»   »  ஷூட்டிங் ஸ்பாட் ஆன சென்னை சிறை

ஷூட்டிங் ஸ்பாட் ஆன சென்னை சிறை

Subscribe to Oneindia Tamil

120 வயது கொண்ட சென்னை மத்திய சிறையில் படப்பிடிப்புகளை நடத்த சிறைத்துறை அனுமதி அளித்துள்ளதால் சினிமாக்காரர்கள் குஷியாகியுள்ளனர்.

சென்னை நகரின் எழிலுக்கு எழிலூட்டும் கூவம் நதிக்கரை ஓரத்தில் 120 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதுதான் சென்னை மத்திய சிறை. மிக மிக பழமையான கட்டடமான இந்தச் சிறை வளாகம் சமீபத்தில் சேவையை முடித்துக் கொண்டது.

புழல் பகுதியில் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட சிறை வளாகத்திற்கு சென்னை மத்திய சிறை மாற்றப்பட்டது. இதையடுத்து சென்னை சிறை காலியானது.

மத்திய சிறை காலியாக இருப்பதால் இங்கு ஷூட்டிங் நடத்த அனுமதிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை சிறைத்துறை ஏற்றுக் கொண்டுள்ளது.

150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை மத்திய சிறையில் 257 அறைகள் உள்ளன. விசாரணைக் கைதிகளை அடைக்க 1315 அறைகள் உள்ளன.

எம்.ஜி.ஆர் காலத்தில் இந்த சிறை வளாகத்தில் சில படங்களின் ஷூட்டிங் நடந்துள்ளது. பின்னர் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கமல்ஹாசனின் மகாநதி படத்துக்கு சிறப்பு அனுமதி கொடுத்து இங்கு படப்பிடிப்பை நடத்த அனுமதித்தனர். அதன் பின்னர் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் செட் போட்டும், ஆந்திராவுக்குப் போயும் சிறை சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தனர் சினிமாக்கார்ரகள். இந்த நிலையில் மீண்டும் சிறைக்குள் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சினிமா துறையினர் சந்தோஷமாகியுள்ளனர்.

படப்பிடிப்புக்கு மத்திய சிறை திறந்து விடபப்ட்டதைத் தொடர்ந்து முதல் ஆளாக பகடை படக் குழுவினர் ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். இப்படத்தில் ராஜ்கிரண், தாரகரத்னா ஆகியோர் நடிக்கின்றனர். தாரக ரத்னா மறைந்த என்.டி.ஆரின் பேரன் என்பது நினைவிருக்கலாம். ராஜ்கிருஷ்ணா படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்புக்குத் திறந்து விடப்பட்டதால் சென்னை மத்திய சிறை வளாகம், துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பிரகாசமான விளக்குகள், ஜெனரேட்டர், கேமராமேன் என களை கட்டிக் காணப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil