twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காமராஜர்... காலத்தின் கடைசி கருணை!

    By Shankar
    |

    இப்பொழுதும் இனி வரப்போகும் தமிழக மக்களுக்கு அவன் ஒரு அதிசயம், அப்படியும் ஒரு தலைவன் இருந்தான் என நம்ப மிகவும் கஷ்டம்தான், நம்ப முடியாத விஷயம்தான்.

    ஆனால் அப்படியும் ஒரு மனிதன் இருந்திருக்கின்றான், அவன் ஆண்ட காலத்தில் தமிழகத்திற்கும் ஒரு பொற்காலம் இருந்திருக்கின்றது கண்ணதாசன் வரிகளில் சொன்னால் 'காலத்தின் கடைசி கருணை அவன்'.

    Kamaraj, The last mercy of time!

    மனிதநேயமிக்க, ஏங்கி நின்ற எந்த சாதி குழந்தையானாலும் அந்த இந்திய குழந்தைக்காக கண்கலங்கிய, தமிழக குழந்தை கல்விக்காக பிச்சை எடுத்த, அந்த பெருமகன் காமராஜரின் பிறந்த நாள் இன்று.

    உறுதியாகச் சொல்லலாம், ஒரு ஜனநாயக நாட்டு அரசியல்வாதி எப்படி வாழவேண்டும், எப்படி ஆட்சி செய்யவேண்டும், எப்படி சிந்திக்கவேண்டும் என்பதற்கு அவர் ஒரு பெரும் இலக்கணம், அரிச்சுவடி.

    தமிழகத்தில் தர்மனின் ஆட்சியை, சித்திரகுப்தனின் துல்லியத்தில் கொடுத்துகொண்டிருந்தார். ஆனால் எதிர்கட்சி திராவிட கும்பல்கள் அவரை எதிர்த்தே அரசியல் செய்தன. அதில் மூதறிஞர் ராஜாஜியும் சேர்ந்ததுதான் காலகொடுமை.

    பெரியாரைத் தவிர யாரும் அன்று காமராஜருக்கு ஆதரவில்லை.

    பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தது, அவர்களுக்கு கஞ்சியும் ஊற்றியது என அந்த சாதனை ஒரு புறம்.
    இன்றும் எண்ணற்ற மக்களுக்கு சோறுபோடும் ஆவடி தொழிற்சாலை, திருச்சி பெல் கம்பெனி என முக்கியமானவற்றை தமிழகத்திற்கு கொண்டுவந்துவிட்டு, தேவிகுளம் பீர்மேடு மலைபகுதியை கேரளத்திற்கு கொடுத்து முப்போகம் விளையும் குமரிமாவட்டத்தை ராஜதந்திரமாய் தமிழகத்திற்கு சேர்த்தது மறுபுறம்... இப்போதுள்ள அத்தனை பெரிய அணைகள்... இன்னும் ஏராளம். (பின்னாளில் இதற்கும் சாதி சாயம் பூசபட்டது. வரலாறு தெரிந்தவருக்கு தெரியும் விருதுநகர் நாடார்கள் தென்பகுதி நாடார்களோடு அக்காலத்தில் ஒட்டுவதே இல்லை, தென்பகுதி நாடார் மக்கள் விருதுநகர் நாடார்களுக்கு தாழ்த்தபட்டவர்கள், உட்சாடி விவகாரம் இது, காமராஜர் சாதி பார்த்தார் என்பதெல்லாம் வடிகட்டிய பொய்).

    Kamaraj, The last mercy of time!

    இப்படி எல்லாம் சாதனைகளை செய்துவிட்டு அமைதியான அவர் வாழ்ந்த மாநிலத்தில்தான் இன்று மெட்ரோ ரயிலுக்கும், ஒற்றைகண் பாலத்திற்கும் விளம்பர சண்டை நடக்கின்றது, இன்னும் நடக்கும்.

    சூது அறியாத, எதிர்கட்சிகளை முடக்க தெரியாத, கட்சிக்கு அள்ளிகொடுக்கும் கறுப்பு பண முதலாளிகளை மிரட்ட தெரியாத, சினிமாவை அதன் இயல்பான நாடகமாக அப்பாவியாக எண்ணிய, பத்திரிகைகள் உண்மையை மட்டும் பேசும் என நம்பிய அந்த தலைவனை, இந்த தமிழகம் புறக்கணித்தது.

    பொய்க்கும் வஞ்சகத்திற்கும் மயங்கியது. திராவிட கட்சிகளின் பொய்க்கே இலக்கணம் எழுதும் புரட்டுக்களில் அது காமராஜரை வீழ்த்திற்று. எல்லா பிரச்சினைக்கும் காமராஜர் காரணமாம். இந்தி முதல் இதயக்கனி சுடபட்டது வரை எல்லா பிரச்சினையும் அவர்தான் என திராவிட கரம் நீண்டது.

    வாட்ச் கூட கட்டாத அவருக்கு சுவிஸில் வங்கி கணக்கு இருப்பதாக சுவிஸ் கடிகாரம் அணிந்த கரம் நீட்டி சொல்ல, ஒப்புகொண்டது தமிழகம்.

    தர்மனின் அரியணை சகுனிக்கு கிடைத்தால் என்னாகும்? அதுதான் இங்கு நடந்தது.

    அவனின் இலவச கல்வியை இவர்கள் காசாக்கினார்கள், கஞ்சி ஊற்றி கல்வி கொடுத்தவன் அவன், குழந்தைக்கும் மது கொடுப்பது இவர்கள்.

