விருமன் ரிலீஸ் தேதி மாற்றத்திற்கு இதுதான் காரணமா...ஆச்சரியத்தில் ரசிகர்கள்
சென்னை : கார்த்தி நடித்த 3 படங்கள் அடுத்தடுத்து ரிலீசிற்காக காத்திருக்கின்றன. பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என இந்த 3 படங்களுமே அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன.
கொம்பன் படத்தை இயக்கிய டைரக்டர் முத்தையா தற்போது இயக்கியுள்ள விருமன் படம் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரித்துள்ளது.

டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகும் படம் என்பதாலும், பருத்திவீரன் படத்திற்கு பிறகு கார்த்தி பக்கா கிராமத்து இளைஞன் ரோலில் நடித்திருப்பதாலும் ரசிகர்களிடம் இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருமன் படம் தந்தை - மகன் உறவை சொல்லும் கிராமத்து பொழுபோக்கு படமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள விருமன் படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதலில் ஆகஸ்ட் 31 ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட விருமன் படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதாவது ஆகஸ்ட் 11 ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே சமயம், ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட விக்ரமின் கோப்ரா பட ரிலீஸ் தள்ளி போவதாகவும் சொல்லப்படுகிறது. தொழில்நுட்ப காரணங்களால் படத்தின் ரிலீசை ஆகஸ்ட் 31 ம் தேதிக்கு படக்குழு தள்ளி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் விருமனுக்காக கோப்ரா தள்ளிவைக்கப்பட்டதா அல்லது கோப்ரா படத்திற்காக விருமன் முன்கூட்டியே ரிலீஸ் செய்யப்படுகிறதா என கோலிவுட்டில் கேள்வி பரவி வருகிறது. ஆனால் கோப்ரா படம் தள்ளி வைக்கப்பட்டதால், இரண்டு படங்களின் மோதலை தவிர்க்கவே விருமன் படத்தை முன்னாடியே ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் கமலின் விக்ரம் பத்திற்காக அருண் விஜய்யின் யானை பட ரிலீசும் இதே போல் தள்ளி வைக்கப்பட்டது. இரு படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாகி, வசூல் பாதிப்பதை தவிர்க்க ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ரிலீஸ் தேதியில் அட்ஜஸ்மென்ட் செய்து கொள்வது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருவது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











