For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அறிமுகத்தால் ஆவதொன்றுமில்லை - திரைத்துறையின் உள்ளடுக்குகளால் ஏற்கப்பட வேண்டும்

  By Ka Magideswaran
  |

  எல்லாக் கலைஞர்களுக்கும் பெயர் சொல்லும்படியான அறிமுகப்படங்கள் அமைவதில்லை. முதற்படத்தில் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதற்கு எவ்வித வாய்ப்பும் கிடைக்காமல் அடுத்தடுத்த படங்களில் முயன்று வெளிப்பட்டவர்கள் பலர். முதற்படமே பெரிய திறப்பை ஏற்படுத்தித் தந்ததால் பெருஞ்சுற்று வந்தவர்களும் இருக்கிறார்கள். முதற்படம் சிறப்பாக அமைந்ததால் உயரத்திற்குச் சென்றவர்கள் அதற்கடுத்த படங்களில் தம்மை நன்றாக வெளிப்படுத்தி நிலைத்தார்கள். அறிமுகப்படமானது யார்க்கும் அமையாதபடி தனிச்சிறப்பாக அமைந்திருந்தும் அவ்வாய்ப்பைப் பற்றி மேலேற முடியாமல் தரைதட்டியவர்களும் இருக்கிறார்கள். இது இப்படித்தான் என்று வரையறுத்துக் கூற முடியவில்லை

  வைகாசி பொறந்தாச்சு என்னும் வெற்றிப்படம் 'இராதாபாரதி’ என்னும் இயக்குநர்க்கு அமைந்தது. ஆண்டுக்கு ஒரு வெற்றிப்படம் என்று கணக்கெடுத்தால் வைகாசி பொறந்தாச்சு படத்திற்கும் இடமுண்டு. அவ்வியக்குநர் யார், என்ன திறன் என்று ஆராய்ந்து பார்த்தால் அவர் பொதுத்தளத்தில் காணப்படவே இல்லை. அதற்கடுத்ததாய் “வைதேகி வந்தாச்சு” என்ற படத்தை எடுத்தார். முதற்படத்தின் வெற்றியால் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது இராதாபாரதியின் இரண்டாவது படம். ஆசிரியைமீது காதல்கொள்ளும் மனமுதிர்ச்சியில்லாதவனைப் பற்றிய கதை. வைதேகி வந்தாச்சு தோல்வியடைந்தது. அதன் பின்னர் அவ்வியக்குநர் மேலும் சில படங்களை எடுக்க முயன்றுள்ளார். அவை வெளிவந்த சுவடுகளே இல்லை. கன்னடப் படங்கள் சிலவற்றை எடுத்தார் என்றார்கள். பிறகு என்னானார் என்று தெரியவில்லை.

  Introduction Of An Artist Is Not A Matter In Cinema

  வைகாசி பொறந்தாச்சு படத்து வெற்றியின் வழியாக அதன் அறிமுக நாயகர் பிரசாந்த் முதல்நிலை நடிகரானார். அப்படநிறுவனம் மேலும் பல படங்களை எடுத்தது. இசையமைப்பாளர் தேவாவுக்கும் பாடலாசிரியர் காளிதாசனுக்கும் அப்படமே திருப்புமுனை. நகைச்சுவைச் சுற்றிலிருந்த ஜனகராஜ் நாயகராகவும் நடிக்கத் தொடங்கினார். ஆனால் பாருங்கள், படத்தின் நாயகி காவேரிக்குப் படங்கள் கிடைக்கவில்லை. பிற்பாடு தொலைக்காட்சித் தொடர்களின் பக்கம் அவர் கரையொதுங்கினார். ஒரு படம் பெரிய வெற்றி பெற்றால் அதில் பங்கெடுத்த அனைவர்க்கும் புதுவாழ்க்கை அமையும். வைகாசி பொறந்தாச்சு படத்தில் இடம்பெற்ற இயக்குநரும் நாயகியும் அப்படத்தினால் கிடைத்த நற்பெயரைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

  வைதேகி வந்தாச்சு தோல்விப்படம்தானே தவிர, அதில் அறிமுகமான சரவணனுக்கு நற்பெயர் கிடைத்தது. அப்படத்தில் ஓரளவுக்கு நன்றாகவே நடித்திருந்தார். தோற்றத்தில் விஜயகாந்தை நினைவூட்டினார். அறிமுகப்படம் தோல்வியுற்றபோதும் அவர்க்கு இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பட வாய்ப்புகள் வந்தன. பரபரப்பான இளம் நாயகராக வலம் வந்தார். அபிராமி, பொண்டாட்டி இராஜ்ஜியம், சூரியன் சந்திரன், பார்வதி என்னைப் பாரடி போன்ற படங்கள் வெற்றியும் பெற்றன. நாயகனாகவே இருபது படங்கள்வரைக்கும் நடித்தார். அடுத்த பத்தாண்டுகளில் அப்படியே அவருடைய சந்தை மதிப்பு சரிந்தது. சித்தப்பனாக நடித்த பருத்திவீரன் திரைப்படம்தான் இன்றைய தலைமுறையினர்க்கு அவரை நினைவூட்டியது. அவருடைய வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை அவரே ஒரு நேர்காணலில் கூறினார். “நான் சேலத்துல சிலுக்கு நடிச்ச படத்தை வரிசையில் நின்னு பார்த்தவன். சினிமா வாய்ப்பு கிடைச்சதும் சிலுக்கோட ஆடற வாய்ப்பும் கிடைச்சது. முதல்படம் வந்தது. ஊரே என்னைப் பத்திப் பேசுச்சு. அதுக்குப் பிறகு என் கையில் எதுவும் இல்லை. என் மக்கள் தொடர்பாளர் மௌனம் ரவிதான் எல்லாப் படங்களையும் பார்த்துக்கொண்டார். அவர் போகச்சொன்னா போனேன். நடிக்கச் சொன்னா நடிச்சேன். நானாக எந்தக் கதையையும் கேட்கல… அதுதான் என்னை இப்படி ஆக்கிடுச்சு…!”

