For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மணிரத்தினத்தின் தலையாய மாணவர் - கே. சுபாஷ்!

By Shankar
|

- கவிஞர் மகுடேசுவரன்

முந்திய கட்டுரையைப் படித்துவிட்டு பாலு மகேந்திராவிடமிருந்து தொழில் கற்றுக்கொண்டு வென்ற உதவி இயக்குநர்களைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று நண்பர்கள் பலரும் வினவியிருந்தனர். பாலுமகேந்திரா மட்டுமல்லர். மணிரத்தினம், பாக்கியராஜ், மணிவண்ணன் ஆகியோரிடமிருந்து வந்தவர்கள் பற்றிக்கூட எழுதவில்லை. உதவியாளர்களைத் தலையெடுக்கச் செய்ததில் பாரதிராஜா முதன்மையர் என்று நிறுவுவதே அக்கட்டுரையின் நோக்கம். இரண்டாயிரத்திற்குப் பிறகு தலையெடுத்த உதவி இயக்குநர்களைப் பற்றி நாம் உயர்த்திச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எண்பதுகளில் ஓர் உதவியாளர் இயக்குநராகி மிளிர்வது குதிரைக் கொம்புதான். அதைச் செய்தவர்கள் பாரதிராஜாவின் மாணவர்கள். பாக்கியராஜ், மணிவண்ணன் ஆகியோர் பாரதிராஜாவின் உதவியாளர்கள் என்பதால் அவர்களிடமிருந்து வெளிவந்தவர்களையும் கிளைகளிலிருந்து கிளைத்த கிளைகள் என்ற வடிவத்துக்குள் அடக்கலாம். பாலுமகேந்திராவின் திரை ஆளுமையைப் பற்றியும் பிறகு பார்க்கத்தான் போகிறோம்.

K Subash, the only successful director from Maniratnam

கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வருபவர் மணிரத்னம். மணிரத்னம் அடைந்த வெற்றியைத் தமிழ்த் திரையில் தோன்றிய இயக்குநர் ஒருவர் அடைந்த நாடளாவிய வெற்றிக்குத் தனித்த எடுத்துக்காட்டு என்பார்கள். வெற்றி தோல்விகளால் கிஞ்சித்தும் பாதிக்கப்படாதவராய் இன்றுவரை அடுத்த படத்திற்கான வேலைகளில் இருப்பவர். அலைபாயுதே படத்திற்குப் பிறகு அவர் என்ன வெற்றிப் படத்தைக் கொடுத்தார்? ஆனால், அவர் தொடர்ந்து படமெடுக்கிறார். பெருநிறுவனங்கள் அவர்க்கு எல்லா வகைகளிலும் உடந்தையாக இருக்கின்றன என்கிறார்கள்.

அவருடைய நிறுவனமே கட்டுக்கோப்பான செயல்பாட்டை உடையது என்று கேள்வி. தம்மிடம் பணியாற்றுபவர்களுக்கு அரசுச் சம்பளம்போன்றே முறையாக ஊதியம் வழங்குவதில் அவர் முன்னோடி என்று கூறுகிறார்கள். எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் அம்பலம் இணையவழி உரையாடலில், "அந்நியன் திரைப்படத்திற்கு ஐடிபிஐ வங்கி கடனுதவி வழங்குவதாக 'எக்கனாமிக் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது," என்று தெரிவித்தேன். அச்செய்தியைக் கேட்டு சுஜாதா வியந்தார். "இருக்காதே மகுடேசுவரன்... நம் வங்கிகள் திரைப்படத்திற்குக் கடனுதவி வழங்குகிறது என்றால் அது மணிரத்தினத்தின் நிறுவனத்தைப் போன்ற ஒன்றுக்குத்தான் இயலுமே தவிர பிறர்க்கு வாய்ப்பில்லையே..." என்றுதான் கூறினார். இத்தனைக்கும் அந்நியன் திரைப்படத்தின் கதை வசனகர்த்தாவும் அவரே. பிறகு அவர் அச்செய்தியை வியப்போடு ஏற்றுக்கொண்டார்.

