»   »  பாலசந்தர் வாகை சூடிய களம் - சிந்து பைரவி

பாலசந்தர் வாகை சூடிய களம் - சிந்து பைரவி

Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

எண்பத்தைந்தாம் ஆண்டு தீபாவளி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழ்நாடெங்கும் அடைமழை கொட்டிக்கொண்டிருந்தது. நல்ல மழையோடு நான் எதிர்கொண்ட முதல் தீபாவளியும் அதுதான். அந்தத் தீபாவளிக்குப் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாயின. படிக்காதவன், சின்ன வீடு, ஜப்பானில் கல்யாணராமன் ஆகிய படங்கள் வெளியான அரங்குகள் முன்னம் பெருங்கூட்டம் குவிந்தது. சின்ன வீடுதான் அன்று வெளியான படங்களில் முன்னணி ஈர்ப்பு. தீபாவளித் திரைப்படங்களுக்கு முன்பே வெளியான முதல் மரியாதை, பூவே பூச்சூடவா ஆகியவையும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தன.

K Balachander's Sindhu Bhairavi - A Flashback

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, எந்தப் படத்திற்குச் செல்வது எதை விடுவது என்று ஒரு முடிவுக்கே வரமுடியவில்லை. எங்களுக்கிருந்த வாய்ப்புகள் அனைத்தும் சிறப்பான படங்கள். இன்றைக்கு அப்படியொரு தீபாவளியை எண்ணிப் பார்க்கவே முடியாது. வெளியாகும் இரண்டு மூன்று படங்களில் ஒன்றைப் பார்த்துவிட்டு நகரவேண்டியதுதான். அப்போது நினைத்தவுடன் விரும்பிய ஒரு படத்தைப் பார்த்துவிடவும் முடியாது. எத்தனையோ படங்களுக்குச் சென்று சீட்டு கிடைக்காமல் திரும்பியிருக்கிறோம். அன்றேல் வேறு படத்திற்குச் செல்ல வேண்டும். முன்பதிவெல்லாம் விறுவிறு என்று பத்து மணித்துளிகளில் தீர்ந்துவிடும். எண்பத்தைந்தாம் ஆண்டு வெளியான படங்களின் பட்டியலைப் பாருங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பொருட்படுத்தத் தக்கதாக இருக்கும்.

தீபாவளி தொடங்கி ஒவ்வொரு படமாகப் பார்த்துக்கொண்டே வந்தோம். வாரத்தின் இடைநாளில் நண்பகற்காட்சி செல்வதாகத் தீர்மானம் செய்தோம். ஸ்ரீகஜலட்சுமி திரையரங்கில் 'சிந்து பைரவி' ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு அப்போது பத்தாம் அகவை. சண்டைப் படங்களே என் முதல் விருப்பம். சிந்து பைரவி சிவக்குமார் படம் என்பதால் சண்டைக்காட்சிகளுக்கு வாய்ப்பில்லை. அதற்கேற்பவே அப்படத்தின் சுவரொட்டிகளிலும் சண்டைக்கான சுவடுகள் தென்படவில்லை. ஆனால், என்னைத் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லும் என் அம்மான், "இந்தப் படத்தையே பார்க்கலாம்டா," என்று கூட்டிக்கொண்டு போய்விட்டார். திரையரங்கம் இருந்த தெருவே நிரம்பி வழிந்தது. கூட்டத்திற்குள் ஒருவழியாக நுழைந்து முன்னேறி சீட்டு பெற்றுவிட்டோம். தொள்ளாயிரம் இருக்கைகளைக்கொண்ட அத்திரையரங்கில் சிந்து பைரவி படத்தைப் பார்த்தோம்.

K Balachander's Sindhu Bhairavi - A Flashback

புகழின் முடியில் இருக்கும் ஒரு பாடகன், ஒழுக்க வழிகளில் நம்பிக்கையுள்ளவன், தன் வாழ்வில் தற்செயலாகக் குறுக்கிடும் ஒரு பெண்ணுடன் காதலுற்றுவிடுவதுதான் கதை. அந்தக் காதல் அவனுள்ளத்தை அரம்போல் அறுத்து அதிலிருந்து மீள முடியாத நினைவேக்கத்தை அவனுள் ஏற்படுத்திவிடுகிறது. அந்த நினைவேக்கம் அவனை வேறெதையும் செய்ய விடாமல் குலைக்கிறது. காதற்பித்து முற்றிய நிலையில் புகழ்முடியிலிருந்து உருண்டு விழுபவன் தன்னை மீட்கும் வழியற்றவனாய்க் குடிக்கு அடிமையாகிறான். பிறகு அதே காதலியால் மீட்கப்பட்டு சபையில் அமர்கிறான். மீட்சியின் பாதையில் முதலடி வைக்கத் தொடங்கியதும் அவனுக்குப் பிறந்த பிள்ளையைத் தந்துவிட்டு மறைந்துவிடுபவள் சிந்து.

