தொடர்ந்து 5 சீசன்கள்...கமல் பிக்பாசை தொகுத்து வழங்க இது தான் காரணமா ?
சென்னை : வெளிநாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் மிக பிரபலமாக நடத்தப்பட்டு வந்த நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக பிக்பாஸ் என்ற பெயரில் இந்தியில் நடத்தப்பட்டது. சல்மான் கான் இதை தொகுத்து வழங்கியதால் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தியில் பிக்பாஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அனைத்து மொழிகளிலும் டாப் நடிகர்கள் தொகுத்து வழங்கினர்.

தொகுப்பாளரான கமல்
தமிழில் 2017 ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார் கமல். இந்த நிகழ்ச்சியை பிரபலமாக்க தான் கமலை வைத்து தொகுத்து வழங்க வைக்கிறார்கள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது.

தொடர்ந்து 5 சீசன்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனும் நிறைவு பகுதிக்கு வந்துள்ளது. அனைத்து சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது சினிமா, அரசியல் என பிஸியாக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல் கைவிடாமல், தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாசிற்கு வர என்ன காரணம்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்க என்ன காரணம் என்பது பற்றிய கமலே கூறிய பழைய வீடியோ தற்போது வெளியாகி, பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் டிவி ஒன்றிற்கு பேட்டி கொடுத்த கமலிடம், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகத்து வழங்க என்ன காரணம் என கேட்கப்பட்டது.

கமல் சொன்ன ஒற்றை வார்த்தை
இதற்கு பதிலளித்த கமல், மக்கள் தான். எனக்கு ரீச் வேண்டும். மக்களிடம் நான் பேசுவது ரீச் ஆக வேண்டும் என்பதற்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன். ஒரு அரசியல் கூட்டம் நான் நடத்தி, மக்களை கூட்ட வேண்டுமானால் எவ்வளவு செலவாகும். எத்தனை நாட்களாகும். அனுமதி வாங்க வேண்டும். பத்தாயிரம் பேரை கூட்ட எத்தனை நாளாகும். ஒரு லட்சம் பேரை கூட்ட எத்தனை நாட்களாகும்.

இரண்டு வாக்கியம் போதும்
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் 32 அல்ல 302, ஒரு லட்சம் பேரைக் கொண்ட மாநாட்டை நடத்தி வருகிறேன். ஒரு வாரத்தில் நான் பேசும் இரண்டு வாக்கியம் தான் மக்களிடம் சென்று சேரும் என்றால் கூட எனக்கு போதும் என்றார் கமல்.

மக்களின் பார்வை மாறியது
தனிப்பட்ட முறையில் பிக்பாஸில் உங்களை பாதித்த விஷயம் என்ன என்ற கேள்விக்கும் கமல், மக்கள் தான் என ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் என்னை பார்க்கும் பார்வை மாறி உள்ளது. பிக்பாஸ் என்று கூட கூப்பிடுகிறார்கள். மக்களிடம் எனக்கு கிடைத்துள்ள ரீச், அவர்களின் பார்வையை மாற்றி உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











