அந்நியன் ரீமேக்கில் ஜாக்கி சான்... டைரக்டர் ஷங்கர் இல்லையா ?
சென்னை : டைரக்டர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து ஆர்சி 15 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போதே, அந்நியன் இந்தி ரீமேக்கின் அறிவிப்பையும் வெளியிட்டார் ஷங்கர்.
தமிழில் விக்ரம் நடித்து, 2005 ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய பிளாக்பஸ்டர் படமான அந்நியன் படத்தை இந்தியிலும் தானே இயக்க போவதாகவும், இதில் விக்ரம் நடித்த லீட் ரோலில் ரன்வீர் சிங் நடிப்பார் எனவும் ஷங்கர் கூறி இருந்தார்.

அந்நியன் ரீமேக்கிற்கு எதிர்ப்பு
இதற்குள் இந்தியன் 2 விவகாரமும் முடிவுக்கு வந்து விட்டதால் ஆர்சி 15 மற்றும் இந்தியன் 2 படங்களின் வேலைகளை முடித்த பிறகு அந்நியன் இந்தி ரீமேக்கின் வேலைகளை ஷங்கர் துவக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள், தமிழில் அந்நியன் படத்தை தயாரித்த ஆஸ்கார் ரவிச்சந்திரன், ஷங்கர் வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

சட்ட நடவடிக்கை எடுப்பேன்
அந்நியன் படத்தை இயக்கியது மட்டும் தான் ஷங்கர். அந்த படத்தின் முழு உரிமையும் தன்னிடம் தான் உள்ளதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறி இருந்தார். அதையும் மீறி அந்நியன் படத்தை ரீமேக் செய்யும் முயற்சியின் ஷங்கர் இறங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

அமைதியான ஷங்கர்
ஆஸ்கார் ரவிச்சந்திரனின் இந்த அறிவிப்பிற்கு பிறகு ஷங்கர் தரப்பில் இருந்து அந்நியன் ரீமேக் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆர்சி 15 படத்தின் வேலைகளில் ஷங்கர் தீவிரம் காட்டி வருகிறார். இதை முடிப்பதற்குள் கமலும் தற்போது நடிக்கும் விக்ரம் படத்தின் வேலைகளை முடித்து விடுவாராம். அதன் பிறகு இந்தியன் 2 வேலைகளை கவனிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்நியன் ரீமேக்கில் ஜாக்கி சான்
லேட்டஸ்ட் தகவலின்படி, தானே அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ரவிச்சந்திரன் முடிவு செய்திருக்கிறாராம். சர்வதேச சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான்னுடன் பாலிவுட் டாப் ஹீரோ ஒருவரை ஹீரோவாக வைத்து அந்நியன் படத்தை ரீமேக் செய்ய போகிறாராம். ஜாக்கி சான், ரவிச்சந்திரனின் நெருங்கிய நண்பராம். 2008 ல் தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக ரவிச்சந்திரன் அழைத்த போது ஜாக்கி சான் சென்னை வந்தார்.

ஏப்ரலில் ஷுட்டிங்
ஜாக்கி சானை வைத்து அந்நியன் ரீமேக் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தின் ஷுட்டிங் 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட உள்ளதாம். ஆனால் இந்த படத்திற்கு டைரக்டர் யார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. ஷங்கர் இந்த படத்தை இயக்க போகிறாரா இல்லையா அல்லது வேறு ஒருவரை வைத்து ரவிச்சந்திரன் இந்த படத்தை தயாரிக்க போகிறாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











