twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் இந்திய சினிமா நூற்றாண்டுவிழா - ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

    By Shankar
    |

    Jayalalithaa to inaugurate 100 years of Indian Cinema event in Chennai
    சென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வரும் 21-ம் தேதி தொடங்கி நான்கு தினங்கள் சென்னையில் நடக்கிறது.

    முதல்வர் ஜெயலலிதா இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.

    இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே, கடந்த 1913-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி அன்று 'ராஜா அரிச்சந்திரா' என்ற படத்தை வெளியிட்டார்.

    ஜெயலலிதா, பிரணாப் முகர்ஜி

    இந்தியாவில் வெளியான முதல் திரைப்படம் அதுதான். தொடர்ந்து மும்பை மற்றும் சென்னையில் இருந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாக தொடங்கின.முதல் சினிமா வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த ஆண்டு (2013) இந்திய சினிமா நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.சென்னையில், சினிமா நூற்றாண்டு விழாவை 4 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. வருகிற 21-ந் தேதி, முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

    நிறைவு விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார்.

    நேரு உள்விளையாட்டு அரங்கில்

    சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா நடைபெறுவது தொடர்பாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் நேற்று மாலை நிருபர்களிடம் கூறுகையில், "இந்திய சினிமா நூற்றாண்டு விழா, செப்டம்பர் 21-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பொறுப்பேற்று நடத்துகிறது.இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை, இதுபோன்ற மாபெரும் விழா நடத்தும் முயற்சி, முதல்வர் ஜெயலலிதாவின் முழு ஒத்துழைப்பு மூலமாக மட்டுமே சாத்தியமானது.

    தொடக்க விழா

    செப்டம்பர் 21-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து, விழாவுக்கு தலைமை தாங்குகிறார். தொடர்ந்து 22-ந் தேதி காலை கன்னட சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும், அன்று மாலை தெலுங்கு சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும், 23-ந் தேதி காலை மலையாள சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

    நிறைவு விழா

    அனைத்து இந்திய சினிமா உலகினரும் பங்கு பெறும் நிறைவு நாள் உச்சகட்ட நிகழ்ச்சி 24-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார்கள். கவுரவ விருந்தினராக தமிழக கவர்னர் கே.ரோசய்யா பங்கேற்கிறார்.விழாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து பல அமைச்சர்களும் ரஜினி - கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள்.

    அமிதாப்பச்சன்

    நிறைவு நாள் உச்சக்கட்ட நிகழ்ச்சியில், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்துகொள்கிறார். அவருடன் வட இந்திய நடிகர்-நடிகைகள் பலரும் பங்கேற்கிறார்கள். சினிமா நூற்றாண்டு விழாவின் முன் நிகழ்வுகளாக சென்னை நகரத்தில் பொதுப் பூங்காக்களை ஒலி-ஒளியினால் அலங்கரித்து, அதில் சினிமா கலை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். பழைய சினிமா படங்களும் திரையிடப்படும். சென்னை கடற்கரையிலும் பழைய சினிமா படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும்.

    இலவச சினிமா

    சென்னை சத்யம், அபிராமி ஆகிய திரையரங்குகளில் வருகிற 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பொது மக்களுக்கு பழைய சினிமா படங்கள் இலவசமாக காட்டப்பட இருக்கிறது. சென்னை நகரமே விழாக் கோலம் பூணும்படி, நகரை சிறப்பாக அலங்கரிக்க இருக்கிறோம்.

    தென்னிந்திய சினிமா சங்கங்கள், குறிப்பாக தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழாடு இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கத்தினர் அனைவரும் உரிய பங்களிப்பை அளிக்க முன்வந்து இருக்கிறார்கள்.

    ஒரு வாரம் விடுமுறை

    18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தமிழ்நாட்டில் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற ஆதரவும், முழு ஒத்துழைப்பும் கொடுத்து, தாய் அன்போடு உதவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்," என்றார்.

    கேயார்

    பேட்டியின்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் கேயார் மற்றும் புதிய நிர்வாகிகள், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பிலிம் சேம்பர் செயலாளர் எல்.சுரேஷ், பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், 'பெப்சி' தலைவர் அமீர் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

    24-ம் தேதி சினிமா காட்சிகள் ரத்து

    தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் பேசும்போது, "செப்டம்பர் 24-ந் தேதி சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும்," என்றார்.

    English summary
    CM Jayalalithaa has accepted to launch the '100 years of Indian Cinema' celebration in Chennai on September 21 at Nehru Indoor Stadium.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X