சத்யராஜால் என் சினிமா வாழ்க்கை சீரழிந்ததா? உண்மையைப் போட்டுடைத்த நடிகை விசித்ரா!
தனது சினிமா வாழ்க்கை சீரழிய நடிகர் சத்யராஜ் காரணமில்லை என்று நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை: தன்னுடைய சினிமா வாழ்க்கை சீரழிய நடிகர் சத்யராஜ் தான் காரணமா என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகை விசித்ரா.
90களில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிப் படங்களிலும் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகை விசித்ரா. கடந்த 2002ம் ஆண்டு இரவு பாடகன் படத்தில் கடைசியாக நடித்தார். திருமணத்திற்குப் பின் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்தவர், கணவரின் ஹோட்டல் தொழிலைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அதாவது 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பட வாய்ப்புகளைத் தேடும் பணியை அவர் தொடங்கியுள்ளார். இதற்காக தனியே ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளார்.
நடிகை விசித்ரா தற்போது டிவிட்டரில் இணைந்து, தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அரவது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், "தமிழில் முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது. சத்யராஜ் மாம்ஸால போய்டுச்சு" என கமெண்ட் செய்தார்.
இதற்கு பதிலளித்த விசித்ரா, "எனது திறமை மீது சத்யராஜ் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படமான வில்லாதி வில்லனில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை அளித்தார். அந்த காலகட்டத்தில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் எனக்கு வந்ததால், என்னால் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது", என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











