»   »  கபாலி திருவிழா... காணுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம்... டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாற்றம்!

கபாலி திருவிழா... காணுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம்... டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு ஹாலிவுட் படத்துக்குக் கூட இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாய் வெளியாகியுள்ளது கபாலி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம் அவரது சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரும் பரபரப்பையும் எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.


Kabali Shows: Corporate people overtakes Rajini fans

இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சி.. அல்லது முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளைப் பெறுவதில் ரசிகர்கள் காட்டிய ஆர்வம் ஆயுளில் பார்க்காத ஒன்று. எந்த விலை கொடுத்தும் இந்த டிக்கெட்டுகளை வாங்கிவிட வேண்டும் என்பதில் ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டினர்.


முன்பதிவு ஆரம்பித்த நாளன்றே அத்தனை திரையரங்குகளிலும் முதல் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. குறிப்பாக ஜூன் 20 மற்றும் 21-ம் தேதிகளில் கபாலி வெளியாகும் திரையரங்குகளில் கூட்டம் டிக்கெட்டுகளுக்காக அலைமோதியது. விடிய விடிய காத்திருந்தனர் மக்கள். ஆனால் எந்த அரங்கிலும் டிக்கெட் கிடைத்தபாடில்லை.


கடந்த 35 ஆண்டுகளாக தலைவர் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்தவன் என்று பெருமையோடு சொல்லிக் கொண்ட பல சீனியர் ரசிகர்களுக்கு இந்த முறை டிக்கெட்டே கிடைக்கவில்லை. தொன்னூறுகளுக்குப் பிறகு முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்களோ, டிக்கெட் கிடைக்காத ஆதங்கத்தை தியேட்டர்கள் முன் வெளிப்படுத்தினர்.


தியேட்டர்களில் டிக்கெட் இல்லாததால், பலர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திலேயே பழியாகக் கிடந்தார்கள். கடந்த இரு தினங்களாக கலைப்புலி தாணு அலுவலகம் ரசிகர்கள், விஐபிகளால் நிரம்பி வழிந்தது. எல்லாம் டிக்கெட் கேட்டு வந்த கூட்டம்தான். அந்தப் பகுதியில் வாகனங்களைக் கூட நிறுத்த முடியாத அளவுக்கு நெரிசல்.


இன்னொரு பக்கம், வழக்கமாக ரஜினியின் படங்களை வெளியிடும் ஆல்பட், உதயம், கமலா உள்ளிட்ட பல அரங்குகள் கடைசி நிமிடம் வரை டிக்கெட் தராமல் இருந்தன. மாயாஜால், ஐநாக்ஸ் போன்ற மல்டிப்ளெக்ஸ்கள் வியாழக்கிழமை மாலைதான் டிக்கெட் முன்பதிவைத் தொடங்கின. ஆனால் சில நிமிடங்களில் அவற்றின் இணையதளங்கள் முடங்கிப் போனதால், மக்கள் நேரடியாக மால்களுக்குப் படையெடுக்க, அங்கு டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டதாகக் கூறிவிட்டார்கள்.


எப்படி அதற்குள் இவ்வளவு டிக்கெட்டுகள் காலியாகின?


பெரும்பாலான அரங்குகளின் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகளை கார்ப்பொரேட் நிறுவனங்கள் மற்றும் சில முக்கியப் புள்ளிகள் மொத்தமாக கைப்பற்றிவிட்டனர். அவற்றை தங்கள் ஊழியர்களுக்குத் தருவதாக அவை அறிவித்தாலும், மறைமுகமாக இந்த டிக்கெட்டுகள் பெரும் விலையில் கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டன.


காலங்காலமாக தங்கள் தலைவர் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து வந்த ரசிகர்கள் வெளியில் நிற்க, ஐடி நிறுவனங்கள், பெரும் முதலாளிகளின் நிறுவனங்களில் பணியாற்றுவோர் மற்றும் ரஜினி வெறுப்பாளர்கள் பலர் முதல் காட்சி பார்க்கும் நிலை.


"எனக்கு டிக்கெட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ரஜினியை விமர்சிப்போர் சிலர், ரசிகன் என்ற போர்வையில் முதல் நாள் காட்சி பார்த்து படத்துக்கு எதிராக கருத்து பரப்பும் ஆபத்து உள்ளது. இதைப் புரிந்து கொள்ளாமல், ரசிகர்களைத் தள்ளிவிட்டு, மற்றவர்களுக்கு டிக்கெட் வழங்கியுள்ளது வேதனையைத் தருகிறது," என்றார் ரசிகர் ஒருவர்.


தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும், 'தலைவர் படம் வரலாறு காணாத பெரும் வெற்றிப் பெற்றுள்ளது. அடுத்த நாளாவது பார்த்துக் கொள்வோம்', என்ற ஆறுதலுடன் கடந்து செல்கிறான் ரஜினி ரசிகன்.English summary
For the first time most of the Rajinikanth's fans are disappointed for not getting tickets for the first day shows of Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil