என்னது...வலிமை தீபாவளி ரிலீசா...டிரெண்டிங்கில் பட்டையை கிளப்பும் தல தீபாவளி
சென்னை : டைரக்டர் வினோத் இயக்கத்தில் அஜித் கடந்த 2 ஆண்டுகளாக நடித்து வரும் படம் வலிமை. நேர் கொண்ட பார்வை படத்திற்கு பிறகு வினோத் - அஜித் கூட்டணியில் அஜித்தின் 60 வது படமாக உருவாகும் இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.
படத்திற்கு பூஜை போட்டது போல் எந்த அப்டேட்டும் வெளியிடாமல், படத்தின் வேலைகளை பரம ரகசியமாக கவனித்து வந்தனர் வலிமை படக்குழுவினர். 2019 ம் ஆண்டு இறுதியில் அல்லது 2020 ம் ஆண்டின் துவக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்யவே படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய சண்டைக் காட்சிகள் மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
இதனால் படத்தை முடிக்க முடியாமல் படக்குழு திணறி வந்தது. இதற்கிடையில் கொரோனா காரணமாக 60 வயதிற்கு மேல் உள்ள நடிகர்கள் சிலர் படத்தில் இருந்து பாதியிலேயே விலகியதால் அந்த காட்சிகளை வேறு மீண்டும் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தாலும் ஸ்பெயினில் எடுக்க திட்டமிடப்பட்டிருந்த இறுதிக் காட்சிகளை மட்டும் எடுக்க முடியவில்லை.

அட்டகாசமாக ஃபஸ்ட்லுக்
இதற்கிடையில் அஜித் ரசிகர்கள், போகிற இடமெல்லாம் அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டே படத்தை வேற லெவலுக்கு பிரபலமாக்கி விட்டனர். படம் துவங்கியது முதல் ரசிகர்கள் அப்டேட் கேட்டாலும், ஹாஷ்டாக் உருவாக்கி டிரெண்டிங் ஆக்கினாலும் படக்குழு அதனை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் படத்தின் வேலைகள் 90 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், ஃபஸ்ட்லுக் ஆகியவற்றை வெளியிட்டு, அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

நாங்க வேற மாரி
அதைத் தொடர்ந்து படத்தின் சிங்கிள் டிராக் பாடலையும் வெளியிட்டு, சாதனை படைக்க வைத்தனர். நாங்க வேற மாரி என துவங்கும் பாடலை வைத்து ஆராய்ச்சி கட்டுரையே வெளியிடும் அளவிற்கு ஏராளமான தகவல்களை ஆராய்ந்து வெளியிட்டு விட்டனர் அஜித் ரசிகர்கள்.

ரஷ்யா சென்ற படக்குழு
இந்நிலையில் படத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழு, க்ளைமாக்ஸ் பைக் சேஷிங் காட்சிகளை ஸ்பெயினுக்கு பதிலாக ரஷ்யாவில் எடுத்து முடிக்க முடிவு செய்து, சமீபத்தில் ரஷ்யா கிளம்பி சென்று விட்டது. அங்கு ஆகஸ்ட் 20 ம் தேதி இறுதிக்கட்ட படப்பிடிப்பை துவங்க உள்ளதாகவும், 5 முதல் 7 நாட்கள் நடக்கும் படப்பிடிப்போடு ஷுட்டிங் முழுவதும் நிறைவடைய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சிங்கிள் எப்போ
இதனால் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக, வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை யுவன் தயார் செய்து விட்டதாகவும் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் டைரக்டர் வெங்கட் பிரபு சமீபத்தில் அப்டேட் தந்தார். இதனால் ஆகஸ்ட் 15 ம் தேதியான நேற்று படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் நேற்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

அக்டோபரில் தல 61
இதற்கிடையே அஜித்தின் அடுத்த படமான தல 61, டைரக்டர் வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணியில் அமைய உள்ளதாகவும், இந்த படத்தின் ஷுட்டிங் அக்டோபர் மாதம் துவங்கப்பட உள்ளதாகவும் சமீபத்தில் மற்றொரு தகவல் வெளியானது. இதனால் அக்டோபர் மாதத்திற்கு முன் வலிமை படத்தின் ஒட்டுமொத்த வேலைகளையும் முடித்து விடுவார்கள் என கூறப்பட்டது.

எப்போ ரிலீஸ்
ரஷ்யாவில் நடக்கும் ஷுட்டிங் முடிந்த உடன் படக்குழுவினர் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக கூறப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவிற்கு நெருங்கிய தகவல்கள் கூறி வந்தன.

டிரெண்டங்கில் தல தீபாவளி
இந்த நிலையில் இன்று திடீரென Thaladiwali என்ற ஹாஷ்டாக் திடீரென ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. வலிமை படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்
கடந்த 6 ஆண்டுகளாக அஜித் நடித்த படங்கள் அனைத்தும் தீபாவளி அன்றே ரிலீஸ் செய்யப்படுவதால் வலிமை படமும் தீபாவளி ரிலீசாக தான் இருக்கும், இந்த தீபாவளி தல தீபாவளி எனவும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே ரஜினி நடித்த அண்ணாத்த படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணாத்த படத்துடன் வலிமை மோதினால் நிச்சயம் அது புதிய சாதனையாக இருக்கும் என அஜித் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

வசூல் சாதனை நிச்சயம்
வலிமை படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட்டால் முதல் நாளே சாதனை படைக்கும் அளவிற்கு பாக்ஸ் ஆபிசில் வசூல் தாறுமாறாக எகிறும் என பலர் கருத்து கூறி வருகின்றனர். படத்தின் டீசர், டிரைலர், ரிலீஸ் தேதி என எதுவும் வெளியிடப்படாத, எப்போது வெளியிடுவார்கள் என உறுதியாக தெரியாத நிலையில் வலிமை படம் தீபாவளி ரிலீஸ் என முடிவு செய்து அதை டிரெண்டிங்கும் ஆக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