மணிரத்தினத்தின் தில்சே திரைப்படத்தை ஷாருக்கான் விரும்பி ஒப்புக்கொண்டதற்குக் காரணமாகத் தம் நேர்காணல் ஒன்றில் சொன்னது இது: "மணிரத்தினம் எதையும் திட்டமிட்டு ஒழுங்குபடுத்திச் செய்பவர். அவருடைய தயாரிப்பில் ஒரு திரைப்படம் எத்தகைய திட்ட ஒழுங்குகளோடு எவ்வாறு உருவாகிறது என்பதை உடனிருந்து கற்க விரும்புகிறேன். அது பிற்பாடு நான் தயாரிக்க விரும்பும் படங்களுக்கு நன்கு உதவும்." இவற்றை நான் சொல்வதற்குக் காரணம் மணிரத்தினத்தின் நிர்வாகம், அலுவலகத்து ஒழுங்கு மற்றும் அதன் கணக்கு வழக்குக் கச்சிதம் ஆகியவற்றை உணர்த்தவே. ஆனால், இவ்வளவுக்கு நற்பெயராளரான மணிரத்தினத்திடமிருந்து அவரை மிஞ்சும் மாணவர்கள் தோன்றவே இல்லை எனலாம். அவருடைய உதவியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்களான கிட்டி, அழகம்பெருமாள் போன்றோர் தத்தம் முதற்சில முயற்சிகளுக்கு அப்பால் செல்லவே முடியவில்லை.

மணிரத்தினத்தை ஓர் இயக்குநராக வெற்றி பெறச் செய்தவர் என்று அவருடைய படங்களின் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமைத்தான் சொல்வேன். ஆனால், பிசி ஸ்ரீராமிடமிருந்து எண்ணற்ற உதவியாளர்கள் தோன்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள். "தனியாகச் சென்று படம் பண்ணுங்க...," என்று அவரே அனுப்பி வைப்பாராம். தமக்கு வரும் வாய்ப்பையும் தம் உதவியாளர்களுக்கு வழங்குவாராம். இன்று தமிழ், தெலுங்கு, இந்தி என்று இந்தியத் திரையுலகின் ஒளிப்பதிவுத் துறையில் கோலோச்சுபவர்கள் பிசி ஸ்ரீராமின் மாணவர்கள்தாம்.

மணிரத்தினத்திடமிருந்து வெளிவந்து முதலில் படமெடுத்த இயக்குநர் கே. சுபாஷ் என்பவர். மணிரத்தினத்தின் படமோ என்னும்படிக்கு விஜயகாந்தை நாயகனாக்கிச், 'சத்திரியன்' படத்தை எடுத்தார். மணிரத்தினம், விஜயகாந்த், இளையராஜா கூட்டணியில் ஒரு திரைப்படம் வந்திருந்தால் அது இன்றுவரை மறக்கவியலாத படைப்பாக நின்றிருக்கும். ஏனென்றால் விஜயகாந்த் பெருங்கூட்டம் ஏற்கும் உடல்மொழியுடைய நடிகர். பெருநடிகர்க்கான திரைமொழியை ஆக்கிப் படமெடுப்பதில் மணிரத்தினம் வல்லவர். ஓர் ஆளுமையுள்ள நாயகக் குணச்சித்திரத்தை விஜயகாந்துக்கென்று ஆக்கி ஒரு படத்தை மணிரத்தினம் எடுத்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. மணிரத்தினம் எடுத்துக்கொண்டிருந்த நாயக மையப் படங்களுக்கு விஜயகாந்த் மிகப் பொருத்தமானவர். ஆனால், அதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை. அந்தக் குறையைப் போக்கிய படம்தான் சத்திரியன். "வரணும் பழைய பன்னீர்செல்வமா வரணும்...," என்னும் கரகரப்பான குரலில் திலகன் கூறும் மறக்க முடியாத வசனம் ஒன்றே போதும், அங்கே மணிரத்தினத்தின் சுவடு காணப்பட்டதை உணர முடியும்.

