ஆர்ஆர்ஆர் பார்ட் 2 வருமா... முக்கிய பிரபலம் சொன்ன ஆச்சரிய தகவல்
ஐதராபாத் : ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் மாஸ் ஹிட் ஆனதால் அதன் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர். இதற்கு முக்கிய பிரபலம் ஒருவர் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
தான் பிரம்மாண்ட பட இயக்குனர், பிளாக் பஸ்டர் ஹிட் டைரக்டர் என்பதை எஸ்.எஸ்.ராஜமெளலி மீண்டும் நிரூபித்துள்ளார். ராஜமெளலி இயக்கிய பாகுபலி எவர் க்ரீன் பிளாக்பஸ்டர் படமாக இருந்து வருகிறது. பாகுபலி படத்தின் முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் செம ஹிட் ஆனது.

பாகுபலி 3 வருமா
இதனால் பாகுபலி படத்தின் அடுத்த பாகம் வருமா என பல ஆண்டுகளாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது பற்றி ஆர்ஆர்ஆர் ப்ரோமோஷனின் போது ராஜமெளலியிடமே கேட்கப்பட்டது. பாகுபலி தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலான படம் என்றும், மூன்றாம் பாகம் நிச்சயம் வரும். ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும் என்றும் கூறி இருந்தார்.

800 கோடி வசூலித்த ஆர்ஆர்ஆர்
இதுவரை பாகுபலி படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என கேட்டு வந்தவர்கள் ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ், அதன் பிரம்மாண்ட வசூல் சாதனையை பார்த்து விட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர். ஆர்ஆர்ஆர் படம் இதுவரை உலக அளவில் 800 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ஆர்ஆர்ஆர் பார்ட் 2 வருமா
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் அடுத்த பாகம் பற்றிய கேள்விக்கு பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ள டைரக்டர் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக நிச்சயம் வாய்ப்புள்ளது. இது பற்றிய ஐடியாவை ராஜமெளலியும், ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர் இடம் கூறி உள்ளார். அவர்களுக்கும் அந்த கதை மிகவும் பிடித்துள்ளது என்றார்.

இப்போதைக்கு வாய்ப்பில்லை
அதே சமயம் தற்போதைய சூழலில் ஆர்ஆர்ஆர் பார்ட் 2 உருவாக வாய்ப்பில்லை. மகேஷ் பாபுவை வைத்து 500 கோடி பட்ஜெட்டில் ராஜமெளலி படம் இயக்க போகிறார். இந்த படத்தை இயக்கி முடித்த பிறகே ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகம் இயக்குவது குறித்து ராஜமெளலி முடிவு செய்வார் என்றும் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். இதனால் ஆர்ஆர்ஆர் பார்ட் 2, பாகுபலி பார்ட் 3 வரும் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











