twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசைஞானி இளையராஜாவுடன் பிரபல இயக்குநர்கள்... ஒரு பார்வை!

    By Shankar
    |

    தமிழ் சினிமா இசையில் ஆரம்ப காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் சிஆர் சுப்பாராமன், எஸ்எம் சுப்பையா நாயுடு, ஜி ராமநாதன், கேவி மகாதேவன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி போன்றவர்கள்.

    ஆனால் இவர்கள் காலத்தைவிட இசைக்கு கூடுதல் மரியாதையும், உலகளாவிய ஈர்ப்பும் கிடைத்தது இளையராஜா காலத்தில்தான். தமிழ் திரையிசையின் பொற்காலம் எனப்படும் எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் வெளியான பாடல்கள் பெருமளவு இளையராஜா இசையமைத்தவையே.

    இதற்கு அவரோடு பணியாற்றிய இயக்குநர்களும் ஒரு காரணமாக அமைந்தனர். இளையராஜா + இயக்குநர்கள் கூட்டணி குறித்த ஒரு பார்வை...

    இளையராஜா - பாரதிராஜா

    இளையராஜா - பாரதிராஜா

    தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பாடல்களைத் தந்த இணை இளையராஜா - பாரதிராஜாதான். பதினாறு வயதினிலே தொடங்கி, கிழக்கே போகும் ரயில், கல்லுக்குள் ஈரம், நிறம் மாறாத பூக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், சிகப்பு ரோஜாக்கள், காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள் வரை தடையின்றி தொடர்ந்த பயணம், வேதம் புதிது படத்தில் தடைப்பட்டது.

    முதல் பிரிவு

    முதல் பிரிவு

    வேதம் புதிது படத்துக்கு தேவேந்திரன் என்பவர் இசையமைத்தார். அப்படியே இளையராஜா பாணியில் அவர் பாடல்களைத் தந்திருந்தார். இன்றும்கூட வேதம் புதிது படத்துக்கு இசை இளையராஜா என்றே பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். அடுத்து ரஜினியை வைத்து இயக்கிய கொடி பறக்குது படத்தில் அம்சலேகாவைப் பயன்படுத்தினார் பாரதிராஜா.

    மீண்டும் சேர்ந்தனர்...

    மீண்டும் சேர்ந்தனர்...

    என்னதான் இளையராஜா இல்லாமல் படங்கள் தர முயன்றாலும், பாரதிராஜா படங்களில் பாடல்கள் எடுபடாமல் போய்விட்டன. வைரமுத்து இருந்தால் போதும் என நினைத்த பாரதிராஜாவுக்கு இது பெரிய அடியாக அமைய, மீண்டும் ராஜாவுடன் கைகோர்த்தார், என் உயிர் தோழனில். இந்தப் படம் தோல்வியடைந்தாலும், குயிலுக் குப்பம், ஏ ராசாத்தி பாடல்கள் மிகப் பிரபலமாயின. அடுத்து வந்த புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல் படங்களில் அற்புதமாக அமைந்தன பாடல்கள்.

    மீண்டும் பிரிவு

    மீண்டும் பிரிவு

    நாடோடித் தென்றலுக்குப் பிறகு இளையராஜாவும் பாரதிராஜாவும் மீண்டும் பிரிந்துவிட்டனர். இன்று வரை சேரவில்லை. இனி சேர்வார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் தமிழ் சினிமாவின் மிக இனிய அனுபவத்தைத் தருவது இளையராஜா - பாரதி ராஜா படப் பாடல்கள்தான்.

     இளையராஜா - மகேந்திரன்

    இளையராஜா - மகேந்திரன்

    தமிழ் சினிமா மறக்க முடியாத முக்கிய இணை இளையராஜா - மகேந்திரன். முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, பூட்டாத பூட்டுகள், ஜானி, நண்டு, மெட்டி, கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழுது, அழகிய கண்ணே என இவர்கள் இணைந்த அத்தனை படப் பாடல்களும் காவியங்கள்!