பத்தாம் அகவையிலுள்ள சிறுவனுக்கு இந்தக் கதையில் என்ன விளங்கியிருக்கும்? ஆனால், நான் சண்டைப் படங்களின் சுவையை மறந்துவிட்டு மெய்ம்மறந்து இப்படத்தைப் பார்த்தேன். என்னையறியாமல் பலவிடங்களில் அழுதேன். ஒரு காதல் நம்முன் தழைப்பதைப் பார்த்தால் 'அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்' என்று பதைபதைப்பதுதான் நம் உணர்ச்சிகளின் இயற்கையாக இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் இவ்வுலகில் பெரும் காவியங்கள் தோன்றி வெல்கின்றன. சமூகத்தில் தோன்றும் பொருந்தாக் காதல்களுக்கு நம்மிடமிருந்து கிடைக்கும் ஒரே வாழ்த்து அந்தப் பதைபதைப்பான மனத்துணர்ச்சிதான். சிந்து பைரவி திரைப்படத்தில் அச்சிறு வயதில் நானடைந்த பேருணர்ச்சியும் அதுதான். ஜேகேபியும் சிந்தும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்பதுதான். ஆனால், அந்த அப்பாவி மனைவி பைரவியின் நிலை? அவளுக்குத் தன் கணவனின்மீது அன்போடிருத்தலைத் தவிர வேறொன்றும் தெரியாதே. அவளுக்குரிய அன்புதானே இன்னொருத்தியின் மீதான காதலாகி மடைமாற்றப்படுகிறது? ஒன்றுமறியாதவளான பைரவி இனி என்னாக வேண்டும்? அதற்கு விடையில்லை. அந்த விடையைக் கூறாவிட்டால் ஒரு கலைப்படைப்பின் நடுநிலை கேள்விக்குரியதாகிறது. அங்கே வாழ்க்கை நடைமுறைகளுக்கு அப்பால் நாடகத்தனமான முடிவுகள் தரப்படுகின்றன. சிந்து பைரவியிலும் தரப்பட்டது நாடக முடிவுதான். அதைத் தவிர வேறு வழியுமில்லை.

K Balachander's Sindhu Bhairavi - A Flashback

பாலசந்தரைத் தவிர இன்னொருவரால் இக்கதையைக் கத்திமேல் நடப்பதுபோல் கையாண்டிருக்க முடியுமா? நினைத்தே பார்க்க முடியவில்லை. உறவுச் சிக்கல்கள் எவ்வளவு நுண்மையான கலவையுணர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன என்பதை அவர் மீண்டும் மீண்டும் விளக்கியபடி இருந்தவர். அதைத் தொடர்ந்து இறுகப் பற்றிக்கொண்டார். ஜேகேபி என்னும் அந்தக் குணவார்ப்புக்கு இசையுலகில் புகழ்பெற்ற ஒருவரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஊக்கியாக இருந்திருக்க வேண்டும். இது கற்பனையின் வழியாக அடைந்த கதையாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. பாலசந்தர் நூறு படங்களை இயக்கியவர். அவற்றுள் ஒரேயொரு படத்தைச் சொல்லவேண்டும் என்றால் நான் சிந்து பைரவியைத்தான் சொல்வேன். சற்றும் தொய்வில்லாத கூர்மையான திரைக்கதை. படத்தில் ஒரு சொல், ஒரு சுடுவு, ஒரு காட்சி சற்றே தடம்புரண்டாலும் ஒட்டுமொத்தக் காவியச் சுவையும் பாழ்பட்டுவிடக்கூடிய நிலை. அந்த அறைகூவலைத் திறம்படக் கடந்திருக்கிறார் இயக்குநர்.

சிந்து பைரவியில் நம்மைக் கட்டிப்போட்டவர்களில் தலையாயவர் இளையராஜா. அந்தப் பின்னணி இசைதான் அவர்கள் காதலை நமக்கு உணர்த்திவிட்டது. படத்தில் அவர்கள் காதலும் மெய்க்கலப்பும் கலையுணர்ச்சி ததும்பக் காட்டப்பட்டிருக்கும். சிந்து ஜேகேபியிடம் தன் காதலைச் சொன்னவுடன் அவள் தோளைக் கைதொடும். ஒரு வீணையின் பட்டுறை அவிழ்க்கப்படும். ஒரு கற்சிலை மார்பழகோடு காட்டப்படும். வண்ண நீரூற்று பொங்கும். அருவி வெள்ளியாய் இறங்கும். பேரலை ஒன்று மணற்கரை மூடும். வீணையின் குடப்பகுதி புரண்டு படுக்கும். சிந்தின் தோளில் ஜேகேபி கண்மூடுவார். வீணையின்மீது பூமழை பொழியும். இறுதியில் கலைந்த நிலையில் சிந்துவின் இளைப்பாறல் காட்டப்படும். இக்காட்சிக்கு இளையராஜாவின் பின்னணியைக் கேட்டுப் பாருங்கள். மனத்தளைகள் அனைத்தும் அறுந்து பரல் பரலாக உதிர்ந்தோடுவதை உணர்வீர்கள்.

சிந்து பைரவியில் சிவக்குமார், சுகாசினி ஆகியோரின் நடிப்பை மட்டும் பெரும்பாலும் குறிப்பிடுவார்கள். படத்தில் ஜனகராஜ், டெல்லி கணேஷ், பிரதாப், ராகவேந்தரின் நடிப்புப் பொருத்தமும் வேறொரு தரத்தில் இருப்பதைக் காணலாம். ஒவ்வோர் இயக்குநர்க்கும் அவர்க்கென்று வாய்க்கும் களம் ஒன்றுண்டு. பாலசந்தரின் களம் சிந்து பைரவிதான். அபூர்வ ராகங்களிலும் சிந்து பைரவியிலும் தென்பட்ட களம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Magudeswaran's write up on K Balachander's 1985 classic Sindhu Bairavi.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more