    தொழிற்சாலை எல்லாம் கொண்டுவந்தான் அவன், தொழிற்சாலைகளில் எல்லாம் சொந்த பங்கு வைத்திருப்பது இவர்கள், அணை எல்லாம் கட்டி விவசாயம் பெருக்கியன் அவன். தண்ணீர் தொட்டி கட்டிவிட்டு அது அணை என சொல்பவர்கள் இவர்கள்.

    சொன்னால் சொல்லிகொண்டே போகலாம்.

    Kamaraj, The last mercy of time!

    இந்த தேசத்தை மனமார நேசித்த, இந்த மண்ணிற்காகவே வாழ்வினை அர்பணித்த அந்த உத்தம தலைவனுக்கு இந்த தேசம் கொடுத்தது என்ன? வாழும் காலத்தில் இந்தியாவில் காந்தி, நேரு வரிசையில் வைக்கபட்டவர் அவர். நேருவிற்கு பின் கென்னடி, குருச்சேவ், காமராஜ் என உலகம் ஒரு வரிசை வைத்திருந்தது.

    ஐ.நாவின் உலக கல்வி பிரிவு அவரை உலகெல்லாம் சொல்லி சொல்லிக் கொண்டாடியது. சோவியத் ரஷ்யா உண்மையான மக்கள் போராளி என மாஸ்கோ மாளிகையில் பாராட்டு பத்திரம் வாசித்தது.

    உலகமே அவரை கொண்டாடியது, அழைக்காத நாடில்லை, வணங்காத தலைவரில்லை.

    இன்று.... சத்தியமாக அதனை சொல்லும் பொழுதே நெஞ்சம் சகிக்கவில்லை. சாதிக் கொலையாளிகளோடு அல்லது சாதிசங்க தலைவர்களுடன் அவரை ஒரே வரிசையில் வைத்து சுவரொட்டிகள் வைக்கின்றனர். சில வாழ்த்து சுவரரொட்டிகளில் அவர் சில மிருகங்களோடு நடுவில் இருக்கின்றார்.

    அவர் பாரத பிரிவினைக்கு காரணமாய் வெறுத்த மதவாதிகளுடன் இன்று பிறந்தநாள் வாழ்த்து பேனரில் அவரையும் சேர்த்து வைத்திருக்கின்றார்கள். பெரும் கவனக் குறைவுதான். காந்தியின் சீடனும், கோட்சேயின் கும்பலும் ஒரே வரிசையில் வரமுடியுமா?

    இந்திய அரசு காமராஜருக்கு ஏதாவது செய்யவிரும்பினால் இந்த மாதிரி கொலையாளிகளோடு அவர் படத்தை இணைத்து வெளியிடுவது "தேசதுரோகம்" என ஒரு சட்டத்தைக் கொண்டுவரலாம், சாதிகளையே நம்பி இருக்கும் தமிழக அரசிற்கு அது சாத்தியமில்லை.

    அவர் சாதிகளையும், மதங்களையும் கடந்த மகான் வாழ்க்கை வாழ்ந்தவர், அவரின் உயரம் பெரிது. அவர் எங்கள் சாதி என மார்தட்டுபவர்கள் கொஞ்சம் சிந்திக்கலாம், அப்படி உங்கள் சாதிக்கு அவர் என்ன செய்துவிட்டார்? அல்லது என்ன உழைத்துவிட்டார்? அந்த பள்ளிகளில் எல்லாம் உங்கள் சாதி மட்டும் படித்ததா? அல்லது அவர் கொண்டுவந்த‌ ஆலைகள் எல்லாம் உங்கள் சாதி நிரம்பி வழிந்ததா? அவரின் அமைச்சரவை எல்லாம் உங்கள் சாதிக்காரர்கள் நிரம்பி இருந்தார்களா?

    ஒரே மகனாக பெற்றெடுத்த சொந்த அன்னைக்கும், தந்தையில்லா சகோதரிக்கும் கூட ஒன்றும் செய்யாமல் போனதை போலத்தான் உங்கள் சாதிக்கும் அவர் ஒன்றும் செய்யவில்லை.

    அப்துல் ரகுமானின் கவிதை உண்டு, மரங்கள் சொல்லுமாம்

    "மனிதர்களே
    ஆயிரம் சிலுவைகளை நாங்கள் தருகிறோம்
    ஒரு யேசுவை நீங்கள் தர தயாரா?"

    அது இவர்களுக்கும் பொருந்தும், ஒரு காமராஜரை உருவாக்க உங்களால் முடியுமா? அக்கவிதையின் படி ஒரே இயேசு, தமிழ்கத்தின் படி ஒரே ஒரு காமராஜர்.

    அந்த உயரத்திலே அவரை வைத்துவிடுவோம். அந்த மாமனிதனுக்கு அந்த மரியாதையாவது கொடுப்போம்.

    சதாம் உசேனின் பெருமை ஐ.எஸ் அட்டகாசத்தில் தெரிகின்றது, கடாபியின் பெருமை சீரழிந்த லிபியாவில் அப்பட்டமாக தெரிகின்றது, ஸ்டாலினின் அருமை ரஷ்யர்களுக்கு இப்பொழுதுதான் விளங்கிற்று.

    அப்படியே சுயநல‌ கட்சிகளின் ஆட்சிகளின் தமிழகத்தின் நிலையில் காமராஜர் எப்பொழுதும் உயர மின்னிகொண்டே இருப்பார்.

    -ஸ்டான்லி ராஜன்

    English summary
    Late legendary leader Kamaraj is the last mercy of time to Tamil Nadu!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X