அதகளம் செய்யும் ஜான் விக் 4 ட்ரெய்லர்… ஹாலிவுட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த ஆக்சன் ட்ரீட்
வாஷிங்டன்: ஹாலிவுட்டில் ஜான் விக் படத்தின் 4ம் பாகத்திற்கான ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகியுள்ள ஜான் விக் படம் ஹாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது வெளியான ஜான் விக் 4 ட்ரெய்லருடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

ஹாலிவுட்டின் ஆக்சன் அசுரன்
ஹாலிவுட் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமான படங்களில் முக்கியமான ஜான் விக். இதுவரை ஜான் விக் படத்தின் 3 பாகங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளன. இந்நிலையில் தற்போது ஜான் விக் 4ம் பாகமும் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் மட்டுமின்றி இந்திய ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கீனு ரீவ்ஸ்ஸின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும். ஒரு வளர்ப்பு நாய்க்காக கூட தன் உயிரையே துச்சமென நினைத்து எதிரிகளை பந்தாடுவார் இந்த ஜான் விக்.

ட்ரெய்லர் வெளியானது
இந்நிலையில், ஜான் விக் படத்தின் 4ம் பாகத்திற்கான ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. முதல் மூன்று பாகங்களைப் போலவே நான்காம் பாகத்திலும் கீனு ரிவ்ஸின் ஆக்சன் காட்சிகள் அமர்க்களமாக வந்துள்ளன. ஆங்கிலம், தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகியுள்ள ஜான் விக் 4 ட்ரெய்லர், ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன. சாட் ஸ்டெஹெல்ஸ்கி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கீனு ரீவ்ஸ், டோனி யென், ஸ்காட் அட்கின்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதுதான் கதையா?
ஜான் விக் நான்காம் பாகத்தில் ஸ்காட் அட்கின்ஸுடன் ஜான் விக் ஒரு இரவு நேர விளையாட்டில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார். இரவில் தொடங்கி அதிகாலை நடக்கும் இந்தப் போட்டியில் ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மொத்த கதையும். மெதுவாக தொடங்கும் ட்ரெய்லர் போகப் போக அசுர வேகத்தில் பரபரக்கும் ஆக்சன் காட்சிகளுடன் பிரமிக்க வைக்கிறது. கீன் ரீவ்ஸின் பெர்பாமன்ஸ் பற்றி கேட்கவே வேண்டாம், ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

ரிலீஸ் தேதி
ஜான் விக் 4 ட்ரெய்லருடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம், அடுத்தாண்டு, அதாவது 2023 மார்ச் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜான் விக் 4 படத்தின் ட்ரெய்லருடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஹாலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சமீபத்தில் தான் அவதார் படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பும் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஜான் விக் 4 ட்ரெய்லர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜான் விக் 4 தமிழ் மொழியிலும் ரிலீஸாகவுள்ளதால், இங்கிருக்கும் ஹாலிவுட் ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











