பீஸ்ட், வலிமை சாதனையை ஓரங்கட்டிய விக்ரம்...இரண்டே நாளில் 100 கோடி கிளப்
சென்னை : கமல்ஹாசனின் விக்ரம் படம் ரிலீசான இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை படங்களின் வசூல் சாதனையை விக்ரம் படம் இரண்டே நாட்களில் முறியடித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் விக்ரம் என்ற பெயரிலேயே டப் செய்து இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. 1986 ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தில் நடித்த அதே கேரக்டர் பெயரான விக்ரம் கேரக்டரில், முன்னாள் உளவுத்துறை அதிகாரியாக கமல் இந்த படத்தில் நடித்துள்ளார்.

விக்ரமை கலாய்த்த நெட்டிசன்கள்
உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 30 கோடி வசூலித்தது. இருந்தாலும், பீஸ்ட் மற்றும் வலிமை படங்களின் வசூலை எட்ட முடியவில்லை என கூறப்பட்டது. சென்னையில் முதல் நாளில் அண்ணாத்த படத்தின் வசூலான 1.71 கோடியை மட்டுமே விக்ரமால் எட்ட முடிந்தது. இவ்வளவு ப்ரொமோஷன் செய்தும் இது தான் வசூல் ஆகி உள்ளதா என சிலர் கலாய்த்தனர்.

100 கோடி கிளப்பில் விக்ரம்
இந்த சமயத்தில் ரிலீசான இரண்டாவது நாளான நேற்று உலகம் முழுவதும் 100 கோடிகளை வசூல் செய்து பீஸ்ட் மற்றும் வலிமை படங்களில் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. விஜய்யின் பீஸ்ட் படம் ஒரு வாரத்தில் தான் 100 கோடி கிளப்பில் இணைந்தது. அதற்கு முன் அதிக தொகை வசூலிக்கப்பட்ட தமிழ் படமாக சொல்லப்பட்ட அஜித்தின் வலிமை படம் மூன்றாவது நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்தது.

விஜய், அஜித் சாதனை முறியடிப்பு
விஜய், அஜித் படங்களின் வசூல் சாதனையை இரண்டே நாட்களில் எட்டி உள்ளது கமலின் விக்ரம். வார இறுதி நாட்கள் என்பதால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வசூல் அதிகரிக்கும் என கூறப்பட்டது. அதே போல் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாளில் இரு மடங்கு வசூலை விக்ரம் பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் இன்னும் வசூல் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் வசூல் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மிக விரைவிலேயே 500 கோடி கிளப்பில் விக்ரம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3வது முறையாக 100 கோடி கிளப்பில் கமல்
கமல் இதுவரை நடித்த படங்களிலேயே 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த மூன்றாவது படம் விக்ரம் ஆகும். இதற்கு முன் அவர் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளன.


Click it and Unblock the Notifications