Vikram Box Office Prediction: கமலின் விக்ரம் முதல் நாளில் இத்தனை கோடி வசூலை அள்ளுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் திரைப்படம் முதல் நாளில் எத்தனை கோடி வசூலை அள்ளும் என்கிற கணிப்புகள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 1100 திரையரங்குகளில் அதிகபட்சமாக 800 திரையரங்குகளில் விக்ரம் படம் திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக கமல் படத்திற்கு மிகப்பெரிய வசூல் வேட்டை நடக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

விக்ரம் விக்ரம் விக்ரம்
தமிழ்நாடு முழுவதும் விக்ரம்.. விக்ரம்.. விக்ரம் என்று தான் சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் விளம்பரங்களை செய்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார் கமல். இந்நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என்கிற கணிப்புகள் என்ன சொல்கின்றன என்பதை இங்கே காண்போம்..

முந்தைய படங்களின் பிசினஸ்
விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் நடித்த படங்களிலேயே பாபநாசம் படம் மட்டுமே வரவேற்பை பெற்றது. உத்தம வில்லன், தூங்காவனம் மற்றும் விஸ்வரூபம் 2 உள்ளிட்ட பல படங்கள் படு தோல்வியை சந்தித்தன. இந்நிலையில், கமல்ஹாசனின் படத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஒன்றாக திரண்டு தியேட்டருக்கு வருவார்களா? என்கிற கேள்வி பலமாகவே எழுந்துள்ளது.

மாஸ்டர் இயக்குநர்
அதே சமயத்தில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையிலும், மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து மற்ற திரைப்படங்கள் எல்லாம் தைரியமாக ரிலீஸ் தேதியை அறிவிக்க காரணமாக இருந்த மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது மிகப்பெரிய நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கிறது.

சூர்யா, விஜய்சேதுபதி
கமல்ஹாசனை தாண்டி இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட நடிகர்கள் உள்ளனர். மேலும், கூடுதல் இணைப்பாக மிரட்டல் தோற்றத்தில் சூர்யாவும் நடித்துள்ளார் என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், விக்ரம் படத்தின் மார்க்கெட் மின்னல் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. படத்தின் டிரைலரும் பக்காவாக இருந்த நிலையில், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

நல்லா இருந்தா ஓடும்
நடிகர்கள், நட்சத்திரங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு முக்கியமல்ல, படம் நல்லா இருந்தா எங்கே வேணாலும் வெறித்தனமாக ஓடும் என்பதற்கு சமீபத்திய உதாரணங்களாக ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களை சொல்லலாம். அந்த அளவுக்கு கதையில் தீப்பொறி இருந்தால் விக்ரமும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் வசூல் கணிப்பு
இதுவரை தமிழ் சினிமா படங்கள் பண்ணாத வசூலை விக்ரம் படம் செய்யுமா? என்கிற கேள்விக்கு, கமல் பாணியிலேயே சொல்லணும்னா, செஞ்சா நல்லா இருக்கும் என்பது தான் பலரது விருப்பமும். கணிப்புகளின் படி, முதல் நாளில் தமிழ்நாட்டில் 25 கோடி வரை வசூல் வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ஷய் குமாருடன் மோதல்
உலக நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கமலின் விக்ரம் படத்தை இந்தியில் விக்ரம் ஹிட் லிஸ்ட் என வெளியிடுகிறார். அக்ஷய் குமாரின் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படமும் நாளை வெளியாகிறது. ஏற்கனவே வெளியான பச்சன் பாண்டே திரைப்படம் சொதப்பிய நிலையில், அக்ஷய் குமார் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பாரா? இல்லையா? என்பதை பார்க்க வேண்டும். இந்தியளவில் விக்ரம் படம் 35 முதல் 40 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில்
மலேஷியா, புர்ஜ் கலிஃபா என பிரம்மாண்டமாக புரமோஷன் செய்துள்ள கமல், அமெரிக்காவிலேயே 500 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்கிறார். இந்நிலையில், உலகளவில் விக்ரம் படம் முதல் நாளில் ஒட்டுமொத்தமாக 60 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 4ம் தேதி விக்ரம் சாதித்ததா? சொதப்பியதா? என்பது முழுமையாக தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











