பிக்பாஸிற்கு பிறகு மீண்டும் இணையும் ஐக்கி – இசைவாணி...இந்த கூட்டணிக்கு காரணம் இதுதான்
சென்னை : பாடகி, பாடல் எழுத்தாளர், நடிகை, டாக்டர் என பல முகங்களைக் கொண்டவர் ஐக்கி பெர்ரி. தஞ்சாவூர் பெண்ணான இவர், வெளிநாட்டு பெண்ணை போல் தோற்றம் அளித்தாலும், தமிழில் ராப் பாடல்களை பாடி தமிழை வளர்த்து வருகிறார்.
டாக்டரான ஐக்கி பெர்ரி, இசை மீதான ஆர்வத்தால் ராப் பாடல்கள் பாட துவங்கினார். தானே தமிழில் ராப் பாடல்கள் எழுதி, பாடி பல ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் ஐக்கி. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு பலருக்கும் தெரிந்தவர் ஆகி விட்டார் ஐக்கி.

57 வது நாளில் வெளியேறிய ஐக்கி
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ஐக்கி பெர்ரி, நிகழ்ச்சியின் 57 வது நாளில் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வாரத்தில் ஐக்கி பெர்ரி வெளியேற்றப்பட்டார்.

சோஷியல் மீடியாவில் பிஸி
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோஷியல் மீடியாவில் மிகவும் பிஸியாகி விட்டார் ஐக்கி பெர்ரி. தனது ரசிகர்களுடன் சோஷியல் மீடியா லைவில் பேசி அசத்தி வருகிறார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய அடுத்த நாளே பேட்டி கொடுத்து அனைவரையும் அசர வைத்தார் ஐக்கி.

ஐக்கியின் சர்ப்ரைஸ் விசிட்
இதைத் தொடர்ந்து சர்ப்ரைஸ் விசிட்டாக பிக்பாஸில் சக போட்டியாளரான இமான் அண்ணாச்சி வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார் ஐக்கி. இமான் குடும்பத்தினர்களும் ஐக்கிக்கு தடபுடலாக விருந்து வைத்து, அன்பை பொழிந்துள்ளனர். எதிர்பாராத இந்த அன்பால் திக்குமுக்காடி போய் கண் கலங்கி விட்டாராம் ஐக்கி பெர்ரி.

இசைவாணியுடன் சந்திப்பு
அதோடு நிற்காமல் நேற்று மற்றொரு போட்டியாளரும், பிக்பாஸ் வீட்டிற்குள் ஐக்கிக்கு நெருக்கமாக இருந்தவருமான இசைவாணியின் வீட்டிற்கும் சென்றுள்ளார் ஐக்கி பெர்ரி. சென்னையில் உள்ள இசைவாணி வீட்டிற்கு சென்ற ஐக்கி, அங்கு இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, லைக்குகளை அள்ளி வருகிறார்.

இதுக்கு தான் கூட்டணியா
அதற்கு பிறகு முக்கிய அறிவிப்பு ஒன்றையும் ஐக்கி வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே இசைவாணியும், ஐக்கி பெர்ரியும் இணைந்து இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட திட்டமிட்டார்களாம். விரைவில் இதற்கான பணிகளை இருவரும் துவக்க போகிறார்களாம். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்களுக்கு அளித்த ஆதரவை ரசிகர்கள் இனியும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என ஐக்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

கானா பாடகி இசைவாணி
கானா பாடகியான இசைவாணி, பா.ரஞ்சித்தால் சினிமா உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இளையராஜா உள்ளிட்ட இசை பிரபலங்கள் பலரும் இசைவாணியை நேரில் அழைத்து பாராட்டி உள்ளனர். பிபிசி வெளியிட்ட ஆளுமை பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் இசைவாணி. முன்பு இருந்ததை விட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இசைவாணிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து விட்டதாம்.


Click it and Unblock the Notifications











