twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்மாவதி சர்ச்சை: இந்திய சினிமாவின் புதிய சென்சார் போர்டா பாஜக?

    By Shankar
    |

    இந்திய சினிமாவில் தயாரிப்பு, நடிப்பு, விநியோகம் என மூன்று பிரிவுகளும்தான் சினிமா முதலீட்டையும், வருவாயை தீர்மானிக்கக் கூடிய துறைகள். இந்தி, தெலுங்கு, மலையாளம் இம் மூன்று மொழிகளிலும் இப்பிரிவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், தீர்மானிக்கும் சக்தியாக இருப்பவர்கள் இந்திய இஸ்லாமிய சமூகத்தினர்.

    இதனை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர அல்லது சீர்குலைக்க இந்து மதவாத அமைப்புகள் தொடர்முயற்சியில் இருந்து வந்தது கடந்த கால வரலாறு. அப்போதெல்லாம் இந்திய ஆட்சி அதிகாரத்தில் பாரதிய ஜனதா இல்லை.

    Is BJP turns a new censor board of Indian Cinema?

    இந்தி சினிமா வர்த்தகத்தை தீர்மானிக்கும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், பீகார் போன்ற பெரிய மாநிலங்கள் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களாக மாறிவிட்டன.

    சாதி, மதத்தை முன்னிறுத்தி இந்தி படங்கள் தயாரிப்பது குறைவு. மதம், மண் சார்ந்த பிரச்சினைகள் வந்தால் அதனைத் தீர்த்து வைக்கும் ஏகபோக நாட்டமையாக மும்பை சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே இருந்து வந்தார்.

    அவரது மறைவுக்குப் பின் அந்தப் பொறுப்பை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது. அதன் வெளிப்பாடே பத்மாவதி படத்திற்கு எதிராக ஒரு மாநிலத்தின் அமைச்சரே அறிக்கை வெளியிடும் நிகழ்வாக மாறியிருப்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    வட இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் ராஜபுத்திர சமூகத்தினர் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். இச்சமூகத்தை சேர்ந்த மகாராணி பத்மாவதி ஆட்சிக் காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் தான் பத்மாவதி என ராஜபுத்திரர்களால் கூறப்படுகிறது.

    சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் 'பத்மாவதி'.

    ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் உண்மைக்கு புறம்பாக திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ராஜபுத்திர சாதி அமைப்புகளான ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அப்படத்தை எதிர்த்து பல வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    தொடர் எதிர்ப்புகளை தொடர்ந்து பத்மாவதி படத்தின் ரிலீஸைத் தாங்களாக முன்வந்து தள்ளி வைப்பதாக தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 அறிவித்துள்ளது.

    இந்நிலையில், பத்மாவதி படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்காவிட்டால் படத்தை எங்கள் மாநிலத்தில் திரையிட விடமாட்டோம் என உத்திர பிரதேசமாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக கருத்து கூறிய அவர், "இஸ்லாமிய மன்னர்கள் தங்கள் படையெடுப்பின் மூலம் நமது நாட்டிற்க்கு பெரும் சேதத்தை உண்டாக்கினர். நமது நாட்டின் பாரம்பரியம் மற்றும் கண்ணியத்தைக் காப்பதற்காக தனது உடலில் தானே தீயிட்டு பத்மாவதி உயிரை மாய்த்துக் கொண்டது வரலாறு.

    எனவே, பத்மாவதி படத்தில் ராஜபுத்திரர்கள் ஏற்றுக் கொள்ளாத காட்சிகளை நீக்கும் வரை உத்திரப் பிரதேச மாநிலத்தில் பத்மாவதி படத்தைத் திரையிட அனுமதிக்க முடியாது என்பதை மாநில கேளிக்கை வரி மந்திரி என்னும் முறையில் அறிவிக்கின்றேன்," என்றார்.

    ஒரு மாநிலத்தின் துணை முதல்வரே பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக பேசுவது திரைப்பட துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்து வந்தன. தற்போது ஆட்சி அதிகாரத்தில் மதவாத அமைப்புகள் இருப்பதால் இம்முயற்சி உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

    உத்திரப் பிரதேச மாநில துணை முதல்வரின் எதிர்ப்பு குரல் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வமான அறிவிப்பாகவே அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.

    இந்திய திரையுலகின் படைப்பாளிகள் பாரதிய ஜனதாவின் மத வாதத்திற்கு எதிராக ஒன்று சேருவார்களா? அடங்கிப்போவார்களா என்கிற கேள்வி அரசியல், சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

    -இராமானுஜம்

    English summary
    Is BJP turns a new censor board of Indian Cinema? Here is an analysis
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X