வலிமை ரிலீசுக்கு பிப்ரவரி 24 ஐ போனி கபூர் தேர்வு செய்தது ஏன்னு தெரியுமா ?
சென்னை : அஜித் நடித்துள்ள வலிமை படத்தை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளார். வலிமை படத்தை பிப்ரவரி 24 ல் ரிலீஸ் செய்ய போனி கபூர் திட்டமிட்டுள்ளதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு பிப்ரவரி 24 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடித்துள்ளார்.

பிப்ரவரி 24ஐ தேர்வு செய்த போனிகபூர்
வலிமை படத்தை பொங்கலுக்கே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடைசி நிமிடத்தில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட மற்ற படங்கள் மார்ச் மாத ரிலீசை உறுதி செய்துள்ளன. ஆனால் வலிமை மட்டும் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவித்தார் போனி கபூர்.

உலகம் முழுவதும் பிரம்மாண்ட ரிலீஸ்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ள வலிமை படத்தின் டிரைலர் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த டிரைலரை ரிலீஸ் செய்து விட்டு அஜித்தை, மகேஷ்பாபு, சுதீப் உள்ளிட்ட பிற மொழி ஹீரோக்களும், தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இந்நிலையில் வலிமை படத்தை ஜப்பான், மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்கு இப்படி ஒரு காரணமா
பிப்ரவரி 24 ம் தேதியன்று வலிமை படத்தை மட்டுமல்ல போனி கபூர் தயாரிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தையும் அன்று தான் ரிலீஸ் செய்ய நினைத்துள்ளாராம். மற்ற படங்களின் அப்டேட்களையும் பிப்ரவரி 24 ம் தேதியே வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். போனி கபூரின் மனைவியும், பிரபல நடிகையுமான ஸ்ரீதேவியின் நினைவு நாள் என்பதால் தான் தனது மனைவியின் நினைவாக வலிமை படத்தின் ரிலீசுக்கு பிப்ரவரி 24 ம் தேதியை போனி கபூர் தேர்வு செய்தாராம்.

அஜித் படங்களை தயாரிக்க காரணம்
ஸ்ரீதேவியின் விருப்பத்தின் பேரிலேயே அவர் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அஜித் கெஸ்ட் ரோலில் நடித்தார். அப்போதே போனி கபூர் தயாரிப்பில் மற்றொரு படத்தில் நடிக்க வேண்டும் என அஜித்திடம் ஸ்ரீதேவி கோரிக்கை வைத்தாராம். அதற்காக தான் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர் கொண்ட பார்வை படத்தை அஜித்தை வைத்து எடுத்தார்களாம். இந்த படம் வெற்றி அடைந்ததாலேயே அடுத்தடுத்த அஜித் படங்களை தயாரிக்க போனி கபூர் முடிவு செய்தாராம். மனைவியின் விருப்பத்திற்காக அஜித் படங்களை தயாரிக்க துவங்கிய போனி கபூர், தற்போது வலிமை படத்தை ஸ்ரீதேவியின் நினைவு நாளிலேயே ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