    இளையராஜா - மணிவண்ணன்

    இளையராஜா - மணிவண்ணன்

    பாரதிராஜாவுக்கு அடுத்து இளையராஜாவை வைத்து அதிக ஹிட் பாடல்கள் கொடுத்தவர் மணிவண்ணன்தான் என்பது பலருக்குத் தெரியாது. கோபுரங்கள் சாய்வதில்லை தொடங்கி முதல் வசந்தம் வரை தொடர்ந்து 14 படங்களில் பணியாற்றினர். இந்தப் படங்கள் அனைத்திலுமே பாடல்கள் சூப்பர் ஹிட். இடையில் இனி ஒரு சுதந்திரம் படத்துக்கு மட்டும் கங்கை அமரன் இசையமைத்தார். மீண்டும் தீர்த்தக்கரையினிலே, ஜல்லிக் கட்டு, ராசா மகன், தோழர் பாண்டியன், ஆண்டான் அடிமை படங்களில் இருவரும் இணைந்தனர்.

    இளையராஜா - பாக்யராஜ்

    இளையராஜா - பாக்யராஜ்

    பாக்யராஜின் முதல் படம் சுவர் இல்லாத சித்திரங்களுக்கு கங்கை அமரன் இசையமைத்தார். விடியும் வரை காத்திரு படத்தில் முதல் முறையாக இருவரும் இணைந்தனர். பின்னர் தூறல் நின்னுபோச்சு, இன்றுபோய் நாளை வா, முந்தானை முடிச்சி, தாவணி கனவுகள், சின்னவீடு, ராசுக்குட்டி, வீட்ல விசேஷங்க, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி போன்ற படங்களில் நல்ல பாடல்களை இருவரும் தந்தனர்.

    இளையராஜா - ஆர் சுந்தரராஜன்

    இளையராஜா - ஆர் சுந்தரராஜன்

    தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்கள் இடம்பெற்றவை இந்த இருவரும் இணைந்த 14 படங்கள் என்றால் மிகையல்ல. பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள், குங்கும சிமிழ், அம்மன்கோயில் கிழக்காலே, தழுவாத கைகள், ராஜாதி ராஜா, மெல்லத் திறந்தது கதவு, என் ஜீவன் பாடுது, தாலாட்டுப் பாடவா, திருமதி பழனிச்சாமி போன்ற படங்களின் பாடல்களை ஒரு முறை நினைத்துப் பாருங்கள்!

    இளையராஜா - மணிரத்னம்

    இளையராஜா - மணிரத்னம்

    இளையராஜா போட்ட அத்தனைப் பாடல்களும் ஹிட்டானது மணிரத்னம் படங்களில்தான். இருவரும் முதலில் இணைந்த படம் பல்லவி அனு பல்லவி (கன்னடம்). பாடல்கள் சூப்பர் ஹிட். இன்றும் கூட பலர் இந்தப் படத்திலிருந்து பின்னணி இசையை எடுத்தாள்வதைப் பார்க்க முடியும். அடுத்து உணரு என்ற மலையாளப் படத்தில் இருவரும் இணைந்தனர். படம், பாடல் இரண்டுமே ஹிட்.

    பகல் நிலவு

    பகல் நிலவு

    தமிழில் மணிரத்னம் இயக்கிய முதல் படம் பகல் நிலவு. இளையராஜா சிபாரிசு செய்த படம். பாடல்களும் படமும் சூப்பர் ஹிட். அடுத்து இதயக் கோயில். இந்தப் படத்தையும் ராஜாதான் பெறுத்தந்தாராம். அந்தப் பட பாடல்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அத்தனை பெரிய ஹிட். தொடர்ந்து மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே), சத்ரியன் (மணிரத்னம் தயாரிப்பு), அஞ்சலி, தளபதி வரை இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது.

    இளையராஜா - ஃபாசில்

    இளையராஜா - ஃபாசில்

    மலையாள இயக்குநரான ஃபாசில், தமிழில் இயக்கிய முதல் படமான பூவே பூச்சூடவா தொடங்கி, பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் பதினாறு, அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஒரு நாள் ஒரு கனவு வரை... அனைத்துப் படங்களிலும் ராஜாதான் இசை. பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.

