ஃபர்ஸ்ட் பார்ட் பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்… சென்னை ஏர்போர்ட்டில் கமல், ஷங்கர்
சென்னை: விக்ரம் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியால் உற்சாகமான கமல்ஹாசன், அடுத்து இந்தியன் 2வில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு வேகவேகமாக நடைபெற்று வருகிறது.
சென்னை, ஹைதராபாத், திருப்பதி பகுதிகளில் இந்தியன் 2 ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான லொக்கேஷனை படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தியன் 2 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு
விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், தற்போது கிடப்பில் கிடந்த இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். லைகா, ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் இந்தியன் 2 அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018ம் ஆண்டே தொடங்கப்பட்ட இந்தியன் 2வில் ஏற்கனவே பாதி ஷூட்டிங் முடிந்துவிட்டதால், எஞ்சிய பகுதிகளை மட்டும் ஷங்கர் எடுத்து வருகிறார். இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஏர்போர்ட்டில் கமல், ஷங்கர்
இந்தியன் 2-வை முடித்துவிட்டு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் கமல். அதனால், இந்தியன் 2 படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர். சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு, சென்னை, ஹைதராபாத், திருப்பதி ஆகிய பகுதிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னை ஏர்போர்ட்டில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்தக் காட்சிகள் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், டிசம்பர் 5ம் தேதி முதல் சென்னை ஏர்போர்ட்டில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.

ஃபர்ஸ்ட் பார்ட் பாணியில் கிளைமாக்ஸ்
இந்தியன் முதல் பாகம் அப்பா கமலுக்கும், மகன் கமலுக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சியுடன் முடிந்தது. இதில், சந்துரு என்ற மகன் கேரக்டரில் நடித்த கமலை கொலை செய்துவிட்டு, இந்தியன் தாத்தாவான அப்பா கமல் தப்பித்துவிடுவார். இந்தக் காட்சிகள் சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டன. இப்போது இரண்டாம் பாகத்திலும் அதேபோன்று கிளைமாக்ஸ் காட்சி இருக்கும் என சொல்லப்படுகிறது. அதற்காகவே சென்னை ஏர்போர்ட்டில் இந்தியன் 2 ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளாராம் கமல்.

மார்ச் மாதம் நிறைவு
சென்னை ஏர்போர்ட்டில் நடக்கும் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் ஒன்று அல்லது இரண்டு ஷெட்யூல் மட்டும் இருக்கும் எனவும், அவைகளையும் மார்ச் மாதத்திற்குள் முடித்துவிட ஷங்கர் பிளான் செய்துள்ளாராம். ஆகமொத்தம் இந்தியன் 2 படப்பிடிப்பு மார்ச் மாதம் நிறைவாகி, ஜூனில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதேபோல், பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் அப்பாவான யோகராஜ் சிங்கும் கமிட் ஆகியுள்ளார். மேலும், பாலிவுட் நடிகரான குல்ஷன் குரோவரும் இந்தியன் 2 படத்தில் கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











