சிம்பு - வெற்றிமாறனின் அரசன்.. வேலையை ஸ்டார்ட் செய்த அனிருத்?.. என்ன செய்யப்போறாரோ?
சென்னை: வெற்றிமாறனும், சிம்புவும் அரசன் படத்தில் இணைந்திருக்கிறார்கள். வடசென்னை யுனிவர்ஸில் இப்படம் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், பெயரும் சமீபத்தில்தான் வெளியிடப்பட்டன. சூழல் இப்படி இருக்க இப்படத்துக்கு அனிருத்தான் இசையமைக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில், புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது.
வெற்றிமாறனின் இயக்கத்தில் சிம்பு நடிக்க வேண்டுமென்பது அவரது ரசிகர்களின் நீண்டகால ஆசை. அது இப்போது நிறைவேறப்போகிறது. ஏற்கனவே அவர்கள் வடசென்னை படத்தில்தான் இணைந்திருக்க வேண்டியது. ஆனால் அப்போது சில காரணங்களால் அந்தக் கூட்டணி இணையாமல் போய்விட்டது. அடுத்தடுத்து வெற்றிமாறனும், சிம்புவும் தங்களது பாதையில் பிஸியாக ஆரம்பித்துவிட்டதால் இக்கூட்டணி இணைவதற்கு இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன.
கலைப்புலி தாணு தயாரிப்பு: இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவிருக்கிறார். இவர்தான் வாடிவாசல் படத்தை தயாரிப்பதாக இருந்தது. அப்படமும் நடக்கவில்லை. எனவே தன்னிடம் இருக்கும் வெற்றிமாறனின் கால்ஷீட்டை சிம்புவை வைத்து படம் செய்ய பயன்படுத்திக்கொண்டார். வெற்றியும் மகிழ்ச்சியோடு ஒத்துக்கொண்டார். நிச்சயம் படம் வித்தியாசமான உணர்வையும், அதிரடியையும் கொடுக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

அரசன் பெயருக்கு சுமார் வரவேற்பு: இப்படம் பற்றிய அறிவிப்பு வந்ததுமே பெயர் என்னவாக இருக்கும் என்ற ஆவல் அனைவருக்குமே எழுந்தது. ஆனால் அரசன் என்று பெயர் வைக்கப்பட்டது பெரும்பாலானோருக்கு திருப்தி தரவில்லை. பலர் மீம்ஸ்களையும் க்ரியேட் செய்து சுத்தலில் விடுகிறார்கள். அதேசமயம் வெற்றியை பொறுத்தவரை படத்தின் பெயரைவிடவும் அதன் தரத்தில்தான் சம்பவம் செய்வார். எனவே யாரும் பயப்பட தேவையில்லை என்றும் குரல்கள் கேட்கின்றன.
யார் இசையமைப்பாளர்?: வெற்றிமாறனின் படங்களில் இடம்பெறும் இசை பலமாக கொண்டாடப்படும். பொல்லாதவன் தீம் இசை, ஆடுகளம் பாடல்கள், வடசென்னை தீம் மியூசிக், அசுரன் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களின் ப்ளே லிஸ்ட்டில் தவறாமல் இடம்பிடிக்கும். ஜிவி, சந்தோஷ் நாராயணனை விட்டு அனிருத்திடம் இந்தப் படத்துக்காக அவர் செல்லவிருக்கிறார் என்று கூறப்பட்டது. அது பெரும் அச்சத்தை ரசிகர்களிடம் உண்டு செய்தது.
ஏன் அந்த பயம்?: ஏனெனில் அனிருத் இப்போதைக்கு டாப் இசையமைப்பாளராக இருந்தாலும்; கதைக்கு தேவையான இசையை அவர் கொடுப்பதே இல்லை என்ற விமர்சனம் 90 சதவீதம் பேரிடம் இருக்கிறது. அண்மையில் வெளியான கூலி, இந்தியன் 2 ஆகிய படங்களிலும் இதே விமர்சனங்கள் எழுந்தன. எனவே இவர் அரசன் படத்தில் இணைந்தால் இசையின் தரம் எப்படி இருக்குமோ என்ற கேள்வி அனைவரிடமும் இயல்பாகவே எழுந்தது.
வேலையை ஆரம்பித்த அனிருத்?: மேலும் அவருக்கு பதிலாக வேறு யாரையாவது இசையமைக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்தன. போஸ்டரில்கூட இசையமைப்பாளர் பெயரை குறிப்பிடவில்லை. இந்நிலையில் அனிருத் தனது ஸ்டூடியோவில் அமர்ந்து இசையமைப்பது போன்ற புகைப்படம் ஒன்று பரவி, அதில், சிம்பு - வெற்றிமாறனின் அரசன் படத்துக்கான வேலையை அனிருத் ஸ்டார் செய்துவிட்டது போல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, ஒருவேளை அனிருத் இசையமைத்தால் அரசன் படத்தை அரண்மனையில் வைப்பது போன்று அனிருத் வேலை செய்வாரா இல்லை தனது ஸ்டைலில் இசையமைத்து சொதப்பிவிடுவாரா என்று கேள்வியை முன்வைத்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











