»   »  இயக்குநர் ஜீவா ரஷியாவில் மரணம்

இயக்குநர் ஜீவா ரஷியாவில் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தாம் தூம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்த பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா அங்கு ஹோட்டல் அறையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் ஜீவா(44). இவர் மலையாளப் படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர்.

தமிழில் அக்னி நட்சத்திரம், தேவர் மகன், ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்களில் அவர் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தார்.

பின்னர் காதலன் படம் மூலம் ஒளிப்பதிவாளரானார். அதன் பின்னர் இயக்குநர் ஷங்கரின் பெரும்பலான படங்களுக்கு ஜீவாதான் கேமராமேனாக இருந்துள்ளார்.

ஒளிப்பதிவில் பல உத்திகளைப் புகுத்தி தமிழ் சினிமாவுக்கு புது கெளரவத்தைத் தேடிக் கொடுத்தவர் ஜீவா. ஒளிப்பதிவாளராக விளங்கி வந்த ஜீவா பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்தார். 12பி, உள்ளம் கேட்கமே, சமீபத்தில் வெளியான உன்னாலே உன்னாலே ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது தாம்தூம் என்ற படத்தை இயக்கி வந்தார். ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ரஷ்யாவில் நடந்து வந்தது. இதற்காக படப்பிடிப்புக் குழுவினருடன் ரஷ்யா சென்றிருந்தார் ஜீவா.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தங்கியிருந்த அவர் இன்று படப்பிடிப்பு முடிந்து அவர் சென்னை திரும்புவதாக இருந்தார். இந்த நிலையில் நேற்று ஜீவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்புக் குழுவினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜீவா பரிதாபமாக இறந்தார்.

ஜீவாவுக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். ஜீவா இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 40 விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். இந்தியில் 10 படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் அவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பிரபல படங்களில் காதலன், இந்தியன், ஜென்டில்மேன், வாலி, குஷி ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

பிரியதர்ஷன் இயக்கிய பெரும்பாலான படங்களில் ஜீவாதான் கேமராமேனாக இருந்தார். ஜீவாவின் மனைவி அனீஷா, ஜீவாவின் படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளார்.

ஜீவாவின் உடல் நாளை சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.ஜீவாவின் மரணத்தால் தமிழ்த் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil