கமலின் ஹேராம் படத்தால் அஜித்துக்கு அடித்த ஜாக்பாட்… சிட்டிசன் ஃப்ளாஷ்பேக்ல இப்படி ஒரு சீக்ரெட்டா?
சென்னை: அஜித் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான சிட்டிசன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
சரவண சுப்பையா இயக்கிய இந்தப் படத்தில், அஜித் பல கெட்டப்புகளில் நடித்து மிரட்டியிருந்தார்.
சிட்டிசன் படத்தில் அஜித் நடிப்பதற்கு கமல்ஹாசன் தான் காரணம் என்ற சீக்ரெட் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜித்தின் அல்டிமேட் அவதாரம்
அஜித்தின் கேரியரில் சிட்டிசன் திரைப்படம் மரண மாஸ் ஹிட் கொடுத்திருந்தது. இயக்குநராக சரவண சுப்பையாவுக்கு முதல் படமான சிட்டிசன் மேக்கிங்கில் ரசிகர்களை மிரள வைத்திருந்தது. அஜித் - சரவண சுப்பையா கூட்டணியில் உருவான சிட்டிசன் படத்துக்கு, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் கெத்து காட்டியது. ஒரு கிராமமே தொலைந்து போனால் எப்படி இருக்கும், அதன் அரசியல் பின்னணி என விறுவிறுப்பான ஆக்சன் படமாக சிட்டிசன் உருவாகியிருந்தது.

இயக்குநரின் முதல் சாய்ஸ்
சிட்டிசன் படத்தின் முதல் காட்சியிலேயே அப்துல்லா என்ற கேரக்டரில் அறிமுகமாகும் அஜித், பெயர்களை மாற்றி மாற்றி அடுத்தடுத்து பல கெட்டப்புளில் நடித்து மிரட்டியிருந்தார். தனது கேரியரில் ஒரே படத்தில் அஜித் அதிகமான கேரக்டர்களில் நடித்திருந்தது சிட்டிசன் படத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சிட்டிசன் படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில், சிட்டிசன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது கமல்ஹாசன் என தற்போது தெரியவந்துள்ளது.

கமல் கொடுத்த வாய்ப்பு
தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான பாத்திரங்களில் நடிப்பதற்காக கெட்டப்புகளை அதிகம் மாற்றுவதில் அப்போது முன்னணியில் இருந்தது கமல் தான். இப்போது இந்த வரிசையில் விக்ரம் இருந்தாலும், கமல் அளவுக்கு அவரால் வெற்றி கொடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிட்டிசன் படத்தில் ஹீரோவுக்கு அதிகமான தோற்றங்கள் என்பதால், கமல்ஹாசனை சந்தித்து கதை கூறினாராம் சரவண சுப்பையா. ஆனால், அப்போது கமல் ஹேராம் படத்திற்காக நீளமான முடி வளர்த்துள்ளார். அதனால், முடியாது என மறுத்துவிட்டாராம்.

சீனில் வந்த அஜித்குமார்
சிட்டிசன் படத்தில் கமல் நடிக்க மறுத்த பின்னரே, அஜித்தை புக் செய்துள்ளார் இயக்குநர் சரவண சுப்பையா. ஆனால், அவரே எதிர்பார்க்காத வகையில் தனது வெறித்தனமான நடிப்பால் மிரட்டியிருந்தார் அஜித். இன்றுவரையில் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக சிட்டிசன் அமைந்துள்ளது. அஜித்துடன் மீனா, வசுந்துரா தாஸ், நக்மா, விணுசக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. 2001ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான சிட்டிசன், தியேட்டர்களில் நூறு நாட்களை கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











