For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் ரஜினி - கலைப்புலி தாணு

  By Shankar
  |

  சென்னை: 1975-ம் ஆண்டு ரஜினி அறிமுகமானதிலிருந்தே தமிழ் சினிமாவுக்கு பொற்காலம்தான் என்று கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

  இந்திய சினிமா நூற்றாண்டு விழா குறித்து சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டுள்ள அறிக்கை:

  இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு, தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடியை மனமுவந்து அளித்துள்ள முதல்வர் புரட்சித் தலைவிக்கு திரையுலகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.

  வேறு எந்த அரசும், பிற மாநில முதல்வர்களும் இவ்விழாவை சிறப்பாகக் கொண்டாட முன் வராத நிலையில், தமிழக முதல்வர் ரூ.10 கோடி வழங்கியதோடு அல்லாமல், தொடர்ந்து பல உதவிகளைச் செய்து வருவதை திரையுலகம் நன்கறியும்.

  எம்ஜிஆர்

  எம்ஜிஆர்

  தமிழ்த் திரையுலகம் அம்மா அவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறது. சதி லீலாவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் மக்கள் திலகம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 1936-ல் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் எல்லிஸ் ஆர்.டங்கன்.

  சிவாஜி

  சிவாஜி

  பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 1952-ல் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன்- பஞ்சு. தமிழக முதல்வராக மூன்று முறை பதவியேற்றுள்ள புரட்சித் தலைவியும் திரையுலகில் பட்டொளிவீசி மாசிலாப் புகழ் பெற்றவர்.

  ஜெயலலிதா

  ஜெயலலிதா

  அவர் நடித்த முதல்படமே வெண்ணிற ஆடை! புனிதத்தின் அடையாளமாய், சமாதானத்தின் குறியீடாய் விளங்கும் வெண்ணிறமே தூய்மைக்கு எடுத்துக்காட்டு! அவ்வண்ணமே நல்லாட்சி புரிந்து வரும் அம்மாவின் ஆட்சியில் தமிழ்த் திரையுலகம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளதை எவரும் மறுக்க இயலாது.

  தமிழ்த் திரையுலகிற்கு தாயுள்ளத்துடன் தொடர்ந்து உதவி வரும் அம்மாவின் கரத்தை வலுப்படுத்துவதே, தமிழ்த் திரையுலகம் அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாகும். தமிழ்த்திரை உலகில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் ராஜ நடை போட்டுக் கொண்டிருந்த வேளையில், அடுத்த தலைமுறைக்கு அடையாளம் காணப்பட்ட சிலரில் ரஜினிகாந்தும் ஒருவர்.

  ரஜினிகாந்த்

  ரஜினிகாந்த்

  1975-ம் ஆண்டு தமிழ்த் திரை உலகுக்கு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

  ஆண்டுகள் பல உருண்டு ஓடிவிட்டாலும், அன்றும் இன்றும் என்றும் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 1978-ம் ஆண்டு வரை தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார். கலைஞானம் தயாரித்த இப்படத்தை எம்.பாஸ்கர் இயக்கி இருந்தார். பைரவி 2.6.1978-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பைரவி படத்தின் சென்னை வினியோக உரிமையை வாங்கினேன். இப்படத்தின் போஸ்டரை மிகப் பிரமாண்டமாக, அதாவது ஆறு துண்டுகள் கொண்ட மெகா சைஸில் அடித்தேன்.

  35 அடியில் கட் அவுட்

  35 அடியில் கட் அவுட்

  பிளாசா தியேட்டரில் ரஜினிகாந்திற்கு முப்பத்தஞ்சு அடியில் கட்-அவுட் வைத்தேன். பைரவி வெளியான ராஜகுமாரி தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அந்த இனிய சம்பவம் நிகழ்ந்தது. படத்தின் இடைவேளையின் போது விநியோகஸ்தர் எங்கே? என்று ரஜினி கேட்க, உடனே என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைக்க என் கையை இறுக்கிப் பிடித்த ரஜினி, பப்ளிசிட்டி மிகவும் பிரமாதம்! என்று கட்டிப் பிடித்துப் பாராட்டினார்.

  கிரேட் சூப்பர் ஸ்டார்

  கிரேட் சூப்பர் ஸ்டார்

  பாராட்டு மழையில் நனைந்த நான், அடுத்த நாள் செய்தித்தாளில் தி கிரேட் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பைரவி என்று விளம்பரம் செய்திருந்தேன். அதைப் பார்த்த ரஜினி மிகவும் டென்ஷன் ஆகிவிட்டார். தயாரிப்பாளர் கலைஞானமும், டைரக்டர் பாஸ்கரும் என்னைத் தேடி வந்து, ரஜினி மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நட்சத்திரங்கள் இருக்கும்போது, என்னை சூப்பர் ஸ்டார்னு விளம்பரம் செய்தால், அவர்கள் மனம் புண்படுமே! என்று வருத்தப்பட்டதாகச் சொன்னார். என்னைப் பொறுத்த வரை ரஜினி சூப்பர் ஸ்டாராகத் தெரிகிறார் என்று சொன்னேன்.

  என்ன கஷ்டம் வந்தாலும்

  என்ன கஷ்டம் வந்தாலும்

  அன்று நான் சொன்னதும், செய்ததும் சரியே என்று காலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் புதிதாக ஒரு படத்தில் நடிக்க வேண்டுமானால், முதலில் அவருக்குக் கதை பிடிக்க வேண்டும், ஒரு தடவைக்கு இரண்டு தடவை கதை கேட்பார். அதன் பின்னரே முழு மனதோடு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார். எந்தக் கஷ்டம் வந்தாலும் பின் வாங்கமாட்டார்.

  சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருசிலரை நான் நன்கறிவேன். அவர்கள் அனைவருமே, ‘எங்கள் கூட்டத்திலேயே ரஜினி ஒருத்தர்தான் சூப்பர் ஸ்டாராகி இருக்கிறார். எங்களில் வேறு யாராவது ரஜினியைப் போல் சூப்பர் ஸ்டாராகி இருந்தால் இவரைப் போல் எளிமையாக பழைய நட்பை மறக்காமல் பழகி இருப்பார்களா என்று சந்தேகம்தான்! என்று குறிப்பிட்டுள்ளதை நான் பலமுறை கேட்டுள்ளேன்.

  பொக்கிஷம்

  பொக்கிஷம்

  வெற்றியின் உச்சத்திற்கு உயர்ந்திட்டாலும், இன்றும் ரஜினிகாந்த் அடக்கத்துடனும் எளிமையுடனும் அனை வரிடமும் நடந்து கொள்வதை கண் கூடாகக் கண்டு வருகிறோம். சொகுசு மாளிகையில், குளுகுளு அறையில், பஞ்சு மெத்தையில் புரள்வதையே விரும்பும் சிலரிடையே ரஜினி வித்தியாசமாகக் காணப்படுகிறார். ஆம்... இவருக்குப் பிடித்த இடங்கள் இரண்டு! ஒன்று பூஜையறை; மற்றொன்று இமயமலை! தமிழ்த்திரைக்குக் கிடைத்திட்ட மாபெரும் பொக்கிஷங்களில் ரஜினி காந்த் பிரதானமானவர்.

  English summary
  Kalaipuli Thaanu praised Rajinikanth as the treasure to the Tamil Cinema.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X