என்ன சொல்றீங்க...பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீசா?... தயாரிப்பாளர்கள் சொல்வதென்ன?
சென்னை : மணிரத்னம் இயக்கி உள்ள பிரம்மாண்ட வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படம் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இதை கேட்டு ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய மிகப் பெரிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களாக வெளிவந்தது. மிகவும் புகழ்பெற்ற இந்த நாவலை சினிமாவாக இயக்க வேண்டும் என்பது பல டைரக்டர்களின் கனவு. இந்த முயற்சியில் பலரும் தோற்றுப் போன நிலையில், தனது கனவு படமாக இதை பான் இந்தியன் படமாக இயக்கி வெற்றி கண்டுள்ளார் டைரக்டர் மணிரத்னம்.

பான் இந்தியன் படம்
ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், பிரபு, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டிற்குள்ளேயே இரண்டு பாகங்களையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விரைவில் அப்டேட்
சமீபத்தில் இந்த படத்தில் யார், யார் எந்தெந்த கேரக்டர்களில் நடித்துள்ளார்கள் என்ற விபரம் வெளியானது. வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், ஆதித்ய சோழன் போன்றோரின் கேரக்டர்களில் தாங்கள் நடிப்பதை கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் போன்றோர் உறுதி செய்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள், ரிலீஸ் தேதி போன்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னது ஓடிடி ரிலீசா
2022ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் பொன்னியின் செல்வன் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மட்டுமின்றி, மணிரத்னத்தின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த வதந்திகள் பற்றி தயாரிப்பாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விளக்கம் தந்த தயாரிப்பு நிறுவனம்
இது பற்றி மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொன்னியின் செல்வன் படம் கண்டிப்பாக தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும். எந்த ஓடிடி தளத்திலும் ரிலீஸ் செய்யப்படாது. தியேட்டர் அனுபவத்தில் மட்டுமே ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பொன்னியின் செல்வன் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் என்பது ஆதாரமற்ற வதந்தி. ரசிகர்கள் இந்த படத்தை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் தியேட்டரில் வந்து கொண்டாடி, இந்த பெரிய பட்ஜெட் படத்தை பெரிய திரையில் பார்த்து மகிழ வேண்டும் என்றே விரும்புகிறோம் என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