    இளையராஜா - பாலு மகேந்திரா

    இளையராஜா - பாலு மகேந்திரா

    பாலுமகேந்திரா இதுவரை தமிழில் இயக்கிய அத்தனைப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை. அழியாத கோலங்களுக்கு சலீல் சௌத்ரியும், சந்தியா ராகம் என்ற சிறிய படத்துக்கு எல் வைத்தியநாதனும் இசையமைத்தனர்.

    மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால், ரெட்டை வால் குருவி, வீடு, வண்ண வண்ண பூக்கள், மறுபடியும், சதி லீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனா காலம் படங்களில் ராஜாவின் கொடி பறந்தது. இப்போது தலைமுறைகள் என்ற படத்தில் இருவரும் இணைந்துள்ளனர்.

    இளையராஜா - கங்கை அமரன்

    இளையராஜா - கங்கை அமரன்

    இருவரும் அண்ணன் தம்பிகள் என்றாலும், தொழில் முறையில் இசையமைப்பாளர் - இயக்கநராக பெரும் வெற்றிகளைத் தந்த இணை. கோழி கூவுது படத்தில்தான் கங்கை அமரன் இயக்குநரானார். பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. தொடர்ந்து கொக்கரக்கோ என ஒரு படம் எடுத்தார். படம் தோற்றாலும் பாட்ல்கள் சூப்பர் ஹிட். பொழுது விடிஞ்சாச்சு, தே ஸ்ரீ தேவி, வெள்ளைப் புறா ஒன்று, என சில படங்கள் இயக்கினார், ராஜா இசையில்.

    எங்க ஊரு பாட்டுக்காரன்

    எங்க ஊரு பாட்டுக்காரன்

    கங்கை அமரன் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரனில் இளையராஜா இசையில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட். அடுத்து கரகாட்டக்காரன்... அதில், தமிழ் சினிமா காலம் உள்ளவரை மறக்க முடியாத ஹிட் பாடல்களாகத் தந்தார் ராஜா. தொடர்ந்து செண்பகமே செண்பகமே, சர்க்கரைப் பந்தல், அண்ணனுக்கு ஜே, ஊருவிட்டு ஊருவந்து, கும்பகரை தங்கய்யா, சின்னவர், கோயில் காளை, வில்லுப் பாட்டுக்காரன், தெம்மாங்குப் பாட்டுக்காரன் போன்ற படங்களின் பாடல்கள் இன்றும் பட்டி தொட்டியெங்கும் மக்கள் உதடுகளில் ரீங்கரிக்கின்றன..

    இளையராஜா - எஸ்பி முத்துராமன்

    இளையராஜா - எஸ்பி முத்துராமன்

    எஸ் பி முத்துராமன் இயக்கிய புவனா ஒரு கேள்விக்குறியில் முதல் முதலாக இசையமைத்தார் இளையராஜா. அதைத் தொடர்ந்து எஸ்பிஎம் இயக்கிய ஏராளமான ரஜினி, கமல் படங்களில் ராஜாதான் இசை. அத்தனைப் படங்களிலும் பாடல்கள் அட்டகாசமாக அமைந்துவிடும்.

    லிஸ்ட் பெருசு...

    லிஸ்ட் பெருசு...

    இன்னும் கே பாலச்சந்தர், ரங்கராஜன், என் கே விஸ்வநாதன், ஏ எஸ் பிரகாசம், கமல்ஹாஸன் என பல இயக்குநர்கள் தொடர்ந்து ராஜாவுடன் குறிப்பிட்ட காலகட்டம் வரை பணியாற்றியுள்ளனர். அவை அனைத்திலுமே பாடல்கள் பிரமாதமாக அமைந்தன.

    இங்கே நாம் தந்திருப்பது தமிழ் சினிமா பற்றி மட்டுமே. இன்னும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் ராஜாவுடன் பணியாற்றிய இயக்குநர்களையும் சேர்த்தால், ரொம்பப் பெரிய லிஸ்டாகிவிடும்.

    English summary
    Maestro Ilayarajaa has joined hands with many top directors in the past and gave Thousands of memorable hits.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X