கமலின் அடுத்த படம் விருமாண்டி 2 ஆ...டைரக்டர் இவரா ?
சென்னை : விக்ரம் படத்தின் ரிலீசிற்கு முன்பே கமலின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகிவிட்டது. கமலை அடுத்து இயக்க போவது யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அரசியல், சினிமா என இரண்டிலும் பிஸியாக இருக்கும் கமல், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருடன் வில்லனாக விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ளனர். விக்ரம் படத்திற்காக தான் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கமல்.

மார்ச் 14 ல் விக்ரம் ரிலீஸ் தேதி
விக்ரம் படத்தின் ஷுட்டிங் முடிந்து விட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை டைரக்டர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான மார்ச் 14 ம் தேதியன்று அறிவிக்க உள்ளதாக சமீபத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் அறிவித்தது. இதனால் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே மாதத்தில் விக்ரம் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 நிலை என்ன
விக்ரம் படத்தை முடித்த பிறகு கமல், நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கு முடிவுக்கு வந்து பல மாதங்கள் ஆகியும் இந்தியன் 2 படத்தை எப்போது மீண்டும் துவங்க போகிறார்கள் என முடிவு செய்யப்படாமலேயே உள்ளது. இதனால் விக்ரம் படத்தை முடித்த கையோடு அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டாராம் கமல்.

கமலை இயக்க போவது இவரா
பா.ரஞ்சித், மகேஷ் நாராயணன், வெற்றிமாறன் என பல டைரக்டர்களிடம் கதை கேட்டு கமல் ஓகே சொல்லி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் கமலை அடுத்து இயக்க போவது யார் என்பது உறுதியாகாமல் இருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக டைரக்டர் முத்தைய்யா இயக்கும் படத்தில் தான் கமல் அடுத்து நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கிராமத்து கதை என சொல்லப்படுகிறது.

பட டைட்டில் இது தானா
கார்த்தியை வைத்து கொம்பன், விருமன் படங்களை இயக்கி முடித்துள்ள முத்தையா, ஒரு மாதத்திற்குள் விருமன் பட வேலைகளை முழுவதுமாக முடித்து விடுவாராம். அதற்கு பிறகு கமல் நடிக்கும் படத்தின் வேலைகளை துவக்க போகிறாராம். கமல்-முத்தையா இணையும் படத்திற்கு விருமாண்டி 2 என டைட்டில் வைக்க போகிறார்களாம். கதையும் கமலின் சூப்பர் ஹிட் படமான விருமாண்டி பட கதையின் தொடர்ச்சி தானாம். இந்த படத்தின் வேலைகள் மிகவும் ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளதாம். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