  சரவணன் கூறியவற்றில் ஏராளமான மறைபொருள்கள் இருக்கின்றன. ஒரு நடிகரை அவருடைய தொடர்பாளரே கட்டுக்குள் வைத்திருக்கிறார். அவர் மனம் வைத்தால் நடிக்கலாம். இல்லையேல் வீட்டுக்குள் அமரவேண்டியதுதான். ஏனென்றால் அவர்கள் வணிகத்தினரோடு தொடர்புடையவர்கள். இன்றைய தமிழ்த்திரையுலகில் அப்படிப்பட்ட வலிமையுடையவராய் நிகில் முருகன் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தாம் ஆக்குகிறார்கள். ஒரு நிறுவனத்தின் ஓர் இயக்குநரின் புதுப்படத்தைக்கூட அவருடைய சிட்டுரைப் பக்கத்தில்தான் அறிவிக்கிறார்கள். காவேரிக்குப் படம் கிடைக்காமல் போனதற்கும் சரவணனுக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்ததற்கும் அவர்களுக்கு வாய்த்த மக்கள் தொடர்பாளரின் திறப்பாடுகளைக் காரணம் காட்ட முடியும்.

  Introduction Of An Artist Is Not A Matter In Cinema

  தமக்குத் திரையுலகில் யாரையுமே தெரியாது என்ற நிலையில் ஒருவர் முன்னேறினால் அவருடைய முன்னேற்றத்தை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. நானறிந்த சில கலைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்திய பின்னரும் உரிய வாய்ப்பின்றி ஒதுங்கிக்கொண்டார்கள். அங்கே முன்னேற்றம் என்பது தனிப்பட்ட முயற்சியாக இருப்பதில்லை. தமக்குப் பாட்டெழுதும் வாய்ப்புகள் கிடைத்தமைக்குக் நடிகர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணனின் அயராத தேடலும் காரணமென்று 'நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற நூலில் வாலி குறிப்பிடுகிறார். விஜயகாந்த் வாய்ப்பு கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் அவர்க்காகவே குள்ளமணியும் படியேறி இறங்கினார் என்று கேள்விப்படுகிறோம். அதனால்தான் விஜயகாந்த் நடித்த படங்களில் தவறாமல் குள்ளமணியும் இடம்பெற்றார். கவுண்டமணிக்குப் பாக்கியராஜும் பாக்கியராஜுக்குக் கவுண்டமணியும் தாம் செல்லுமிடங்களிலெல்லாம் வாய்ப்பு கேட்டவர்கள்.

  திரையுலகில் முன்னேற்றமும் தொடர்ச்சியான வாய்ப்புகளும் குழுவாய்ச் செய்த முயற்சிகளால்தாம் கிடைத்திருக்கின்றன. தனித்துத் தேடினால் நாமறிந்த படக்குழுக்களுக்கு அப்பால் நாம் கைவிடப்படுகிறோம். நடிகர் முரளி தம் நேர்காணலொன்றில் கூறியது நினைவில்கொள்ளத் தக்கது : “என்னை வெச்சு யாருண்ணே படமெடுத்தாங்க ? சத்யஜோதி தியாகராஜன், காஜா பாய், சூப்பர்குட் சௌத்திரி, சிவசக்தி பாண்டியன்… இவங்க நாலுபேருதான் என்னை வெச்சுத் தொடர்ந்து படமெடுத்தாங்க… மத்தவங்க யாருமே என்னைக் கண்டுக்கலயே…”

  திரையுலகில் கோலோச்சியவர்களின் பிள்ளைகள் அடுத்தடுத்து அரங்கேறியமைக்குக் காரணமும் இஃதே. அவர்களுக்குத்தான் எங்கே சென்று யாரை நாட வேண்டும் என்பது தெரியும். உள்ளடுக்குகளின் தொடர்புகள் தெரியாமல் அங்கே நுழைவதும் அரிது, தொடர்ந்து நிலைப்பதும் அரிது. ஏற்கெனவே அந்தக் காட்டில் திரியும் பெருவிலங்குகள் புதுக்குட்டியை ஏற்றுக்கொண்டால்தான் பிழைக்க முடியும். “அவனுடைய வளர்ச்சி நமக்குப் பயன்படாது” என்று வலிமையுள்ள ஒருவர் கருதிவிட்டால் தலைகீழாக நின்றாலும் அங்கே தலையெடுக்க முடியாது.

  - கவிஞர் மகுடேசுவரன்

  English summary
  Cinema essay about the introduction of an artist is not a matter

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more