உலகளவில் புயலை கிளப்ப போறாங்க.. ’83’ பட ரிலீஸை அட்டகாசமாக அறிவித்த உலக நாயகன்!
சென்னை: 1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன் முறையாக உலககோப்பை வென்ற வரலாற்றை கூறும் திரைப்படமாக உருவாகி உள்ள '83' படத்தின் ரிலீஸ் தேதியை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கபில் தேவாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன், ஜீவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பான் இந்தியா திரைப்படமாக வெளியாகப் போகிறது.

உலக கோப்பை
கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாறு மற்றும் 1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கோப்பையை வென்ற தருணத்தை '83' எனும் டைட்டிலில் இயக்குநர் கபீர் கான் படமாக இயக்கி உள்ளார். இந்த படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார்.

கபில்தேவாக ரன்வீர் சிங்
பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், கல்லி பாய் என ரன்வீர் சிங் நடிக்கும் படங்கள் எல்லாமே வேற லெவல் ஹிட் அடித்து வருகின்றன. இந்நிலையில், கபில் தேவாகவே ரன்வீர் சிங் இந்த படத்திற்காக மாறிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாயடைத்து போனார்கள். ரன்வீர் சிங்கின் ஆட்டத்தை காண காத்திருக்கின்றனர்.

ரியல் மனைவி
இயக்குநர் கபீர் கான் இந்த படத்தை தயாரித்தும் உள்ளார். அவருடன் இணைந்து தீபிகா படுகோன், விஷ்ணுவர்தன் இந்துரி, சஜித் நடியாவாலா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். கபில் தேவின் மனைவி கதாபாத்திரத்தில் கேமியோவாக ரன்வீர் சிங்கின் ரியல் மனைவியான தீபிகா படுகோனே இந்த படத்தில் நடித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் ரிலீஸ்
மகாராஷ்ட்ராவில் திரையரங்குகள் வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் திறக்கப்படவுள்ள நிலையில், இந்த அண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக 83 திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளன.

புயலை கிளப்ப போறாங்க
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்த படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், இந்த ரிலீஸ் அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல், உலகளவில் புயலை கிளப்ப போகிறது '83' அணி என அட்டகாசமாக ட்வீட் போட்டு படக்குழுவினரை வாழ்த்தி உள்ளார்.

தள்ளிப்போக காரணம்
கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்துக்கு தள்ளிப் போக '83' பட ரிலீஸ் தான் காரணம் என்று கூறப்படுகிறது. மீண்டும் சினிமா உலகம் மீண்டெழ காத்திருக்கும் நிலையில், பெரிய படங்களுக்கு இடையே போட்டிகளை பலரும் தவிர்த்து வரும் நிலையில் தான் அமீர்கான் படம் தள்ளிப் போயுள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











