படங்களில் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தாலும், அம்மா பற்றிய பாடல்கள் ரசிகர்களை எப்போதுமே வசீகரித்து விடும். அதேபோல், ராமராஜனுக்கு பிறகு ராஜ்கிரணின் பாடல்களுக்கும் இளையராஜா மண் மனம் மாறாமல் உயிர் கொடுத்துள்ளார். இப்போது சாமானியன் படத்தின் பாடல்களும் அதேபோல ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