தமிழ்த்திரைப் புலத்தில் கே. சுபாஷ் மிகுதியாகக் கண்டுகொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. முன்னைப் பழம் இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சு என்னும் இரட்டையரை அறிவோம். பராசக்தி, இரத்தக்கண்ணீர், சர்வர் சுந்தரம் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியவர்கள். இவ்விரட்டையரில் கிருஷ்ணன் என்பவரின் புதல்வர்தான் கே. சுபாஷ். கலியுகம் என்ற திரைப்படத்தின் வழியாக இயக்குநரானவர். கலியுகம் திரைப்படம் வெளியான நாள் எனக்கு நினைவிருக்கிறது. கன்னங்கரேல் என்ற அகன்ற சுவரொட்டியில் நடிகர் பிரபுவின் அரை முகம் தெரியும்படி இருக்கும். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. ஆனால், அடுத்து அவர் இயக்கிய உத்தம புருசன் என்னும் படம் வெற்றி பெற்றது. மனைவி இருக்க இன்னொருத்தியையும் சேர்த்துக்கொண்ட கணவன் படும்பாடுதான் கதை. ஆயுள்கைதி, வாக்குமூலம் போன்ற படங்கள் மீண்டும் தோல்வியுற்றன.

கே. சுபாஷின் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படம் 'பிரம்மா'தான். இளவயதுப் படத்தைக்கொண்டு ஒருவரின் இன்றைய தோற்றத்தைக் கற்பனை செய்து வரையும் வல்லமையுள்ள ஓர் ஓவியனின் வாழ்க்கை நிகழ்வுகள்தாம் கதை. பிரம்மாவுக்கு இளையராஜாவின் பின்னணி இசை காலகாலத்துக்கு நிலைத்து நிற்பது. இருக்கை நுனிவிளிம்பில் அமர்ந்தபடி பார்க்கும்படியான திரைக்கதை.

"இவங்கதான் மதர் சுப்பீரியர்..."

"அப்ப சுப்பாரியா பாக்கு போடுவாங்களா...," என்னும் கவுண்டமணியையும் "என்ன அப்பாடி... சொல்லு அப்பாடி..." என்னும் விஜயகுமாரையும் மறந்திருக்க மாட்டோம். அதன்பிறகு நேசம், நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில் ஆகிய படங்கள் வெளிவந்தன. தான் ஏவிவிட்ட அடியாள்கள் நாயகனிடம் அடிவாங்குவதைக் கண்ட நாயகி தடியர்களைக் கடிந்து, "ஏய் சோத்தைத்தானே திங்கறே..." என்று திட்டும்போது "இல்ல மேடம்... சப்பாத்தியும் சாப்புடுவேன் மேடம்...," என்று நிற்பார்கள். சபாஷ் என்ற படம் நன்கு எடுக்கப்பட்டிருந்தும் தோற்றுப் போனது.

பிற்பாடு சுபாஷுக்கு வாய்ப்பில்லாமல் போனபோது இந்தித் திரைப்பக்கம் ஒதுங்கினார். சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு அவர்தான் திரைக்கதை. மும்பையில் அவருடைய திரைமுயற்சிகள் கனிந்தனவா இல்லையா என்பது தெரியாது. சத்திரியன், பிரம்மா ஆகிய திரைப்படங்கள் கே. சுபாஷின் பெயரைச் சொல்லக்கூடியவை. கடந்த ஆண்டின் நவம்பர்த் திங்களில் கே. சுபாஷ் மறைந்தார் என்ற செய்தி வந்தது. "வருவேன்... பழைய சுபாஷாக வருவேன்" என்று அவர்க்குள்ளும் ஒரு சூளுரை இருந்திருக்க வேண்டும். பன்னீர் செல்வம் பழைய பன்னீர் செல்வமாக வந்ததைப் போல சுபாஷால் பழைய சுபாஷாக வர முடியாமலே போயிற்று.

English summary
K Subash is the only successful director from Maniratnam camp

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more